அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் (முனீஸ்வரர் ஆலயம்)

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி அளவில் இக் கோவில் வல்லிபுரம் அருணாசலத்தாரால் காசியில் இருந்து பெறப்பட்ட ஒரு இலிங்கம் ஓலைக்கொட்டில் ஒன்றில் வைத்து வழிபடப்பட்டு வந்தது.  இவ் அருணாசலப் பெரியார் சோதிடம், குறி, கைரேகை, அருள்வாக்கு கூறுவதில் நிபுணர்.  இதனால் அவர் பெயர் யாழ் குடாநாட்டில் பிரபலமடைந்திருந்தது.  இவர் ஊர் ஊராகச் சென்று இத்தெய்வீகச் சேவையை எதுவித பிரதிபலனும் கருதாமற் செய்து வந்தார்.  இவர் ஒருமுறை மல்லாகம், அளவைட்டிப் பக்கம் சென்றபோது இவரின் தெய்வீகத் தன்மையை அறிந்த ஓர் கிறீஸ்தவச் செல்வந்தர் (இவரின் பெயர் அறிய முடியவில்லை) தனக்குப் பத்து வருடங்களாகப் பிள்ளைச் செல்வம் கிடைக்கவில்லை என்றும் பிள்ளைப்பலன் தமக்கு உண்டா? என்றும் வினயமாக வினாவினார்.  அவரின் முகத்தைச் சிறிது நேரம் உற்றுநோக்கிய பின்

“உமது தந்தையார் ஒரு இந்து அல்லவா? நீர் அரச பதவிக்காகவல்லவா கிறீஸ்தவ சமயத்திற்கு மாறினீர்?  நான் தரும் விபூதியை அணிந்து வந்தால் வெகுவிரைவில் ஓர் ஆண் மகவு கிடைக்கும்”

என்று கூறித் தன் சம்புடத்திலிருந்து விபூதியை எடுத்துக் கணவன், மனைவி இருவரிடமும் கொடுத்தார்.  அதை அவர்கள் பயபக்தியுடன் வாங்கித் தம் நெற்றியில் பதித்தனர்.

இந் நிகழ்ச்சி நடந்து ஒரு வருடத்தின்பின் அச் செல்வந்தர் இடைக்காட்டிற்கு  மாட்டுவண்டியில் வந்து காசிவிசுவநாதரையும், அருணாசலப் பெரியாரையும் வணங்கி தமக்கு ஒரு ஆண்மகவு பிறந்ததாகக் கூறி, இக்கோவிலின் திருப்பணிக்காகப் பெருந்தொகை நிதியையும் கொடுத்தனர்.  அப்பணத்தைப் பெற்ற அருணாசலப் பெரியார் உடன் சுண்ணாம்பால் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், என்பவற்றை நிறுவி காசிவிசுவநாதப் பெருமானை ஒரு பெரிய ஆவுடையாரில் பிரதிஷ்டை செய்து வெகு விமரிசையாக மகாகும்பாபிஷேகம் நடத்தினார்.  அருணாசலப் பெரியார் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் செல்வச்சந்நிதி முருகன் தலம் சென்று அங்குவரும் அடியார்களுக்கு அருளாசியும், வாக்கும் கூறி வந்தார்.  தமது 80ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.  அதன்பின் அவர் மகன் அ. வல்லிபுரம் இத் திருத்தலத்தை நிருவகித்தும் பூசித்தும் வந்தார்.  அதன் பின் க. அருணாசலம் அச்சேவையைப் பின்தொடர்ந்தார்.  அவர் ஒரு அரசாங்க ஊழியராக இருந்தமையால் இடமாற்றலாகச் செல்லவேண்டிய கட்டத்தில் அந்தணர் மூலம் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.  இராணுவ அத்துமீறல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து மீள்குடி ஏறிய பின் அயலில் உள்ளவர்கள் இத்தலத்தை பராமரித்தும், பூசித்தும் வருகின்றனர்.  அச்சுவேலிக்கோவில் பற்றில் இதுவே முதற் புராதன சிவன் ஆலயமாகும்.  இத்தலத்தின் வடபால் அமைந்துள்ள நல்நீரூற்றுக்குளமும், ஆவுரிஞ்சிக்கல்லும், அரசமரங்களும் புராதனமானவை.

அயலிலுள்ள புற்று தரவைகளில் மேய்ந்த மந்தைகள் வந்து இக்குளத்தில் நீர் அருந்தி ஆவுரிஞ்சிக் கல்லில் தமது உடலை உரஞ்சித்தினவு நீக்கி மரநிழலில் படுத்துச் செல்லும்.  இவ் அமைப்பு எமது அக்கால மக்களின் ஜீவகாருண்ணியத்தைப் பறைசாற்றுவதாகும்.  திருவெம்பாவைப் பூசைகளும், ஆனி உத்தர விழாவும் இத் தலத்தில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.  இக்கோயிலின் வடகிழக்குத் திசையில் 1980இல் ஒரு நல் நீர்கிணறு ஓர் அன்பரால் வெட்டிக் கட்டப்பட்டது.  1985ஆம் ஆண்டு நிருத்த மண்டபம் சூறையாடப்பட்டது.  இற்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பால் கட்டப்பட்ட இத்திருத்தலம் உடைந்து விழக்கூடிய மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.  வெகு விரைவில் புணருத்தாரணம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

Sharing is caring!

Add your review

12345