[:ta]இளவாளை அருள்மிகு ஆனை விழுந்தான் ஆலயம்[:en]Ilavalai Anaivilunthan Vinayagar Temple[:]

[:ta]

ஆனை விழுந்தான் விநாயகனை யன்போடு

ஏனை நினைவற்று ஏத்தினால்-ஏத்துவார்
வௌ;வினைகள் தீர்த்து விரும்பும் வரமளித்து
திவ்வியமாம் முத்திதரும் தான்

 

கீரிமலை சிவன் கோயிலுக்கு முன் பக்கத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நகுலேஸ்வர வீதியில் ஏறக்குறைய இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் ஆலடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதியில் ஒரு கிலோமீற்றர் தொலைவில் வீதியின் தென் புறத்தில் அமைந்திருப்பதுதான் இளவாலை ஆனைவிழுந்தான் ஸ்ரீ விக்கின விநாயகர் ஆலயம். இளவாளை சித்திரமேழிச் சந்தியிலிருந்து கிழக்குத் திசையாக ஏறக்குறைய ஒரு கிலோமீறறர் தூரம் பிரயாணம் செய்தும் இவ்வாலயத்தை அடையலாம்.

கீரிமலை, மாவிட்டபுரம் போன்றஇடங்கள் எமது சமய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவை. இவ்விடங்களில் உள்ள திருத்தலங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவை. இவற்றோடு தொடர்புடைய ஆனைவிழுந்தான் விநாயகர் ஆலயகர்ண பரம்பரைக்கதைகள் தொகுக்கப்பட்டு சீர் தூக்கி ஆராயப்பட்டுள்ளன. இவ்வாலயச் சூழலில் இருந்து தொல்லியல் ஆராய்வாளர்களின் முயற்சியால் பெறப்பட்ட சான்றுப் பொருட்களையும் ஆலய தலவிருட்சமாகிய அரசமரத்தடியில் உள்ள மண்மேட்டின் பழமையையும் சான்றுகளாக கொண்டு இவ்வாலய வரலாறு காங்கேசன் துறை கஜாத்துறைப் பிள்ளையார் கோவிலில் உள்ள மூலமூர்த்தியாகிய லிங்க மூர்த்தியுடன் இவ்வாலய மூலமூர்த்தி கொண்டு விளங்கும் ஒத்த தன்மையைக் கொண்டு இவ்வாலயம் கி.பி 6-10 ஆம் நூற்றாண்டைச் சேந்ததாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இதிலிருந்து நகுலேஸ்வரச் சூழலில் ஏழு விநாயகர் ஆலயங்களை மருதப் புரவீகவல்லி அமைத்தார் எனவும் கூறப்படுகின்றது.

குதிரை முகம் போன்ற விகாரமானதன் முகமும், சூன்ம நோயும் நீங்க வேண்டி தலயாத்திரையும், தீர்த்த யாத்திரையும் செய்து வந்த சோழ சேனாதிபதியாகிய திசையுக்கிர சோழனது மகள் மரதப்புரவீக வல்லி இப்பொழுது சுழிபுரம் என்று வழங்கும் சோழிபுரத்தில் இறங்கி நகுலேஸ்வரத்திற்கு செல்லும் வழியில் ஓரிடத்தில் அவள் ஏறிச் சென்ற யானை விழுந்து வணங்கியது. அவ்விடத்தில் ஓர் விநாயகர் விக்கிரகமும் காணப்பட்டது. ஆனை விழுந்து வணங்கிய காரணத்தால் அவ்விநாயக பெருமான் “ஆனை விழுந்தான் விநாயகர்” என அழைக்கப்பட்டார். ஆலய முன்னறலில் நிற்பதும் ஆலயத்தின் தல விருட்சம் என கருதப்படுவதுமான அரசமரத்தின் அடியிலுள்ள “மண்மேடு” இவ்வாலயத்தின் பழமையைப் பறைசாற்றும் இன்னொரு சான்றாகும்.

