வியாபாரிமூலை இன்பர்சிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் (கற்பூர விநாயகர்)

அகன்று பரந்த பரப்பில் அமைந்த ஆண்டவனை அகங்குளிரக் காணும் அமைதி பொருந்திய அகமே ஆலயம். பசுவின் உடலெங்கும் பரந்த இரத்த அம்சம் முலையினூடாக பாலாக வெளிப்படுவதைப் போல இப்பாரெங்கும் பரந்துள்ள பரம்பொருள் ஆலயத்தின் வாயிலாக ஆன்மாக்களுக்குத் தென்படுகின்றார். ஆக ஆலயத்திற்கு அதன் அமைப்பிற்கு ஆன்மீகத்தில் முக்கிய பங்குண்டு.
இந்தவகையில் எமது திருநாட்டின் கல்விக்கடலின் கரையாக விளங்கும் வடமராட்சி எனும் புண்ணிய பூமியில் வயற்கடல் சூழ்ந்த எழிலும் வனப்பும் மிகுந்த தலமாக கற்பூர விநாயகர் ஆலயம் மிளிர்கின்றது. வயல்களுக்கு மத்தியில் அமைந்த ஆலயம் இயற்கையிலேயே சோலையாக பார்ப்போரைப் பரவசப்படுத்துகின்றது.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும் கற்பூர விநாயகரின் தோற்றத்தை ஒருகணம் நினைத்துப் பார்க்கையில் இங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சி நடைபெற்ற காலம் அது, 1765 ஆம் ஆண்டு. இக்காலப்பகுதி விநாயகப் பெருமானின் அருட்பிரவாகம் வெளிப்பட்ட காலமாகத் திகழ்கின்றது. உயர்ப்புக் கலட்டி என அறியப்பட்ட இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் பெரியார் ஒருவர் தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். ஏற்கனவே அழிந்துபோன ஆலயத்தின் எச்சங்கள் ஒருபுறம் காணப்படுகின்றன. அந்நேரம் ஆச்சரியம் மேலிட ஒரு நிகழ்வு நடந்தது. ஒல்லாந்த அதிகாரி ஒருவர் குதிரையில் டாம்பீக உலாவாக அவ்வழி வரும்வேளை பெரியார் தியானத்தில் அமர்ந்திருந்த ஆலமரத்தின் உயர்ந்த கொப்பில் சோடிப்புறா இருக்கக் கண்டார். அதிகாரியின் துப்பாக்கிக்கோ ஆணவப்பசி. குதிரையிலிருந்தவாறே புறாவைக் குறிபார்த்து சுட்டார். விரைந்தது குண்டு, ஆனால் புறாக்கள் அசையாது இருந்தன. ஆச்சரியத்துடன் பயம் கொண்ட அநத ஒல்லாந்த அதிகாரி குதிரையிலிருந்து குதித்து ஆலமரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்த நீலக்குட்டியார் அருகில் சென்றார். காரணம் கேட்டு கை கட்டி நின்றார் அதிகாரி. நீலக்குட்டியாரோ தனது மொழித்திறனால் அழிந்த ஆலயத்தின் வரலாற்றைக் கூறி விநாயகரின் பெருமையை எடுத்துரைத்தார். பெருமானின் பெருமைதனை அனுபவரீதியாக உணர்ந்த ஒல்லாந்த அதிகாரி விநாயகப் பெருமானுக்கு ஆலயம் அமைத்திட அனுமதி கொடுத்து விநாயகப் பெருமானின் திருவருளுக்கு பாத்திரமானார்.
இந் நிகழ்வின் பின்னர் நீலக்குட்டியாரின் முயற்சியால் ஆலயம் தோற்றம் பெற்றது. இவ் ஆலயத்திற்கு விக்கிரகம் தேவைப்படவே செய்வதறியாது நிற்கும் வேளையில் நல்லூர் நாயன்மார்க்கட்டு எனும் இடத்தில் அவ் ஊர்ப் பெரியார் ஒருவர் குளம் வெட்டிய வேளை வெட்டிய இடத்தில் குருதி பாய்வதைக் கண்ட வேலையாட்கள் குளம் வெட்டுவதை நிறுத்தி த்முடைய இடத்திற்கு  சென்றனர். பின்னர் இரவு குளம் வெட்டிய பெரியாரின் கனவில் பெருமான் தோன்றி இவ்விடத்திலிருந்து வருவோரிடம் தம்மை ஒப்படைக்கும் படியும்இ அவ்வாறே இவரிடமும் எம்மை அங்கிருந்து அழைத்து வந்து வழிபடும் படியும் திருவாக்கருளினார். அவ்வாறே செய்யப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டையின் பின்னர் ஞானியார் என்பவர் நித்திய வழிபாடுகளை இயற்றி வந்தார்.
இவ்வாறு வழிபாடாற்றி வரும் வேளையில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் ஏனைய பொருட்களைப்போல கற்பூரத்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படவே ஞானியார் உள்ளம் நலிந்தார். பெருமான் ஞானியார் கனவினில் தோன்றி இங்குள்ள ஆலமரத்தடியில் குறித்த இடத்தில் தோண்டினால் பச்சைக்கற்பூரம் கிடைக்கும் என்றும் தேவையானதை எடுத்து ஆராதனை செய்வாயாக என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு கற்பூரம் விளைவித்து அற்புதம் நிகழ்த்தியமையால் ” கற்பூர விநாயகர் ” என நாமம் வரலாயிற்று.
இதன் பிற்பாடு வேதாரணியத்திலிருந்து இலங்கைக்கு வந்திருந்த சைவாச்சாரியார் ஒருவர் வழிபாட்டுக்கு நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் பரம்மரையினர் முப்பொழுதும் திருமேனி தீண்டி தொண்டாற்றி வருகின்றனர். தலவிருட்சமாக விளங்கிய ஆலமரம் மறையவே அவ் விடத்தில் தோன்றிய தற்போதுள்ள புன்னை மரம் தலவிருட்சமாக வளர்ந்து சிறப்புற்று இருக்கின்றது. இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தச் சிறப்போடு அருள் தந்து ஆட்சிபுரியும் ஆனைமுகனுக்கு ஆவணிமாதம் பூரணை நாளை அந்தமாக் கொண்ட பத்து தினங்கள் பிரம்மோற்சவம் சிறப்புற நடைபெற்று வருகின்றது.
கடல்வளமான நெய்தல் நிலமும் மருத நிலமும் பனை வளமும் சார்ந்த இயற்கை வனப்பின் நடுவே அருள்பாலித்து எழிலுற காட்சி தருகின்றார் கற்பூரவிநாயகர்.
நன்றி – வியாபாரிமூலை இணையம்
மேலதிக விபரங்களுக்கு

Viyaparimoolai web

Sharing is caring!

Add your review

12345