வரணி

varany | வரணியின் அமைவிடம், இந்திய உபகண்டத்திற்கு தெற்கே உள்ள இலங்கைத் திருநாட்டின் வடக்கே யாழ்ப்பாணம் அமைந்துள்ளது. அப் பிரதேசத்தில் சமய வாழ்வியலும் கல்வியும் சிறப்பாக உள்ள இடமாக தென்மராட்சி விளங்குகின்றது. தென்மராட்சியில் கொடிகாமத்திலிருந்து வடக்காக 2 கி.மீற்றர் தூரத்தில் வரணிப்பிரதேசம் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே முள்ளி கடல் நீரேரியும் கிழக்கே மிருசுவில் கழிக்கரையும் தெற்கே கொடிகாம மின்கலமும் மேற்கே கரவெட்டியும் கப்பூது கடல் நீரேரியும் சுற்றிக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் கீழ் 14 கிராமங்கள் உள்ளன.
பண்டைக் காலத்தில் இயற்கையழகும் குடியிருப்புக்களாலும் ஏனைய பிரதேசங்களை விட வர்ணிக்ககூடிய வகையில் இப்பிரதேசம் காணப்பட்டமையால் வரணி/ varany என அழைத்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் வரணி என்பது மாவிலங்கம் என்ற ஒரு மரவகை வரணி என்பதன் திரிபே வரணி / varany எனக் கொண்டு செழிப்பான பூமி என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றுள்ளது என்பார்கள். பண்டைக்காலத்தில் பல பிராமணக்குடியிருப்புக்கள் நிறைந்து வாழ்ந்தமையின் அதனடிப்படையில் “வரணி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என முன்னோர்கள் கூறுவது முக்கியமானதாகும். இன்றும் இப்பிரதேசத்தில் வெங்கிராயன், தீனிக்கிராய் தாவளம் போன்ற இடங்கள் முக்கியம் பெறுவதைக் காணலாம்.
நம்பிக்கையில் வரணிப்பிரதேச மக்கள் அக்கறையுடையவர்களாக இருந்துள்ளனர். நாவுறு பார்த்தல் மருந்து பிழிதல், பார்வை பார்த்தல் தண்ணீர் ஓதுதல் ஏக்கத்திற்கு பார்த்தல் மாந்திரீக ரீதியான மருந்து விழுத்தல்……….. போன்றவற்றை கடைப்படித்துள்ளார். இன்று பல வழக்கிழந்து சென்றாலும் பாட்டிமார் உள்ள வீடுகளில் இவை நடைபெற்று வருவதைக் காணலாம். பரிவட்டம் காணல் பல்லி விழும் பலன், தும்மல், பல்லி சொல்லும் பலன் முழுவியளம் பார்த்தல்காகம் கரைதல் மூன்றாம் பிறை பார்த்தல் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சுழ்நிலையின் பின் இன்று சகலரும்முன்னோரின் நம்பிக்கையினை ஏற்று செயற்படத் தொடங்கியுள்ளமை சிறப்பானதாகும். வரவேற்கத்தக்கது.
இவ்வாறாக நோக்கும் போது வரணி / varany வரலாற்று சிறப்புமிக்க கிராமமாகும். அத்தகு சிறப்பான புண்ணிய பூமியில் பிறந்தவர்களும் அதனை புகுந்த இடமாக கொண்டவர்களும் புண்ணியவான்களே. இவர்கள் எவ்விடத்தில் வாழ்ந்தாலும் எங்கு சென்று வசித்தாலும் வரணியின் பண்பாட்டையும் வாழ்வியலையும்நம்பிக்கைகளையும் கல்விச்சிந்தனைகளையும் பேணிப்பாதுகாப்பது அவசியமாகும். நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு………. என்ற வாக்கிற்கேற்ப வாழ்ந்து பயனடைவோம். பிறர் வாழ வழிகாட்டுவோம். என்பதனை மனதிலிருத்துவோம்.
By – Shutharsan.S
நன்றி – தகவல் மூலம் – http://www.newvarany.com இணையம்