ஷப்த கன்னிகளும் தன்னை வழிபாடு செய்ய பல்லாண்டு காலம் அரசமரத்தடியிலும் பின்பு சிறு குடிலிலும் எழுந்தருளியிருந்த விநாயகப் பெருமானுக்கு இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் ஆலயம் இப்போதிருக்கும் இடத்தில் சுண்ணாம்புக் கல்லால் மடாலயம் அமைக்கப்பட்டது. பாலியடைப்பான் என இழைக்கப்பட்ட தம்பர் சின்னத்தம்பி என்பவர் இவ்வாலயத்திற்கு மணிக் கோபுரம் அமைத்தார். சுற்றுமதில் என்பன அமைத்ததுடன் சேடக்கன் பதியில் உள்ள 12 பரப்புக் காணியையும் இவ்வாலயத்திற்கு சொந்தமாக வழங்கினார். அத்துடன் மேலும் 24 பரப்புக் காணியையும் இதில் அமைந்துள்ள வீட்டில் ஆலயத்திற்கு பூசகராக இருப்பவர் ஆலய பூசகராக இருக்கும் வரை அந்த வீட்டிலேயே வசிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இவ்வாலயத்திற்கு ஆரம்பத்தில் தம்பர் கந்தப்பிள்ளை என்பவர் பூசனை செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து வேலையர் (வயிரவி வேலுப்பிள்ளை) என்பவரும் 1935 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாலயம் ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டது. அக்காலம் தொடக்கம் ஸ்ரீ.தி.நடராசஐயர் அவர்கள் பூசை செய்தார். ஆவரைத் தொடர்ந்து அவரது மகன் சிவஸ்ரீ ந.இராமச்சந்திரக் குருக்களும் அவரின் பின் அவரது மகன் இராம பாலச்சந்திரக் குருக்களாலும் இவ்வாலய பூசை ஒழுங்குகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாலய குடமுழுக்கானது முதன் முதலில் (1913ல்) கீரிமலை நகுலேச்வர ஆதீனகர்த்தா சிவஸ்ரீ. தி. குமாரசுவாமிக் குருக்களாலும் 1976ஆம் ஆண்டு பெருஞ்சாந்திக் குடமுழுக்கினை அவரது மகனும் ஆதினகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ. கு. நகுலேஸ்வரக் குருக்களாலும் அதனைத் தொடர்ந்து 1999ம் ஆண்டிலே நடத்தப்பட்ட பெருஞ்சாந்திக் குடமுழுக்கினையும் அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டிலே நடைபெற்ற முதலாவது மகோற்சவப் பெருவிழாவாகிய கொடியேற்றத் திருவிழாவையும் நடாத்திவைத்த பெருமை தற்போதைய ஆதீன குருவும் எமது வணக்கத்திற்குரிய குரு முதல்வருமாகிய சிவாச்சார்யமணி சிவஸ்ரீ. இராம. பாலச்சந்திரக் குருக்கள் அவர்களையே சாரும்.

இவ்வாலயத்திலே சதுர்த்தி (மாதாந்தம்), நவராத்திரி, விநாயகசஷ்டி, திருவெம்பாவை, கஜமுகசங்காரம் ஆகியவற்றுடன் பண்டிகைகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஆன்மகோடிகளின் இன்னல் இடர்களை நீக்கி அருள்செய்யும் பொருட்டு சகல வளங்களும் பொருந்திய ஆனைவிழுந்தான் பதியிலே லிங்க விநாயகராகத் தோன்றியிருந்து சோழ இளவரசியாகிய மாருதப்புரவல்லியாலும் வழிபாடு செய்யப்பெற்று பழம்பெரும் அரசமரத்தை தலவிருட்சமாகக்கொண்டு பழம்பெரும் பெருமைபெற்று விளங்கும் ஆனைவிழுந்தான் ஸ்ரீ விக்கின விநாயகர் மூர்த்தி, தல விசேடமுடைய பெருமையோடு தீர்த்தம் ஒன்றில்லாதது பெருங்குறையெனக் கருதப்பட்டாலும் இப் பெருங் குறையும் நீங்கி அருள்புரியும் வண்ணம் எம்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

 

நன்றி –

ஒழுங்கமைப்பு – எஸ்.சத்தியசீலன், பிரதேசசெயலகம், சண்டிலிப்பாய்.

தட்டச்சு – கே.சுகதீஸ்-பிரதேசசெயலகம், சண்டிலிப்பாய்.[:]

Sharing is caring!

Add your review

12345