யாழ் நூதனசாலை

வட இலங்கையிலே இரண்டு அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றது. முதலாவது யாழ்ப்பாண அருங்காட்சியகம் இரண்டாவது வவுனியா அருங்காட்சியகமாகும். யாழ்ப்பாண அருங்காட்சியகமானது 1942 ஆம் ஆண்டு தேசிய அருங்காட்சியகச் சட்டத்திற்கமைய கொழும்பு அருங்காட்சியகம் தேசிய அருங்காட்சியகமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின் மூன்று தேசிய அருங்காட்சியகங்கள் கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் என்னும் இடங்களிலே ஸ்தாபிக்கப்பட்டது. (சில்வா 1967:1348) 1956 ஆம் ஆண்டு 2ம் குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு மந்திரிசபைத் தீர்மானத்தின் படி புதைபொருளாராட்சித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அருங்காட்சியகமானது ஆரம்பத்திலே ஆங்கிலேயர் பாணியில் அமைந்த தனியார் கட்டடம் ஒன்றிலேயே அமைக்கப்பட்டது. அக்காலப் பகுதியிலே பெரும்பாலான செயற்பாடுகள் கோட்டையை அண்டிய பிரதேசங்களிலேயே காணப்பட்டது. யாழ்ப்பாணப் பிரதேசத்திலே கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் இவ் அருங்காட்சியகத்தினை அலங்கரித்தன. அருங்காட்சியகத்திலே பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பொருட்கள் காட்சிப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் நகர மயமாக்கம் போன்றவற்றாலும் அருங்காட்சியகத்திற்கு என சொந்தமாகக் கட்டிடம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு 1972 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி கௌரவ எஸ்.எஸ்.குணதிலக அவர்களால் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 11 கூடங்களைக் கொண்ட கண்டிக் கட்டடக் கலைப்பாணியில் 1985 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதன் அமைவிடமானது நாவலர் வீதியிலுள்ள இந்து கலாச்சார மண்டபத்திற்கு பின் புறமாக அமைந்துள்ளது.

1956-1984 வரை 2ம் குறுக்குத்தெருவில் இயங்;கி வந்த அருங்காட்சியகம் 1985 ஆம் ஆண்டு இடம் மாற்றப்பட்டு அதே ஆண்டு மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இவ் அருங்காட்சியகத்தில் பொருட்கள் 8 கூடங்களிலே காணப்படுகின்றது. வரலாற்று உதயகாலம் தொடக்கம் ஆங்கிலேயர் காலம் வரையிலான பொருட்களும் மாதிரிப் பொருட்கள் திமிங்கிலத்தின் எலும்பு போன்றன தொல்பொருட் சின்னங்களாக காணப்படுகின்றன. இங்கு காணப்படும் தொல்பொருட் சின்னங்கள் பெருமளவு யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

2 ஆம் குறுக்குத்தெருவில் அருங்காட்சியகம் அமைந்திருந்த பொழுது 2 பெரிய யானைத் தந்தமும் 1 வெண்கலப் பீரங்கியும் களவாடப்பட்டுவிட்டது. இது தவிர பல தொல்பொருட் சின்னங்களும் காணாமற் போயுள்ளது. யுத்தத்தின் காரணத்தால் நாணயங்கள் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு விட்டது. இப்பொழுது 100 நாணயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
அருங்காட்சியகங்களிலே தொல்பொருட் சின்னங்களை பாதுகாப்பது மிக முக்கியமான தொன்றாகும். இங்கு காணப்படும் பொருட்களை நாளைய சந்ததியினர் பார்க்கக் கூடிய முறையிலே பாதுகாத்தல் வேண்டும். பெரும்பாலும் அருங்காட்சியகங்களிலே பாதுகாப்பதற்கான நடைமுறைகளினை மேற் கொள்கின்றனர். ஆனால் யாழ் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு முறைகள் எவையும் பின்பற்றப்படாத நிலையில் அமைந்திருக்கின்றன.

பொருட்களானது பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அவையாவன மரப்பொருட்கள் தோல் பொருட்கள் துணிப்பொருட்கள் ஆவணபொருட்கள் ஓவியம் கர்பொருட்கள் இரும்புபொருட்கள் உலோகப்பொருட்கள் வெள்ளிபொருட்கள் எலும்புபொருடகள் சங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் என பிரிக்கப்பட்டு பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொருட்களிற்கும் ஒவ்வொரு முறைகள் உள்ளன. இவற்றினை பின்பற்றுவதன் மூலம் பொருட்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.
இந்த வகையிலே யாழ் அருங்காட்சியகத்திலே பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்களினை நோக்குவோம்.இங்கு காணப்படும் கல்வெட்டுக்களானது திறந்த வெளியிலே சூரியஒளி மழை காற்று என்பன தாக்கமடையக் கூடிய இடத்திலே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இயற்கைக் காரணிகளால் இப்பொருட்கள் பகுதி பகுதியாக அழிவடைந்து பின்னர் முழுமையாக அழிவடைந்து விடும். இதனால்; அதனை உரிய முறையிலே பாதுகாப்பான இடத்தில் வைத்து காட்சிப்படுத்துவதன் மூலம் ஏனைய சந்ததியினரும் பார்க்கக் கூடிய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். கல்வெட்டுக்களானது இலக்கியங்களிற்கு ஒப்பான ஒன்றாகும். ஒரு நாட்டின் பண்பாட்டினை அல்லது வரலாற்றை பிரதிபலிக்கும் சின்னமாகும். எனவே அவற்றை மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.

