வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி

முதலாம் கட்டம் 1845-1959
இற்றைக்கு ஏறக்குறைய நூற்றைம்பது வருடங்களுக்கு முன் பெருமைக்குரிய திரு.குறோசற் ஐயாத்துரை என்ற பெரியார் பெருமுயற்சி மேற்கொண்டு வடமராட்சிப் பகுதியில் ஆங்கிலக்கல்வியின் அருமை கருதி 1845ம் ஆண்டிலேயே இன்றைய “வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி” வடமராட்சி மத்திய ஆங்கிலப் பாடசாலை என்ற பெயரில் ஸ்தாபித்தார். இதுவே இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆங்கிலப் பாடசாலை என்ற பெருமையையும் தட்டிக்கொண்டது. மிகச் சிறப்பான ஆங்கிலக்கல்வியை அக்கால சிரேஷ்ட கல்வியாக விளங்கிய School final வரை வழங்கிக் கொண்டிருந்த வேளை திரு.குறோசற் ஐயாத்துரை என்னும் பெரியார் வீடுவீடாகச் சென்று மாணவர்களை அழைத்து வந்து கல்வியூட்டிய தன்னலம் கருதா சேவையாளர். தான் மலேசிய செல்ல வேண்டியிருந்ததால் நீதவான் செல்லையா என மக்களால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட திருவாளர் நாகலிங்கம் கனகசிங்கம் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

இவர் வெளிநாடுகள் சென்று நிதி திரட்டி வதிரியில் உள்ள தன் சொந்தக்காணியில் “T” வடிவிலான நிரந்தரக் கட்டடத்தை 1917- 1918 ஆண்டளவில் ஸ்தாபித்தார். அத்துடன் இவர் இந்தியா சென்று சிறந்த கல்விமான்களை அழைத்து வந்து இப்பாடசாலையில் அதிபராகவும் ஆசிரியர்களாகவும் அமர்த்தினார். இப்படி அழைக்கப்பட்டவர்களில் மதிப்பிற்குரிய சுப்பிரமணியஐயர், ரீ. என். சீதாராமஐயர், ஆர். சுந்தராச்சாரியார், எம். எஸ். ராஜகோபாலாச்சாரியார், திரு. இமானுவேல், திரு. செபஸ்தியன் என்போர் குறிப்பிடத்தகவர்கள். குறிப்பாக திரு.எம்.எஸ். இராஜகோபாலாச்சாரியார் அதிபராக விளங்கிய காலத்தில் இப்பாடசாலை ஒரு பெரும் மலர்ச்சியைக் கண்டது. ஆங்கிலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று நாடறிந்த நற்கல்லூரியாக மிளிர்ந்தது.

இவர்களோடு இக் காலப்பகுதியில் அதிபர்களாக விளங்கிய திரு.யே.பி. மார்க்கண்டு, திரு. என். கிருஷ்ணபிள்ளை, திரு. கே. பொன்னுத்துரை, திருமதி. மீனாட்சி பொன்னுத்துரை, திரு. வி. தம்பிப்பிள்ளை, திரு. வி. நடராசா, ஆகியோர் காலத்திலும் பாடசாலை இடைவிடாத பெருவளர்ச்சியைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது.
இரண்டாம் கட்டம் 1960-1990
1960 இல் அரசாங்கம் சகல பாடசாலைகளையும் பொறுப்பேற்ற பின் இப்பாடசாலையும் ஒரு மந்த நிலையை அடைந்தது. 1970 இல் இப்பாடசாலை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டு ஆரம்ப வகுப்புக்களைக் கொண்ட அதன் ஆரம்பப் பிரிவாக மாற்றப்பட்டது.

