உடுத்துறை மகா வித்தியாலயம்

உடுத்துறை மகா வித்தியாலயம்
முகப்பு தோற்றம்

வட இலங்கையின் யாழ் மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கே மணற்காடு தொடக்கம் கிழக்கே சுண்டிக்குளம் வரையாக ஏறத்ததாழ 50km நீளமுடைய ஒடுங்கிய நிலப்பகுதியே வடமராட்சி கிழக்கு எனும் மருதங்கேணி பிரதேசம் ஆகும். இப் பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள உடுத்துறை எனும் அழகிய கிராமத்திலேயே யா/ உடுத்துறை மகா வித்தியாலயம் எனும் பாடசாலை கலங்கரை விளக்கமாக அமைந்து மாணவர்களுக்கு அறிவூட்டிக் கொண்டிருக்கிறது.

இப்பாடசாலை ஆனது 1852ம் ஆண்டு அப்போதைய பிரித்தானிய ஆட்சியாளர்களாலும் கிறிஸ்தவ மதகுருமார்களின் Church of Ceylon எனும் அமைப்பினாலும் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பித்த சிறிது ஆண்டுகளுக்கு பிறகு உடுத்துறை CCTMS என பெயர் பெற்றது.

இப்பாடசாலை ஆரம்பித்த சில காலங்களுக்கு பிறகு முதன் முதலாக திரு யோசேப் சட்டம்பியார் அதிபராக கடமையேற்று பாடசாலையை சிறப்புற நடத்தி வந்தார். இவருடைய அயராத முயற்சியின் காரணமாக இப்பிரதேசத்தை சேர்ந்த பல மாணவர்கள் பாடசாலைக்கு உள்ளீர்க்கப்பட்டதுடன் 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இப்பிரதேச மக்கள் கல்வியறிவு உடையவர்களாக விளங்குவதற்கு இவர் காரணமாக இருந்தார். இவருடைய காலப்பகுதியில் 1-5 வரையான வகுப்புகள் இயங்கியதுடன் 150 வரையான மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள்.

அதனை தொடர்ந்து 1940 களில் உடுத்துறை 5ம் பனையை பிறப்பிடமாகக் கொண்ட திரு க. பே. முத்தையா என்பவர் இப்பாடசாலையில் அதிபராக கடமையேற்று பல கல்விமான்கள் உருவாகுவதற்க காரணமாக இருந்தார். இவர் தலைசிறந்த கல்விமான், கவிஞர், எழுத்ததளர் என்ற பல புலங்களை தன்னகத்தே கொண்டிருந்ததுடன் தமிழ் இலக்கிய உலகுக்கு காத்திரமான பல பங்களிப்பை செய்து வந்தார். இவரை கௌரவிக்கும் முகமாகவே முத்தையா(பச்சை) எனும் பெயரில் இல்ல மெய்வல்லுனர் இல்லம் இன்றும் காணப்படுகிறது.

இவரை தொடர்ந்து போதகர் நவரத்தினம் அவர்களால் இப்பாடசாலை பொறுப்பேற்று சிறந்த நிர்வாகக் கட்டமைப்பபுடன் நடத்தப்பட்டது. இவருடைய காலத்திலேயே 1952ம் ஆண்டு பாடசாலையின் நூற்றாண்டு விழா(1852-1952) பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது. இவரை கௌரவிக்கும் முகமாகவே நவரத்தினம்(சிவப்பு) எனும் பெயரில் இல்லமெய்வல்லுனர் இல்லம் இன்றும் காணப்படுகிறது. இவருடைய காலத்திலேயே தரம்-05 வரை இருந்த பாடசாலை தரம்-08 வரை தரமுயர்த்தப்பட்டது.

இவருக்குப் பின்னர் உபதேசியார் திரு பொன்னையா அவர்கள் இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றினார். இவர் மதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்றும் அதனை உபதேசிப்பராகவும் இருந்தபடியால் இவரை எல்லோரும் உபதேசியார் என அழைத்தனர். இவரை கௌரவிக்கும் முகமாகவே பொன்னையா(மஞ்சள்) எனும் பெயரில் இல்ல மெய்வல்லுனர் இல்லம் காணப்படுகிறது.

இவரை தொடர்ந்து திரு K. P. நாகலிங்கம் (1968-1970) அதிபராக கடமையாற்றினார். இவருடைய காலத்திலேயே பாடசாலை SSC (Senior School Certificate) வரை தரமுயர்த்தப்பட்டது. இவரை தொடர்ந்து திரு கந்தப்பிள்ளை, திரு சிவகுருநாதன், திரு மூ. ஆறுமுகம், திரு J. S. இராசலிங்கம், திரு பொ.சங்கரப்பிள்ளை, திரு அ. ச. அரியகுமார் ஆகியோர் கடைமையாற்றி இன்று திரு வே. புவனேந்திரராஜா அதிபாக கடைமையேற்று பாடசாலையை சிறப்புற நடத்தி வருகிறார்.

1964 ம் ஆண்டு நடைபெற்ற SSC பரீட்சையில் பாடசாலை மாணவர்கள் வடமராட்சி வலய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர். அக்காலத்தில் நடைபெற்ற எழுதுவினைஞர் போட்டிப்பரீட்சையில் இப் பாடசாலை மாணவர்கள் பலர் சித்தியடைந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றினார்கள். இக்காலப்பகுதியில் கல்வி கற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்திருந்தது.