1945 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பண்ணைக் கடலிலே கரை ஒதுங்கிய 45 அடி நீளம் கொண்ட திமிங்கிலத்தின் எலும்பானது வெளியிலே பாதுகாப்பு எதுவும் அற்ற நிலையிலே வைக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பதற்கு எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. அங்கு வேலை செய்யும் ஊழியர்களினை இதை ஏன் பாதுகாக்கவில்லை என வினாவிய போது அதனை ஒதுக்கி விட்டதாக கூறினார்கள். தொல்பொருட் சின்னங்கள் எவையும் ஒதுக்க முடியாது. அவற்றை மேலும் அழிந்து விடாமல் பாதுகாப்பது அவசியமானதாகும். எனவே அவற்றினை ஒரு ஒழுங்கு முறையில் முழுமையான தோற்றம் எப்படி இருக்கும் என்பதனை காட்சிக் கூடத்தில் அமைத்து பாதுகாத்தல் வேண்டும்.

அருங்காட்சியகத்தின் வாயிலின் இரு பகுதியிலும் இரண்டு டிராகிகள் துருப்பிடித்த நிலையிலே காணப்படுகின்றன.இவ் டிராக்கியானது ஒல்லாந்தர் காலத்தை சேர்ந்ததாகும். இப் டிராக்கி யாழ் கோட்டையிலே இருந்து கொண்டு வரப்பட்டது. இவற்றை நிலத்திலே வைத்துள்ளார்கள். இதுவும் ஒதுக்கப்பட்ட பொருள் எனக் கூறினார்கள். அதனால் அவற்றை மேலும் அழித்து விடாமல் அதற்கு ஏற்ற பாதுகாப்பு முறைகளினை கையாண்டு அவற்றினை மேலும் அழிந்து விடாமல் பாதுகாப்பது அவசியமானதாகும்.

யாழ் கோட்டையில் இருந்து பெறப்பட்ட கால் விலங்கு ஒன்று உள்ளது. இது மரத்தினால் செய்யப்பட்ட விலங்கு ஆகும். ஒரு விலங்கில் 3 இணைத்து விலங்கிடுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ் விலங்கானது ஒல்லாந்தர் காலத்திலே பயன்படுத்தப்பட்டது. இவ் விலங்கானது இரண்டு துண்டுகளாக உடைந்து பழுதடைந்த நிலையிலே காணப்படுகின்றது. அவற்றினை உரிய முறையிலே பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.

வண்ணார் பண்ணை கதிரேசன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட தேர்ச் சிற்பங்கள் மற்றும் தூண்கள் என்பன தூசுகள் படிந்த நிலையிலும் சிலது பழுதடைந்தும் காணப்படுகின்றன. அவற்றினை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பதன் மூலம் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

விக்டோரியா மகாராணியின் ஓவியம் யாழ் கோட்டையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இவ் ஒவியத்தினை கண்டியை சேர்ந்த ஓவியர் வரைந்ததாக கூறப்படுகின்றது. இவ் ஓவியம் ஆனது உரிய முறையிலே பாதுகாக்கப்படாமல் கிழிந்த நிலையிலும் தூசு படிந்த நிலையிலும் காணப்படுகின்றது. இதனை மேலும் அழித்து விடாமல் இதனை உரிய முறையிலே பாதுகாப்பதன் மூலம் அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இங்கு காணப்படும் 2 பல்லக்கு உரிய முறையில் பாதுகாக்கப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இப் பல்லக்கானது உடுப்பிட்டி கந்தவனக் கடவை முருகன் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும். இதனை உரிய முறையிலே செப்பனிட்டு பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியமானதாகும்.

இவ் அருங்காட்சியகத்திலே பல நூல்கள் காணப்படுகின்றன. ஆனால் எவையும் பார்வையாளர்களிற்கு பயன்படும் வண்ணம் அமைய வில்லை. அலுமாரிகளிலே பூட்டப்பட்ட நிலையிலே காணப்படுகின்றன. அதனுள் பல புத்தகங்கள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டும் பழுதடைந்தும் காணப்படுகின்றது. அதனை உரிய முறையில் பாதுகாத்து பார்வையாளர்கள் பயன்படுத்தும் முறையில் அமைத்துக் கொடுத்தல் அவசியமானதாகும்.

எனவே தொல் பொருட்களை எனிவரும் சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் பொருட்களினை உரிய முறையில் பாதுகாப்பதன் மூலம் பொருட்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். இதற்கு உரிய முறையில் பாதுகாப்பது அருங்காட்சியக பணியாளர்களின் கடமை கூட. ஆனால் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாத நிலையில் அருங்காட்சியகத்திலே தொல்பொருட்கள் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

Sharing is caring!

Add your review

12345