வாரிவனம் ஸ்ரீ முத்துமாரியம்மன்

சாவகச்சேரி வாரிவனம் பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் முத்துமாரி அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள மூலஸ்தானத்துக்கு அருகில் உள்ள புளியமரத்தடியில் ஒரு சிறுகுடிசையில் இருந்து மக்களுக்கு அருள்பாலித்ததாக வரலாறு உண்டு. இதற்குச் சான்றாக இவ்வாலயத்தில் இன்றும் காணப்படும் பித்தளைக் குத்துவிளக்கொன்றிலுள்ள 1800 என்ற தமிழ் இலக்கத்தினால் பொறிக்கப்பட்ட குறிப்பினைக் கூறலாம். பின்னர் முத்துமாரி அம்மனின் அருட்கடாட்சம் கிடைக்கப் பெற்றவர்களினால் அம்மனின் துணையுடன் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம் என்பன அமைக்கப்பட்டு நித்திய நைமித்திய பூசைகள், பொங்கல்கள், பங்குனி குளிர்த்திகள் எனப்பல நிகழ்வுகள் நிகழ்ந்தன. 2000 ஆம் ஆண்டு நாட்டுப் பிரச்சினையால் தென்மராட்சி மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் 2002 ஆம் ஆண்டு மக்கள் தென்மராட்சியில் குடியேறிய போது அம்மன் ஆலயம் கர்ப்பக்கிரகம் தவிர ஏனைய மண்டபங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையைக் கண்டு மக்கள் அதிர்ச்சியும் மனக் கிலேசமும் அடைந்தனர்.

சுற்றுமதில் வந்த விதம்

அம்மன் ஆலயத்தைப் பார்த்த வைத்திலிங்கம் சிவராசா என்பவர் சீர்கெட்டிருந்த ஆலயச் சூழலை ஊர்மக்களை அழைத்து சிரமதானப்பணியினை மேற்கொண்டு நித்திய நைமித்திய பூசைகள் இடம்பெற ஒழுங்குகளை மேற்கொண்டார். அதற்கு சில காலத்தின் பின் அவருக்கு அம்மன் அருள் கிடைக்கப் பெற்றோ? என்னவோ? அம்மனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்த வேளை கோவில் தர்மகர்த்தா பரமநாதன் “கோயிலுக்கு சுற்றுமதில் போடு” என்றார். சுற்றுமதில் போடுவதாயின் 1250 அடிக்கு மேல் போடவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிய பரமநாதன் சிவராசாவிடம் “சிவா நீர் சுற்றுமதிலுக்கு அம்மன் அருளுடன்  அடிக்கல் நாட்டு. அம்மனுக்கு இராஐகோபுரம் அமைக்க வேண்டும் என்றார் சிவா. பரமநாதன் “இது முடியுமா?” தொடங்கினால் முடிக்க வேண்டும்” என்றார். அம்மனிடம் பூக்கட்டிப் பார்ப்போம்; என்ற முடிவுக்கு வந்து அம்மனிடம் விடை கேட்ட போது வெள்ளைப்பூ மலர்ந்து அவரின் எண்ணம் வீணாகாது நிறைவேற நல்லருள் புரிந்தார். உடனேயே இராஐகோபுரத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஐப்பசி மாத நன் நாளில் அடிக்கல் நாட்டு வைபவம் பரமநாதன் முன்னிலையில் இனிதே இடம்பெற்றது. கோபுர வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பரமநாதன் நோய்வாய்ப்பட்டு காலமானார். காலமான பின் அவருடைய சட்டவாதியினால் பரமநாதனுடைய காணி சிவாவின் பெயருக்கு எழுதப்பட்டது தெரியவந்தது.

