வல்லிபுரம் செல்லத்துரை

வல்லிபுரம் செல்லத்துரை

வல்லிபுரம் செல்லத்துரை அவர்கள் அச்சுவேலி கலை பண்பாட்டு விழாவில் (21.06.2014) அச்சூர்க்குரிசில் விருது பெற்ற சான்றோன்
கைத்தொழிற்பேட்டை வீதி, அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு. வல்லிபுரம் செல்லத்துரை 27.05.1935 இல் கொல்லங்கலட்டி தெல்லிப்பழையில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கொல்லங்கலட்டி விநாயகர் வித்தியாசாலையிலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த. சாதாரணதரம் வரையான கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் பெற்றவர். 1980 ஆம் ஆண்டில் அச்சுவேலியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் புவனேஸ்வரியைத் திருமணம் செய்ததன் மூலம் அச்சுவேலி ஊரை வாழ்பதியாக்கிக் கொண்டார்.
இவரது தந்தை வழிப் பேரனாரும் தாய் வழிப் பேரனாரும் நாடகக் கலைஞர்களாக இருந்தமையே தனக்கு இசை ஆர்வம் ஏற்படப் பிரதான காரணம் என்கிறார். மாவிட்டபுரம் நாதஸ்வரமேதை சோ.உருத்திராபதியிடம் முறைப்படி இசை பயின்றார். 1950 ஆம் ஆண்டு தொடக்கம் அவரிடம் இசையைப் பயின்ற வ.செல்லத்துரை வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைகளின் ஆறு பகுதிகளிலும் சித்தியெய்தினார். தொடர்ந்து இந்தியா சென்று ரி.கே. ரங்காச்சாரியாரிடமும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1961 ஆம் ஆண்டில் ‘இசைமணி’ தேர்வில் முதற்பிரிவில் சித்தியெய்தினார்.

இவரது முதல் இசை அரங்கேற்றம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் 1962 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபர் ரி.ரி.ஜெயரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 1962 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 400 இற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை மேற்கொண்டிருக்கிறார். ஐந்தரைக் கட்டை சுருதியில் பாடக்கூடிய இசை ஞானம் இவருக்கு வாய்க்கப்பெற்றதால் கே.பி. சுந்தராம்பாள் பாடிய ‘ஞானப்பழத்தைப் பிழிந்து…” என்ற பாடலை இவர் தனது கச்சேரிகளில் பிரபலமாகப் பாடுவதுண்டு.

இதனால் ஞானப்பழத்தைப் பிழிந்து புகழ் செல்லத்துரை எனவும் அழைக்கப்படுகின்றார். மலையகத்திலும் இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் ஆசிரியப் பணியாற்றி இளைப்பாறுகை பெற்ற இவர் 1996 தொடக்கம் 2001 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையில் வாய்ப்பாட்டிற்கான வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 1976இல் நல்லை ஆதீனத்தின் அப்போதைய முதல்வரால் வழங்கப்பட்ட கானாம்ருத பூஷணம் என்ற பட்டம், 1999 இல் இலங்கை அரசின் கலாபூஷணம் விருது, 2012இல் வடமாகாண ஆளுநர் விருது எனப் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். புகழ் பெற்ற வயலின் இசை மேதை இ.இராதாகிருஷ்ணன் இவரிடம் இசைபயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி – தகவல் மூலம் www.analaiexpress.ca இணையம்

Sharing is caring!

1 review on “வல்லிபுரம் செல்லத்துரை”

Add your review

12345