வல்லிபுர ஆழ்வார் ஆலயம்

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக வல்லிபுர ஆழ்வார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் தொன்மைபற்றி யாழ்ப்பாண வரலாற்று மூலநூல்கள் தெரிவிக்கும், கற்கோவளத்தில் வாழும் மீனவர்களுக்கு வல்லிபுரக் கோவில் நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது. புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்த உற்சவம் கற்கோவளத்தில் உள்ளவர்களிலாலேயே இன்றும் நடாத்தப்படுகின்றது. வடமராட்சி மக்கள் மட்டுமன்றி யாழ்ப்பாணத்து மக்களாலும் வழிபடப்பட்டு வரும் முக்கிய தலமாக அமைந்துள்ளது. இத்திருத் தலத்தின் மகிமையானது இதன் அருகில் அமைந்துள்ள சமாதியால் பெருமை பெறும்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இலங்கையில் வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.

இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.

வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.

ஆலய வரலாறு :

பருத்தித்துறை, புலோலியில் “வராத்துப் பழை” என்கின்ற சிறிய கிராமம் உண்டு. இக்கிராமத்தில் கண்ணனையே அனுதினம் பூஜித்து வந்தார் வல்லிநாச்சியார் எனும் மாதரசியாவார். இவருக்கு குழந்தைச் செல்வம் இன்மையால் ஸ்ரீ நாரயண மூர்த்தியிடம் தமது குறையை நீங்க வேண்டுமென அழுது வேண்டினார். கேட்டவர்க்கு வரம்தரும்; வள்ளல் மாயவன், அவர் கனவில் தோன்றி “ நீ, உடனே கற்கோவளம் கடற்கரைக்கு வா” எனக்கூறி அருள, அம்மையாரும் அவ்வண்ணம் அங்கே சென்றார்.

என்னே! ஆச்சரியம், கடலில் அலை நடுவே மச்ச உருவில் (மீன்) துள்ளிவிளையாடிய கண்ணன், பின்னர் குழந்தையாகி, அம்மையாரின் மடியில் விழுந்து தவழ்ந்து நின்றார். சுற்றி நின்ற மக்கள் பரவச நிலை எய்தினர். அப்போதுதான் ஒரு புதுமை நிகழ்ந்தது. கண்ணன் திடீரென ஸ்ரீ சக்கர வடிவம் கொண்டான்.

பின்னர் அனைவருமே வல்லிநாச்சியாரின் கருத்திற்கேற்ப ஸ்ரீ சக்கரத்தைப் பல்லக்கில் ஏற்றி ஊருக்குக் கொண்டு செல்லலாயினர். வழியில் தாகசாந்திக்கு என அடியார்கள் பல்லக்கை இறக்கி நீர் அருந்தி முடிந்ததும், மீண்டும் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. ஸ்ரீ சக்கரம் அங்கேயே நிலையாய் இருந்து விட்டது. அந்த இடமே தற்போது கோயில் கொண்ட ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக் கோவிலும் ஆகும்.

இன்று காண்போர் வியக்கும் வண்ணம் மிகப்பெரிய இராஜகோபுரம், மூன்று பெரும் வீதிகளுடனும், மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட சிறப்பினை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் கொண்டுள்ளமை கண்ணனின் அருள் மழையில் நனைந்து, நினைந்துருகும் அடியவர்களின் பக்தியினாலேயோகும்.

வல்லிபுர ஆழ்வார் தோன்றி காட்சி கொடுத்தமையினால் கோவில் அருகே சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தே உள்ள சமுத்திரத்தில் தான் சமுத்திர தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அன்றைய தினம் திரளும் பக்தர்கள் தொகை, வேறெங்கும் காணாத வியக்க வைக்கும் காட்சியேயாகும்.

புலோலியூர் தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார் அவர்கள், கோவிலைச் சூழவுள்ள மணல் மேடுகள், அருகேயுள்ள பழைமை வாய்ந்த இடிபாடுகளுடன் கூடிய கற்கள், கண்டு எடுத்த சான்றுப் பொருட்களைக் கொண்டு மணிமேகலையில் கூறப்பட்ட “மணிபல்லவம்” எனும் இடம் இதுவாக இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார். கற்கோவளம் கடற்கரையோரத்தினை அண்டிய பகுதியே சிங்கை நகர் எனும் இராஜதானி அமைந்திருந்ததாக வரலாற்றியலாளர்களும், தமது ஆய்வு மூலம் சொல்கின்றனர்.

திருவிழா :

இக்கோவில் மூலஸ்தானத்தில் சக்கரமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலின் பரிவார மூர்த்திகளாக விநாயகப் பெருமான், நாகதம்பிரான், நாச்சிமார் ஆகியோர் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றனர். புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திரு விழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். 

இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும். இவ்வாறு இறைவன் ஒருவனே என்ற கருத்தின் அடி நாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை வெளிப்படுத்தும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு விபூதியும் திருநாமமும் பிரசாதமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆலமரம், அழகிய குளம், நெல் வயல்கள் என இயற்கையின் அரவணைப்பில் உள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.

வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குரிய நிலத்தில் பழைய கட்டிடத்தின் அழிபாடுகளுக்கிடையில் 1936 ஆம் ஆண்டளவில் வல்லிபுரப் பொன்னேட்டுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது.4 வரிகளைக் கொண்ட இச்சாசனம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பியகுக என இடம் தற்காலத்திலுள்ள புங்குடுதீவுடன் அடையாளம் காணப்படுகிறது. எனவே வல்லிபுர பிரதேசமும் ஆழ்வார் கோவிலும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்குரிய இடமாகக் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர்கள் மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு செல்பவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபட எண்ணுவார்கள் என்பதுவும் இக்கோவிலுக்கு பெருமை சேர்க்கக் கூடிய விடயமாகும

Sharing is caring!

1 review on “வல்லிபுர ஆழ்வார் ஆலயம்”

  1. Maathu says:

    வல்லிபுர ஆ ழ்வாரின் அருளானது யாழ்ப்பாண மக்களுக்கு கிடைக்கின்றது அது தொடர்ந்தும் கிடைக்க வேண்டும்

Add your review

12345