வல்வெட்டித்துறை சிவன் கோவில்

இலங்கையில் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ளது. இவ்வூரின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் கோயிலாகும். இக்கோயில் திருமேனியார் மகன் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வெங்கடாசலப்பிள்ளை என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பெரியாருடைய கனவிலே சிவபெருமான் தோன்றித் தனக்கோரு கோயில் எடுக்கும் படி பணித்தார். இவர் பரம்பரையாக வந்த வயல் நிலங்களைப் பயிரிட்டுச் செல்வத்தைப் பெருக்கினார். 12 கப்பல்களை அமைத்து பட்டினத்துப் பிள்ளையார் போன்று கடல் வணிகஞ் செய்து பெரு வணிகனாகி இக்கோயிலை இந்தியாவிலிருந்து ஸ்தபதியார்களை வரவழைத்து பெரிய கோவிலாக அமைத்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆறுகாலப் பூசை நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு ராஐகோபுரம் அமைக்கப்பட்டது. கோயில் வாயில் நேர்வீதியைச் “சிவபுர வீதி” எனப் பெயரிட்டழைத்தனர். 1967ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2004ல் கோயில் முன்வீதி மடங்கள் புனரமைக்கப்பட்டன. 3 ஆம் பிரகார சுற்றுமதில், வசந்த மண்டபம் என்பனவும் அமைக்கப்பட்டன. கல்யாண மண்டபம் நீக்கப்பட்டது. குருக்கள் மடம் புதிதாக நிறுவப்பட்டது.
பங்குனி மாதத்தில் மகோற்சவம் நடைபெறும். மகோற்சவ முதற்கிரியை கோயிலின் வாம பாகத்திலுள்ள கிராம தேவதையான ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் சிவன் கோயில் மகோற்சவ குரு விசேட பூசை நடத்தி சிவனின் மகோற்சவம் இடையூறின்றி நடக்கப் பிரார்த்தனை செய்வதாகும். உற்சவங்களில் ஊறணி சமுத்திர தீர்த்தம், கல்யாணத் திருவிழா ஊடல் திருவிழா என்பன சிறப்பானவை.
இக்கோயில் ஐந்து வாயில்களைக் கொண்டது. பஞ்சலிங்கங்கள் கொண்டதாகப் பரிவார தெய்வங்களுடன் அமைந்துள்ளது. கோயிலின் எல்லைக்குள் ஆலயத்தின் வடக்குத் திசையிலும் தெற்குத் திசையிலும் பெரிய குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நூற்றாண்டு பழமையான சூரன் இக்கோயிலில் உள்ளது. இது தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. சூரன் ஆட்டும் பாங்கும் தனித்துவமானது. இங்கு மார்கழியில் நடைபெறும் ஆருத்திராதரிசனமும் அற்புதமானது.
கோயில் அமைந்திருக்கும் பகுதி “சிவபுரம்” எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரப் பெருமான் இனிதே அமர்ந்து அருளும் கோவிலாகப் புகழ் பெற்று விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகா கும்பாபிஷேக மலர் கோயில் பற்றிய தகவல்களையும் வழிபாடு பற்றிய செய்திகளையும் திரட்டித்தந்துள்ளது.

Sharing is caring!

Add your review

12345