அருணாசல உடையார்

அளவெட்டிக் கிராமத்துக்கு மட்டுமல்லாமல் அயற்க்கிராமங்களுக்கும் கல்விக் கண் கொடுத்த பெரியார் அருணாசல உடையாரெனின் அது மிகையாகாது. உடையார் உத்தியோகம் வகித்ததோடு பெரும் பிரபுவுமாக இருந்தவர். ஆங்கிலக் கல்வி பெறுவதற்காக அளவெட்டிச் சிறுவர்கள் எட்டுப்பத்து மைல் தூரம் நடந்து போய் நடந்து வருவதைக் கண்டார் அருணாசலவுடையார். இக்குறையை எப்படி போக்கலாம். என்று அவர் சிந்தித்திருக்கும் வேளையில் ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணத்துப் பணம் படைத்த பெரியோர்களுக்கு விடுத்த அழைப்பொன்று ஞாபகத்துக்கு வந்தது.

ஆறுமுகநாவலர் பணம் படைத்தவர்களைப் பாடசாலைகளை அமைத்துக் கொடுக்குமாறு விடுத்த அறைகூவலே அது அதனால் பாடசாலை அமைக்கும் பணியில் அருணாசல உடையார் முன்வந்தார். ஒன்றல்ல இரண்டு பாடசாலைகளை ஒரே நாளிலே தொடக்கக்கூடிய ஆற்றல் அவருக்கிருந்தது. 1894ம் ஆண்டு ஒரு நன்முகூர்த்தவேளையில் இரு பாடசாலைகளுக்கும் அத்திவாரமிடப்பட்டது. ஒன்று அளவெட்டி ஆண்கள் ஆங்கில பாடசாலை. மற்றையது தமிழ்ப் பாடசாலை. ஆங்கிலப் பாடசாலை தடுக்கிலே கிடந்து தவழ்ந்து நடந்து வளர்ந்து இன்று அருணோதயாக் கல்லூரியாகப் புகழேந்திப் பரப்பி நிற்கின்றது. மற்றது நாகபூசணி வித்தியாலயமாக மலர்ந்து இன்று அருணாசலம் வித்தியாசாலையாக நல்லார் மனமெலாம் கலந்து நிற்கிறது.
அருணாசல உடையார், அளவெட்டி ஆங்கிலப் பாடசாலையில் முன்னர் கற்பித்தவரும் மலையாளம் புகையிலை வியாபார ஐக்கிய சங்கமுகாமையாளராக இருந்தவருமாகிய சுப்பையா அவர்களின் தந்தையாவார். சுப்பையா அவர்களின் மகன் சிவசுப்பிரமணியம் அவர்கள் அருணோதயாக் கல்லூரியின் அதிபராகவும் அக்கல்லூரியின் முகாமையாளருமாகவும் இருந்தவர். பாடசாலைகளை அரசினர் பொறுபேற்கு முன்னரே அருணோதயாக் கல்லூரியை அரசினர் பாடசாலையாக்க விரும்பிய பெருந்தகையாளர் சிவசுப்பிரமணியம் அவர்கள். அருணாசல உடையாரது கைவண்ணமே இப்பாடசாலைகள் இரண்டும் அருணாசல உடையாரை நாமஞ் செய்தே அமைத்துக் கொண்டுள்ளன. ஒன்று அருணாசலம் வித்தியாசாலை என அவர் பெயர் தாங்கி நிற்கிறது. மற்றையது அருணோதயாக் கல்லூரி என அவர் பெயரை மறைமுகமாக வெளிப்படுத்தி நிற்கிறது. அருணோதயாக்கல்லூரி என்பதை ஆங்கிலத்தில் அருணோதயக் கல்லூரி என்பர். இங்கு அருணசல உடையார் கல்லூரி என அவர் பெயர் மறைமுகமாகச் சுட்டப்படுவது காணலாம்.
அருணாசல உடையாரின் பரோபகாரச் செயலினால் அளவெட்டிக் கிராமத்தின் அறிவுப்பசி தீர்த்ததோடு அதன் அயற்கிராமங்களாய மல்லாகம், சண்டிலிப்பாய், விளான் முதலாய கிராமச்சிறுவர்களும் பெரும்பயனுற்றனர் என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். அருணோதயக் கல்லூரியை உகந்த நிலைக்கு கொண்டு வந்த இருவர் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஒருவர் அளவெட்டி ஆண்கள் பாடசாலை என்ற பெயரோடு இருந்த போது தலமையாசிரியராக இருந்த சின்னத்தம்பி (கணபதிப்பிள்ளை) ஆசிரியராவார். மற்றையவர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி எனும் தரத்துக்குயர்த்திய சிதம்பரப்பிள்ளை (பொன்னையா) ஆசிரியராவர். இவர்கள் இப்பாடசாலை வளர்ச்சி பெற காரணர் ஆக இருந்தாலும் அணோதயாக் கல்லூரியை நினைக்கும் போது அதனோடு தொடர்புபட்ட அனைவர் உள்ளத்திலும் தோன்றுபவர் அருணாசல உடையாரேயாவர். அருணோதயாக்கல்லூரியும் அருணாசலம் வித்தியாலயமும் உள்ளவரை அருணாசல உடையார் மக்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டேயிருப்பார் என்பதில் ஐயமில்லை.
இன்றும் சிலர் அருணோதயாக் கல்லூரியை உடையாற்றைப் பள்ளிக்கூடம் என்றேயழைத்து அருணாசல உடையாரை ஞாபகம் செய்து வருவது காணத்தகும். வேறு சிலர் இதனைச் செட்டியாற்றை பள்ளிக்கூடம் என்று சொல்வதும் உண்டு சின்னத்தம்பிச் செட்டியார் என்பவர் இப்போதைய அருணோதயாக் கல்லூரி அளவெட்டி ஆண்கள் ஆங்கில பாடசாலையாக இருந்த போது அதன் தலைமை ஆசிரியராகவும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தவர். அவர் அப்பாடசாலை வளர்ச்சிக்குச் செய்த சேவையும் மக்கள் பல்லாண்டு காலம் மறக்க முடியாதிருந்ததற்கு சான்றாகும். அவர் பாடசாலை நேரத்தில் கற்பிப்பதன்றி மாணவர்களை வாராந்த ஓய்வு நாள்கள், விடுமுறை நாள்கள் என்பவற்றிலும் கற்பிப்பவரெனச் சென்ற தலைமுறைச் சேர்ந்த மக்கள் கூறக்கேட்டுள்ளோம்.
இங்கு கல்வி கற்றவர்கள் பலர் மலேசியா, பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்று பொருளீட்டினர். இந்நாட்டிலே அரசினர் உத்தியோகம் வகித்தவர் பலர். பலர் பட்டதாரிகளாகவும் தமிழ் அறிஞர்களாகவும் பொறியியலாளராகவும் மருத்துவ கலாநிதிகளாகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடமையாற்றுகின்றனர். சிந்தனைச் செல்வர் கைலாசபதி அவர்களும் துறவி மார்க்கம் பூண்டு பிரணவானந்த சரஸ்வதியெனத் தீட்சாநாமம் பெற்ற பெரியாரும் அருணோதயாவிற் கற்றவர்களே. அருணோதயா நீண்ட ஆலவிருட்சம் போல ஓங்கி வளர்ந்ததற்கு அத்திவாரமிட்டவர் அருணாலசல உடையாரேயாதலால் அவரே புகழுக்குரியவர் அவர் புகழ் நீண்டு நிலைத்து ஓங்குவதாக.

நன்றி- அளவெட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345