வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்

பிரதேச நிர்வாகமும் அதன் பின்னணியும்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்

இலங்கையில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியின் போது திசாவு, திசாவணி, என்ற பெயர்களில் இடம்பெற்ற பிரதேச நிர்வாகம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அவை மாகாண நிர்வாகமாக மாற்றமடைந்தன. 1983 இல் இலங்கை வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மத்தி என்ற அடிப்படையில் 05 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1845 இல் வடமேல் மாகாணமும் 1866 இல் ஊவா மாகாணமும் 1873 இல் வடமத்திய மாகாணமும் 1889 இல் சப்பிரகமுவ மாகாணமும் நிறுவப்பட்டன. அரசாங்க அதிபர்களே அம் மாகாணங்களுக்கு பொறுப்பாக இருந்தனர். 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் விதப்புரையின் படி 09 மாகாணங்களிலும் 19 மாவட்டங்கள் நிறுவப்பட்டன. 1955 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரச நிர்வாக மாற்றங்களின் படி அரசாங்க அதிபர் ஒவ்வொருவரது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமானது மாவட்டம் என வரையறுக்கப்பட்டது. மேலும் அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 20 ஆக வரையறுக்கப்பட்டது. 1959 இல் மொனறாகலை மாவட்டமும் 1961 இல் அம்பாறை மாவட்டமும் 1978 இல் கம்பகா, முல்லைத்தீவு மாவட்டமும், 1984 இல் கிளிநொச்சி மாவட்டமும் பதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. அதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்தது. பிரதேச செயலாளர் பிரிவும் கிராம சேவையாளர் பிரிவும் ஒரு மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த உப பிரிவுகளாகும். ஒரு மாவட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரி மாவட்டச் செயலாளரெனவும் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி பிரதேசச் செயலாளரெனவும் அழைக்கப்பட்டனர்.

பிரதேச செயலகத்தின் உருவாக்கம்

நிர்வாகத்தை மக்கள் பால் கொண்டு செல்லல் என்ற புதிய நிர்வாக சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே பிரதேசச் செயலகங்களாகும். 1992 இல் உருவாக்கப்பட்ட 58 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் மாவட்ட அரசாங்க அதிபர்களினால் கவனிக்கப்பட்டு வந்த பல கடமைப் பொறுப்புகள் பிரதேசச் செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் 01.03.1993 முதல் பிரதேச செயலகங்கள் இயங்க ஆரம்பித்த போதும் யாழ் மாவட்டத்தில் செயற்பாடுகள் காலம் தாழ்த்தியே ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் 01.06.1996 முதல் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. பிரதேச செயலகங்கள் அண்மைக் காலமாக அரசாங்கத்தின் பிரதான நிர்வாக மையமாக மாற்றமடைந்து வருவதுடன் மக்களிற்கான சேவையை கிராம மட்டத்திலேயே நிறைவு செய்யும் செயலகமாக உருவாகி வருகின்றன.

அமைவிடமும் குடிப்பரம்பலும்

யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கு புறமாக 34Km தொலைவில் அமைந்துள்ள வடமராட்சி வடக்கு பிரதேசம் 116 கிராமங்களைக் கொண்ட 35 கிராம அலுவலர்களை உள்ளடக்கிய 50.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு பிரதேசம் ஆகும். இதன் வடக்கு எல்லையாக பாக்கு நீரிணை கடலும் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடா கடலும் இதன் தெற்கு எல்லையாக வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க பிரிவு மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளும் மேற்கு எல்லையாக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன. தற்போது இச் செயலகப் பிரிவில் 14606 குடும்பங்களைச் சேர்ந்த 47687 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுள் 4076
குடும்பங்களைச் சேர்ந்த 14222 பேர்கள் இடம்பெயர்ந்தவர்களாவர். மேலும் இச் செயலக பிரிவில் பருத்தித்துறைஇ வல்வெட்டித்துறை ஆகிய இரண்டு நகர சபைகளும் பருத்தித்துறை பிரதேச சபையுமாக மூன்று உள்@ராட்சி மன்றங்களும் இயங்கி வருகின்றன.