1974களில் க.பொ.த(சா.த), க.பொத.த(உ.த) வகுப்புக்களும் திரு.வி. மகாலிங்கம் தலைமையில் நடாத்தப்பட்டன. 1975ம் ஆண்டளவில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கூடி தமது பகுதியில் ஓரு பெண்பாடசாலை வேண்டும் என ஒரு பொதுத்தீர்மானத்தை எடுத்து கல்வித் திணைக்களத்திடம் சமர்பித்தனர். இவ் முக்கிய விண்ணப்பத்தை திணைக்களமும் ஏற்றுக் கொண்டது. அதன் படி நெல்லியடி மத்திய மகாவித்தியாலையத்தின் மகளிர் பிரிவு வடமராட்சி மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்படவேண்டும் எனப் பணித்தது. இப் பணிப்பின் பேரில் 01-01-1976 இல் திரு. ஆ. இராஜரட்ணம் அதிபர் தலைமையில் தரம் 6-9 வரை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு மிகச் சிறப்புடன் வளர்ந்துவரும்போது அதிபர் திரு. ஆ. இராஜரட்ணம் அவர்கள் 1982இல் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய உப அதிபராக மாற்றத்தில் செல்ல திருமதி. ச. சுந்தரலிங்கம் அதிபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் கல்வி, விளையாட்டு, சங்கீதம், நடனம் முதலிய பல்வேறு துறைகளிலும் சாதனைகள் புரிந்து பாடசாலை முன்னிலையில் நின்றது. இங்கு கற்ற மாணவர்கள் மருத்துவம், கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம் ஆகிய பல் துறைகளிலும் பட்டம் பெற்று சிறந்து விளங்குகிறார்கள்.
மூன்றாம் கட்டம் 1991இன் பின்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மகளிர் பிரிவு “வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி” என்ற பெயரில் 21.10.1991 தொடக்கம் தனித்தியங்க அன்றைய யாழ் கல்விப் பணிப்பாளராகிய திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள் வழி செய்தார்கள். அன்றைய அதிபர் திருமதி ச. சுந்தரலிங்கம் அவர்களின் கட்டுப்பாட்டுடன் கூடிய சிறந்த வழிநடத்தலில் வடமராட்சியிலேயே மற்றய சிறந்த பாடசாலைகளுக்கு இணையாக துரித வளர்ச்சி கண்டது என்பது கண்கூடு. உயர்தரத்தில் கலை, வர்த்தக பிரிவுகள் வரை உள்ள “1C” பாடசாலையாக வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி தனக்கே உரிய தனித்துவத்துடன் வளர்ந்து வரும்வேளை அதிபர் திருமதி. ச. சுந்தரலிங்கம் அவர்கள் இளைப்பாற அதிபர் திருமதி வி. சுகுமாரன் அவர்கள் 1999.09.01 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்..

அதிபர் திருமதி.வி.சுகுமாரன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் “வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி” தனது தனித்துவத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு பல பௌதிக வளங்களைப் பெற்று கல்வியின் சகல துறைகளிலும் சாதனைகள் படைத்தவண்ணம் வீறு நடைபோட்டது. குறிப்பாக 2002இல் குறைந்தளவு வளமான இரு கணினிகளுடன் உயர்தர வகுப்புகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக் கற்கைநெறி சிறப்பாக நடைபெற்றது. 2009ஆம் ஆண்டில் 23கணினிகள் கொண்ட கணினி வளநிலையத்துடன், இன்று சகல மாணவர்களும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் முழுவளத்துடன் சிறப்பாக பெற்று வருகின்றார்கள். மேலும் ஒரு படி மேலாக 2009இல் “1AB” பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு க.பொ.த. உயர்தர விஞ்ஞான(கணிதம் உயிரியல்) பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கில மொழி மூல வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டதையிட்டு பெருமை அடைகிறோம். எமது கல்லூரியின் இன்றைய துரிதமான வளர்ச்சிக்கு எமது முன்னாள் அதிபர் திருமதி விஜயலட்சுமி சுகுமாரன் அவர்களின் சேவை அளப்பரியது. அவர்கள் பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக(மாணவர் அபிவிருத்தி) பதவி உயர்வு பெற்று வடமராட்சி கல்வி வலயத்தில் கடமை ஏற்றுள்ளார். 26.04.2010 இருந்து 10.01.2011 வரை எமது பிரதிஅதிபர் திருமதி நா. அனந்தேஸ்வரன் அவர்கள் அதிபர் இல்லையே என்ற குறை தெரியாது எமது கல்லூரியை சிறப்பாக வழிநடத்திவந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். 10.01.2011 இல் இருந்து திருமதி பாலராணி ஸ்ரீதரன் அவர்கள் எமது கல்லூரியன் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். எமது புதிய அதிபரின் தலைமையில் எமது கல்லூரி மேலும் பற்பல வளங்கள் பெற்று மென்மேலும் உயர்வடையும் என்பது திண்ணம்.

மேலதிக விபரங்களுக்கு : Vadamaratchy Central Ladies’s College

நன்றி :வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி இணையம்

Sharing is caring!

Add your review

12345