எல்லாம் அம்மன் பார்ப்பா

இராஐகோபுர வேலைகள் நிறைவேறி வரும்வேளை மீண்டும் சிவாவுக்கு அம்மன் அருள்வாக்காக அடுத்த ஓர் எண்ணம் மனதில் உதயமாகியது. அதாவது அம்மன் உள்வீதி சுற்றி வில்லு மண்டபம் அமைக்க வேண்டும். அதனை அம்மன் அருளுடன் தொடர்ந்தார். அந்த வேலையை தொடர்ந்த போதுதான் அவருக்கு அம்மன் சோதனையோ என்னவோ தெரியவில்லை. பணத்தால் அல்ல வேறு வகையில் எத்தனையோ தடங்கல்கள், குழப்பங்கள், போராட்டங்கள் என வந்த வண்ணமே இருந்தன. இவர் இங்கிருந்து கொழும்பு சென்ற நேரம் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் கூட இப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இதனால் வேலையை குறையில் விட்டுவிட்டு வேலையாட்கள் தங்கள் பொருள்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நேரம் அம்மன் அருளாளர் சிவா கொழும்பிலிருந்து யாழ். வந்து வேலைக்காரர்களுடன் சென்று வேலையை தொடரச் செய்தார். இதற்காக அவர் பல பிரச்சனைகள், சிக்கல்கள், குழப்பங்களுக்கு முகம் கொடுத்தும் மனம் தளராது எல்லாவற்றையும் அம்மன் பார்த்துக்கொள்வாள் என்று கூறிக் கொண்டே வில்லுமண்டபத்தை அமைத்துவிட்டார். ஆனாலும் மகாமண்டபம் கூரையுடன் தென்படுவது பொறுக்காது அதனையும் வில்லு மண்டபம் போல் அமைக்க நினைத்தார். அதனைத் தொடரவும் பல பேரால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அம்மனின் கருணையினால் அதனையும் பூர்த்தியாக்கிவிட்டார்.

கருங்கல்லில் மூலஸ்தானம்
உண்மையில் அம்மன் அருள் என்றுதான் சொல்லவேண்டும். இத்தனையும் அதாவது சுற்றுமதில் பஞ்சதள இராஐ கோபுரம், இராஐ கோபுரத்தோடு போட்டி போட்டது போல் இருமருங்கிலும் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் வில்லுமண்டபம் அது மட்டுமா! சுற்று பிரகாரத்தில் பிள்ளையார், முருகன் வசந்தமண்டபம் கேதாரகௌரீஸ்வரி என்று எல்லா பரிவார மூர்த்தங்கள் அமைந்த பின் அம்பாள் மூலஸ்தானம் கருங்கல்லினால் அமைக்க அருளாளர் அவாக் கொண்டு அம்மனிடம் விடைபெறும் பொருட்டு பூகட்டி பார்த்த போது அம்மன் அருள் பாலித்துவிட்டார். அருளாளர் கொழும்பிலிருந்து ஒரு பகுதி கருங்கற்கற்களைக் கோவிலுக்கு அனுப்பி வைத்தார். எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்து அத்தனை பாரிய கருங்கற்களையும் கடல் வழியாக கொண்டு வந்து இரவு பகல் வேலையென வேலைகள் செய்து கட்டட சிற்பந்திகளின் முயற்சியால் வேலை பூரணமடைந்துவிட்டது.

இப்படி பல சோதனைகளில் மூழ்கி வேதனையில் நனைந்தாலும் அருளாளர் எண்ணியவை எல்லாம் அம்மனின் அருளால் தான் நிறைவேறியிருக்கவேண்டும். இவையெல்லாம் அம்மனின் புதுமைதான். அம்மன் தனது அன்பர்களில் அடியவர்களில் ஒருவராகிய அருளாளர் வைத்திலிங்கம் சிவராசா என்பவருக்கு தனது சக்தியை அள்ளிக் கொடுத்து பண்டைய சோழர்கால ஆலயம் என போற்றும் வகையில் இவ்வூரின் கண் அன்னை அருளாட்சி நடைபெறுகின்றது. இப்பொழுது சாவகச்சேரி, வாரிவனம் பதியிலே பஞ்சதள இராஐகோபுரத்துடன் முத்துமாரி அம்மன் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றாள். அத்துடன் அம்மன் அருளுடன் வெளிவீதியில் காளிஅம்மன் ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!

Add your review

12345