வித்துவசிரோமணி சி. கணேசையர்

அவர்கள் வறுத்தலைவிளான் மருதடிவிநாயகர் ஆலயத்தடியில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த மகான். பிறப்பிடம் புன்னாலைக்கட்டுவன் எனினும் அவரது வாழ்விடமாக அமைந்தது வறுத்தலைவிளானே. இலக்கண இலக்கியத் துறையில் மாபெரும் முனிவராகத் திகழ்ந்து பல பேரறிஞர்களை உருவாக்கியுள்ளார்.

ஐயரவர்கள் தொல்காப்பிய உரைகள் மீது தீவிர ஈடுபாடுகொண்டிருந்தார். கற்பிக்கும் போது ஏற்படும் ஐயங்களை குறித்து விளக்கவுரை எழுதினார். இவரது மாணவன் குரும்பசிட்டி நா.பொன்னையா அவர்கள் தனது திருமகள் அழுத்தகத்தில் தொல்காப்பிய உரைக்குறிப்புகளை பதிப்பிக்க முன்வந்தார். அவை

தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் -நச்சினார்க்கினியார் உரை 1935
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சேனாவரையர் உரை – 1938
தொல்காப்பியம் – பொருளதிகாரம் இரண்டாம் பாகம் பின்னான்கியல்களும் பேராசிரியம் – 1943
தொல்காப்பியம் – பொருளதிகாரம் முதலாம் பாகம் முன்னைந்தியல்களும் நச்சினார்க்கினியம் 1948

அவரின் பெரும் புகழுக்கு இந்நூற் பதிப்புகளே காரணமாயின. இவற்றின் சிறப்பை ஐயர் அவர்களின் தலைமாணக்கர் இலக்கண வித்தகர். பண்டிதர் இ.நமசிவாயம் பின்வருமாறு கூறியுள்ளார்.

தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு ஐயரவர்களின் குறிப்புக்கள் மரக்கலம்போல உதவுவன. இது ஐயர்தொண்டுகளில் மிக உயர்ந்தது.” தமிழகத்தின் மிகச்சிறந்த பதிப்பாசிரியர் டாக்டர் உ.வே சாமிநாதையர் அவர்கள் கணேசையரின் பெருமையை

“நூலிலே அன்புவைத்து அதன் பாலுள்ள விஷயங்களை வெளிப்படுத்துதலையே தனி இன்பமாகக் கொண்டு பலகாலம் ஆராய்ந்து பதிப்பிக்கும் முயற்சியுடையார் சிலருள் ஐயர் ஒருவர்”

இவர் மேகதூதக்காரிகை உரை 1925 அகநானூறு (1-100) உரை, ‘நாணிக்கண் புதைத்தல்’ என்ற ஒரு துறைக் கோரிக்கைப் புதிதுரை முதலியவற்றையும் எழுதியுள்ளார். அத்துடன் ஈழத்துதமிழ்ப் புலவர் வரலாறுகளை “ஈழநாட்டுத்தமிழ்ப்புலவர் சரிதம்” என்ற தனிப்பெருநூலாக வெளியிட்டுள்ளார். ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு முன்னோடியாக அமைந்தது இது எனலாம்.

யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் எழுந்த அரசகேசரியின் இரகுவம்சத்திற்கு 1915 இல் மிகவிரிவான உரையை எழுதிவெளியிட்டுள்ளார்.
மாணவர்க்கேற்ற உரைநடைநூலாக ‘குசேலர் சரிதம்
என்ற நூலையும், 1966 குமாரசுவாமிப்புலவர் சரித்திரம் 1925 என்ற நூலையும் எழுதியுள்ளார்.

முறையவரான இப்பேரறிஞர் நிறைந்த பக்தி உடையவர். வறுத்தலவிளான் மருதடி விநாயகர் மீது பக்தியை வெளிப்படுத்தும் வகையில் இருபா இருபஃது, அந்தாதி, கலிவெண்பா, கலிநிறைத்துறை, ஊஞ்சல் முதலிய பலவகைப் பிரபந்தங்களையும் பாடியுள்ளார்.

இவரது இலக்கணக்கட்டுரைகள் விமரிசனக்கட்டுரைகள் பல தமிழ்நாட்டு “செந்தமிழ்” பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

மாணவருக்கு தொண்டு அடிப்படையில் கற்பித்தல், ஆராய்ச்சிக்கட்டுரைகள் வரைதல், சிறுவர்களுக்கான எளியநடை நூல்கள் எழுதுதல், இலக்கியவாழ்க்கை வரலாற்றுநூல் யாத்தல், தொல்லிலக்கியங்களுக்கு உரைவகுத்தல், இலக்கண நூல்களை உரைவிளக்கக் குறிப்பேடு பதித்தல், செய்யுள் இலக்கியம் படைத்தல் முதலாம் கல்வித் தொண்டில் தன்னிகரில்லாத் தமிழ்ப்பேரறிஞராக விளங்கியுள்ளார்.

Sharing is caring!

Add your review

12345