1964-1968 வரை ஆழியவளையை பிறப்பிடமாகக் கொண்ட திரு வடிவேலு ஆசிரியர் கணிதம், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்பித்தார். இவருடைய காலத்திலேயே பல போட்டிகளுக்கு சென்று பாடசாலைக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்கள். இன்று தரம்-05 புலமைப்பரீட்சைக்கு ஒப்பாக அன்று தரம்-08 இல் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இப் பாடசாலை மாணவன் திரு இராசதுரை அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

1972 ம் ஆண்டு இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரிவில் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்றதுடன் அவர்களில் ஒருவரான மாமுனையை சேர்ந்த திரு ஆறுமுகம் (அருமை) என்பவர் பல்கலைக்கழக விரிவுரையாளராக தரமுயர்ந்தார். மேலும் இப் பாடசாலை மாணவர்களான திரு சிவராசா, திரு துரைராசா, திரு செல்லையா, திரு தெய்வேந்திரம், திரு மெய்வெளிச்சம் ஆகியோர் நவீன நாடகங்களை தயாரித்து பல்கலைக்கழகம் உட்பட நாட்டில் நடைபெற்ற பல நாடகப்போட்டிகளில் பங்குபற்றி முதல் பரிசை தட்டிக்கொண்டனர்.

1980 இற்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, அங்வீனம், உடமையிழப்பு, இடப்பெயர்வு காரணமாக இப்பிரதேசத்தில் சடுதியாக மக்கள் தொகை குறைந்தது. இதன் காரணமாக பாடசாலையிலும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காகக் குறைந்தது. அத்துடன் பல சமயங்களில் பாடசாலை இடப்பெயர்வை சந்தித்ததுடன் பல மாதங்களாக இயங்கா நிலையிலும், தற்காலிகமாக வேறு பாடசாலைகளிலும் இயங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவ்வாறு மாறி மாறி பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து மீள 2003 ம் ஆண்டிலிருந்து தனது சொந்த இடத்தில் இயங்கி வந்தது. இச்சந்தர்ப்பத்தில் 2004 டிசம்பர் 26 ஏற்பட்ட ஆழிப்பேரலை(சுனாமி) அனர்த்தத்தில் இப் பாடசாலையை சேர்ந்த 61 மாணவர்களும் 1 ஆசிரியரும் காவு கொள்ளப்பட்டனர். இச்சம்பவம் இப் பாடசாலை வரலாற்றில் ஒரு நீங்காத துயராக இருந்து வருகின்றது.

இதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இடம்பெயர்ந்த இப் பாடசாலை மீள 2010.09.23 இலிருந்து தனது சொந்த இடத்தில் இயங்கி வந்தது. இச்சந்தர்ப்பத்தில் இப் பாடசாலை முற்றாக அழிவடைந்திருந்தது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு எந்தவொரு தற்காலிக வகுப்பறை கூட இல்லாத நிலையில் மாணவர்கள் மர நிழல்களிலேயே கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் 2011 ம் ஆண்டின் முற்பகுதியில் ENREP திட்டத்தின் கீழ் இரண்டு கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு தரப்பட்டது. அதனை தொடந்து சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தினால்(Swiss development cooperation – SDC) 275 மில்லியன் ரூபா செலவில் இப் பாடசாலை முழுவதுமாக புணரமைக்கப்பட்டு 2013.09.05 அன்று சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. (சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தினால் 2004 ம் ஆண்டே புனரமைப்புக்காக இப் பாடசாலை தத்தெடுக்கப்பட்டதுடன் சில காரணங்களால் அவை இடைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)

இந்நிலையில் கல்வி அமைச்சினால் 2012 முன்னெடுக்கப்பட்டு வரும் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலக பிரிவில் இரண்டு பாடசாலைகள் என்ற அடிப்படையில் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் இப் பாடசாலை உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இப் பாடசாலையில் உள்ள ஆரம்ப பிரிவை(தரம்1-5) தனியாக பிரித்து 2012.02.16 இலிருந்து யா/ உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலைக்கான ஊட்டப் பாடசாலையாக இயங்கி வருகின்றது. இன்று இப் பாடசாலை தரம் 06 இலிருந்து 13 வரை சிறப்புற இயங்கி வருகின்றது. ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் இன்னொரு கட்டமாக 90 மில்லியன் ரூபா செலவில் தொழில்நுட்ப ஆய்வுகூடமொன்று 2012.10.17 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகிறது.

2013 இல் இப் பாடசாலையில் மீள உயர்தரத்திற்கான வணிக பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன்(1998 ம் ஆண்டே இப் பாடசாலையில் வணிக பிரிவு ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது) 2013.07.12 இலிருந்து 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட இப் பாடசாலை 2014 இருந்து உயர்தரத்திற்கான கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரவுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடுத்துறை மகா வித்தியாலயம்
இலச்சினை
உடுத்துறை மகா வித்தியாலயம்
பாடசாலைக் கீதம்

நன்றி – தொகுப்பு- த.மதுசூதனன்

மேலதிக தகவல்களுக்கு – http://www.uduthuraimv.sch.lk/web இணையம்

Sharing is caring!

Add your review

12345