ஆரையூர்த் தாமரை

ஆரையூர்த் தாமரை

1.03.1978 அன்று செல்லத்தம்பி தவமணிதேவி தம்பதியின் புதல்வியாகப் பிறந்த தாமரைச்செல்வி அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயம் மற்றும் இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் பயின்றார்.

தனது அம்மம்மா பொன்னர் தங்கப்பிள்ளை அவர்களின் நாட்டுக்கவி கேட்டுத் தனக்கும் கவிதையில் நாட்டமேற்பட்டதாகக் கூறும் இவர் தினமுரசு பத்திரிகையில் 4 வரிக் கவிதை ஒன்றின் மூலம் கவிதை இலக்கியத் துறையில் நுழைந்தது மட்டுமின்றி அக்கவிதைக்காக ரூபா.100 ஐப் பணப்பரிசாகவும் பெற்றிருந்தார். புரவலர் புத்தகப் பூங்காவின் 23 வது வெளியீடான ”விற்பனைக்கு ஒரு கற்பனை” எனும் இவரின் கவிதைத் தொகுப்பு நூல் மூலம் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தனது வாசகர் வட்டத்தினை விஸ்தரித்த இவர் ”ஆரையூர்த் தாமரை” எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதுகிறார்.

கவிதை மட்டுமன்றி பாட்டு, நாடகம், ஓவியம், கிராமிய நடனம், கைப்பணிக்கலைகள், அறிவிப்பு மற்றும் சமூகசேவைகள் போன்றவற்றிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்

இதுவரை இவரின் கவிதைகள் பெண், கவிஞன், செங்கதிர், ஜீவநதி, தோது, நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் மட்டுமல்லாது. வீரகேசரி, தினகரன், பெண்கள் செய்திமடல், தினமுரசு, தினக்குரல், ஈழநாதம், தினக்கதிர், தமிழலை, வளரி (தமிழ்நாடு) போன்ற பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கின்றன.

இவரது ”ஒரு ஜோடிக் கால்கள்”, கடவுள் நண்பனுக்கு எனும் கவிதைகள் முறையே மண்முனைப்பற்றுப் பிரதேச செயலக கலாசாரப் போட்டியில் முதலிடம், 3ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. மற்றும் இவரின் “கடவுள் தாத்தா” எனும் கவிதை மண்முனைப் பிரதேச சபை சாகித்திய விழாவில் 3ம் இடத்தையும் பெற்றதுடன் அனேகரின் பாராட்டுக்களையும் பெற்றது.

அதுமட்டுமின்றி அகலிகை நாட்டுக்கூத்துப் பாடல் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்மொழித் தினப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
By – Shutharsan.S

தகவல் மூலம் – http://kavignarkal.kavignan.com/ இணையம்.

Sharing is caring!

Add your review

12345