உரும்பிராய் பேச்சி அம்மன்

ஈழமண்டலத்திரு நாட்டின் தங்கமுடிச்சிகரமாக திகழ்வது யாழ்ப்பாணத் தீபகற்பமாகும். இதற்கு வடக்கே உரும்பிராய் பதியின் சிறப்புற்று விளங்கும் நம் தமிழ்ப் பூமி உரும்பிராய் பதியின் வடக்கில் நரியன் தோட்டம் என்னும் குறிச்சியில் ஒரு பற்றை மறைவில் வேப்பமரத்தின் அடியிலே கல் உருவிலே தோன்றி வெள்ளைச் சேலையுடன் காட்சி கொடுத்தவள்தான் பேச்சிஅம்மன் என்று அழைக்கப்படுகின்ற மகா மாரித்தாயாவாள். இவளின் புதுமையைக்கண்ட அவ்வூர் மக்கள் கடுகு சிறிதாயினும் காரம் பெரிதாகும். மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதாகும் என பேச்சியின் அருள் வியந்து கல்லினாலே சிறு கோயில் கட்டி 1991 ம் ஆண்டு ஆவணி ஓணத்தில் அன்னைக்கு முதலாவது கும்பாபிஷேகத்தை முத்தமிழ் ஞானியும் முத்தணி மார்பும் முப்புரி நூலும் அணிந்த ஒப்பிலாக் குருமணி சிவ ஸ்ரீ க.மு.ஜெகநாதக் குருக்கள் தலமையில் வித்தக மார்புடைய பெருமானின் திருவருள் துணை கொண்டு சிறப்பாக நிறைவேற்றி திருவருளோடு குருவருளையும் பெற்றனர்.

ஓப்பிலாக் குருமணியின் நல்லாசியினால் அமைந்த இச் சிறு ஆலயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கையில் அன்னையின் வற்றாத பேரின்பக் கருணையினால் குருமணி ஜெகநாதக் குருக்கள் அவர்களே ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருமானார். திருவருளோடு குருவருளும் பொலிந்து இருப்பதால் 2008 ல் மீண்டும் குடமுழுக்கு விழா எமது ஒப்பிலாக் குருமணியின் தலைமையிலே சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெறுகின்ற நித்திய நைமித்திய காமிக பூசைகளெல்லாம் காரண ஆகமமுறைப்படி ஐயா அவர்கள் நெறிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவ் ஆலயத்திலே தைப் பொங்கல், தை அமாவாசை அபிராமிப்பட்டர் விழா, மாசிச் சிவராத்திரி விழா, மாசி மக அலங்கார உற்சவம், பங்குனித் திங்கள் குளிர்ச்சி, மகேஸ்வர பூசை, தெரு வீதி உலா, பங்குனி உத்தரம், சித்திரைப் புது வருடப் பிறப்பு, சித்திரைப் பூரணை, வைகாசி விசாகம், ஆவணி உத்தரம், ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆவணி ஓணம், புரட்டாதி நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கார்த்திகைச் சோமவாரம், மார்கழித் திருவெம்பாவை, இப்படியாக பற்பல விழாக்கள் பன்னிரு மாதமும் நடைபெறுவதற்கு ஒரு பரிபாலன சபையும் உதவி வருகின்றது.

எமது மூத்த குருமணியின் அருளாசியோடு 3 வது பெருஞ் சாந்தி விழா மீண்டும் நடைபெற அம்பிகை அருள்பாலிக்கும் வேளை அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்ற எங்கள் அலங்கார வல்லிக்கு ஓர் அலங்காரத் தேர் ஓடும் காலம் வெகு தூரமல்ல என்பதையும் கூறி நிலையில்லாத உலகத்தை நிலையென்று உள்ளன்போடு உணர்ந்து வாழுகின்ற உயிர்களையெல்லாம் அலையாமல் காக்க வேண்டுமென்று அந்த அபிராமி அம்பாளை சிங்கார வேலவனுக்கு மங்காமல் வேல் கொடுத்து அசுரர்களையெல்லாம் தங்காமல் அழித்த எங்கள் பத்தினி மகா மாரித்தாயாரை என்றும் மறவாமல் வணங்கி வாழ்வோமாக.

 

நன்றி – மூலம் -http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345