செயலகத்தின் ஆரம்ப கால வரலாறு

ஐரோப்பியர்களாகிய போர்த்துக்கேயர், டச்சுகாரர்களின் காலணித்துவ கொள்கைகளிற்கு ஏற்ப 1630 – 1796 வரை அவர்களாலே பழைய நிர்வாக முறைகளே பின்பற்றப்பட்டன. வடமராட்சி என்ற பிரிவும் அக்காலங்களிலேயே பேணப்பட்டு வந்தது. ஆனால் நாகர் கோவிலுக்கு அப்பாலுள்ள பிரதேசம் தென்மராட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தது. மணியகாரர், உடையார், விதானை ஆகியோரால் இவை பரிபாலிக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் இத்தகைய நிர்வாக கட்டமைப்பே பேணப்பட்டு வந்தது. 1930 களில் கரவெட்டியைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி என்பவரும் 1940 களில் ஆத்தியடியைச் சேர்ந்த திரு. நாகப்பர் வேலுப்பிள்ளை என்பவரும் மணியகாரர்களாக இருந்துள்ளனர். இவர்கள் மிகவும் செல்வாக்குள்ள செல்வந்த குடும்பங்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டதுடன் தமது அலுவலகங்களை தமது வீடுகளிலேயே நடாத்தியும் வந்துள்ளனர். 1947 இல் மணியகாரன் முறை ஒழிக்கப்பட்டு பிரிவு இறைவரி உத்தியோகத்தர் அல்லது காரியதரிசி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வடமராட்சிப் பிரிவின் 1 வது காரியதரிசியாக திரு .எஸ். பெருமையினார் அவர்களும் அவரைத் தொடர்ந்து விருதோரணியசேயோன், திரு உஸ், சிதம்பரப்பிள்ளை, திரு உஸ், பர்ணலிங்கம் திரு விஸ்வநாதன், ஜே. டி ஆனோல்ட், திரு. சு. ஜெயகாந்தன் போன்றோர் இறைவரி உத்தியோகத்தர்களாக கடமையாற்றியுள்ளனர்.

வடமராட்சி வடக்கு கிழக்கு காரியாதிகாரி பிரிவு உருவாக்கம்

வடமராட்சிப் பிரதேசம் பரந்த நிலப்பரப்பையும் அதிக சனத்தொகையையும் கொண்டிருந்த காரணத்தால் பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 1960 களில் வடமராட்சி வடக்கு கிழக்கு, வடமராட்சி தெற்கு மேற்கு என இரண்டு காரியதரிசி பிரிவுகள் உருவாக்கப்பட்டன. வடமராட்சி வடக்கு கிழக்கு காரியதரிசி பிரிவு தொண்டைமானாறு முதல் தற்போதய வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் வரையிலான ஒரு நீண்ட கரையோர பிரதேசத்தைக் கொண்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1969 இல் காரியதிகாரி முறை ஒழிக்கப்பட்டு உதவி அரசாங்க அதிபர் முறை கொண்டு வரப்பட்டது. வடமராட்சி வடக்கு கிழக்கு உதவி அரசாங்க அதிபர்களாக திரு. மு. தம்பிமுத்து, திரு. க.மார்க்கண்டு, திரு வை. வேலும்மயிலும் போன்றோர் கடமையாற்றியுள்ளனர். திரு வை. வேலும்மயிலும் அவர்கள் உதவி அரசாங்க அதிபராக கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி இருந்ததுடன் இவர் ஒரு நடமாடும் செயலகமாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வடமராட்சி வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கம்

