அச்சுவேலி

இந்து சமுத்திரத்தின் சொர்க்க புரியாகிய ஈழத்திரு நாட்டின் தனித்தமிழர் தாயகமாய்த் தனிச் சிறப்புப் பெற்ற திடல் யாழ் பூமி. கடல் அலைகள் தாலாட்டக் களிப்புடனும் வனப்புடனும் வாழ்ந்திருந்த யாழ்ப்பாணமும் அதன் கண் அமைந்துள்ள கிராமங்களும் யுத்த அரக்கனின் கரங்களில் சிக்குண்டு சின்னா பின்னமாகிச் சிதிலமடைந்த கதை உலகறியும். யாழ் மண்ணின் ஒவ்வொரு கிராமமும் தன்நிறைவு பெற்று வாழ்ந்ததெனில் அது மிகையாகாது. பெயர்பெற்று, புகழ்பரப்பிப் பெருமையுடன் வாழ்ந்த கிராமங்களில் அச்சுவேலி என்பதும் ஒன்று என்பது யாவரும் அறிந்த உண்மை.

அச்சுவேலி – காரணப்பெயர்

அச்சுவேலி என்னும் எழில் கொண்ட கிராமம் முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேனெடுத்து எத்திசையும் புகழ் பரப்பி, மறை பரப்பி, எழில் கொண்டு கலைமகளும் திருமகளும் கலந்து உறைந்த செம்மண் பூமி. அச்சுவேலி ஒரு காரணப் பெயர் என்று சொல்பவர்களுமுண்டு. அதாவது யாழ்நகரில் இருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் பெருந்தெரு அச்சுவேலியை மையமாகக் கொண்டே செல்கின்றது. இதனால் யாழ்ப்பாணத்தையும் பருத்தித்துறையையும் இணைக்கும் வண்டிச்சக்கர அச்சுப்போல் இக்கிராமம் இருந்து “அச்சுவேலி” என நாமகரணம் பெற்றதென்பது ஒரு வரலாறு.
அச்சுவேலிச்சந்தி ஒரு முச்சந்தி. முச்சந்தியில் இருந்து வீதிகள் பிரதான இடங்களை நோக்கிச் செல்கின்றன. ஒன்று புத்தூர், நீர்வேலி, கோப்பாய் ஊடாகச் சென்று யாழ்நகரை அடைகிறது. அது அச்சுவேலி யாழ்ப்பாண பிரதான வீதி, மற்றது தோப்பு ஊடாகச் சென்று யாழ் நகரை அடையும் இராச வீதி, பருத்தித்துறையை அடைகிறது. வல்வெட்டித்துறைக் கடற்கரை ஊடாக, நெல்லியடி தரைப்பகுதி வழியாக, இப்படியாகப் பல வீதிகள் பருத்தித்துறையை அடைகின்றன.
வல்வெட்டித்துறை வழியாகப் பருத்தித்துறை செல்லும் வீதிக்குச் தனிச்சிறப்புண்டு. தொண்டமானாறு செல்வச் சந்நிதியான் திருத்தல தரிசனம் காணும் பாக்கியம் தான் அது. அந்தக் கடற்கரையும் அண்டியுள்ள தென்னம் தோப்புகளும் இயற்கை எழில் கொஞ்சும் இணையற்ற காட்சி.

Sharing is caring!