வடமராட்சி வடக்கு கிழக்கு உதவி அரசாங்க அதிபர் ஒரு நீண்ட கரையோரப் பிரதேசத்தை கொண்டிருந்தமையால் 1989 இல் வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு என இரண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவகளாக பிரிக்கப்பட்டது. வடமராட்சி வடக்கு உதவி அரசாங்க அதிபர்களாக திரு. மு. தம்பிப்பிள்ளை, திரு. S.சிறீநிவாசன், திரு. S.முருகேசம்பிள்ளை போன்றோர் கடமையாற்றியுள்ளனர். திரு. உஸ்.முருகேசம்பிள்ளை ஓய்வு பெற்ற பின்னர் செயலக காணிக் கொன்வனவுக் குழுவின் தலைவராக செயற்பட்டு செயலக காணிக் கொன்வனவுக்கு அரும்பணியாற்றியமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மாகாண சபையும் பிரதேச நிர்வாகமும்

1987 ஆம் ஆண்டில் அரசியல் யாப்பில் 13 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சட்டத்தின் கீழ் வடக்கு  கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதுடன் 1991 இல் உதவி அரசாங்க பணிமனைகளில் கடமையாற்றிய அலுவலர்கள் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டதுடன் மாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட கடமைகளை கவனிப்பதற்காக உதவி அரசாங்க அதிபர்கள் உதவி மாவட்ட ஆணையாளர்களாகவும் மாவட்ட அரசாங்க அதிபர்கள்,மாவட்ட ஆணையாளர்களாகவும் இக்காலப்பகுதிகளில் செயற்பட்டனர்.

பிரதேச செயலகத்தின் உருவாக்கம்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் 01.06.1996 முதல் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. இதன் முதலாவது பிரதேச செயலாளராக திரு. ஆ.சிவசுவாமி அவர்கள் கடமையாற்றி இருந்தார். இவர் இச் செயலகப் பிரிவில் 1994 இலிருந்து ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக கடமையாற்றியதுடன் தற்போது யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார். இவருடைய காலப்பகுதியிலேயே புதிய கட்டடத்திற்கான காணிக் கொள்வனவும் அடிக்கல் நாட்டு வைபவமும் இடம்பெற்றது. திரு. ஆ.சிவசுவாமி அவர்களைத் தொடரந்து திரு உஸ்.வசந்தகுமார் அவர்களும் அவரைத் தொடர்ந்து 25.05.2005 திரு. இ.வரதீஸ்வரன் அவர்களும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார். இவருடைய காலப்பகுதியிலேயே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகம் திறக்கப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

கடமைகள்

1) பிரதேச அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள்
2) இடம்பெயர்ந்த குடும்பங்களின் நிவாரண விநியோகம், நலன்புரி செயற்பாடுகள் மற்றும் மீள்
குடியேற்றம் தொடர்பான கடமைகள்.
3) சமூகசேவைகள் திணைக்களம் சார்ந்த சகல கடமைகளும் (சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் அடங்கலாக)
4) தேசிய அடையாள அட்டை விநியோக செயற்பாடுகள்.
5) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளலும் அவற்றை உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தலும்.
6) அரச காணிகள் தொடர்பான கடமைகள்.
7) ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பான செயற்பாடுகள்.
8) வாகன வரி அனுமதிப் பத்திரம் வழங்கல், மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஏனையகடமைகள்.
9) சுனாமி  போர் அழிவு வீடுகளின் புனர் நிர்மாணம்.
10) அரச சார்பற்ற நிறுவன வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்தலும் மேற்பார்வை செய்தலும்.
11) சமுர்த்தி நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அதன் சகல செயற்பாடுகளையும்
ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்.

மேலதிக விபரங்களுக்கு – Point pedro- DS Office

By – Shutharsan.S

நன்றி : தகவல் – இ.விக்கினேஸ்வரமூர்த்தி நிர்வாக அலுவலர். பிரதேச செயலகம், வடமராட்சி வடக்கு, பருத்தித் துறை.
மூலம் – பருத்தித்துறை பிரதேச செயலக இணையம்

Sharing is caring!

Add your review

12345