வரலாற்றுப் புகழ்மிக்க காவலூர்

ஊர்காவற்றுறை முகவுரை:

ஊர்காவற்றுறை

இலங்கையின் வட மாகாணத்தில் பண்டைய சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கியது ஊர்காவற்றுறை ஆகும். லைடன் தீவு என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத்தீவின் வடமேற்கில் ஊர்காவற்றுறை அமைந்துள்ளது. லைடன் தீவு வேலணைத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை தணதீவு எனக் குறிப்பிடுகிறது. கிறீஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே ஊர்காவற்றுறை துறைமுகமாக இருந்தது எனச் சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இது துறைமுகமாக இருந்தது என வரலாறு சான்றுபகருகிறது. போத்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் தென் இலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசை வெற்றிகொண்டு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் ஆதிக்கஞ் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. காலகதியில் அது ஒரு துறைமுக நகரமாக உருவெடுத்தது.

ஊரின் பெயர் எப்படி உருவாகியது

ஊர்காவற்றுறை என்ற பெயர் வரக் காரணம் என்ன என்று ஆராயின் ஊரைக் காவல் செய்கின்ற வகையில் இந்த துறைமுகம் அமைந்திருந்தமையால் அவ்வாறு பெயர் வந்தது என்பர். ஊரான் தோட்டம் என முன்பு வழக்கில் இருந்த பெயர் சிங்களத்தில் “ஊறாதொட்ட” என வந்தது என்பர். பன்றிகள் ஏற்றிய துறை என்ற காரணத்தால் ஊறாதொட்ட எனப் பெயர் வந்தது என்று சொல்பவருமுளர். ஆனால் யானைகள் இத்துறைகமுகத்தினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள. இப்பொழுது ஆங்கிலத்தில்   கயிற்ஸ் என வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயரால் சூட்டப்பட்டது என்பர். ஆய்வுகளின்படி இது போர்த்துக்கேய சொல்லில் இருந்து மருவி வந்தது எனத் தெரிகிறது. போர்த்துக்கேய மொழியில் கேயிஸ் என்றால் துறைமுகம் என்பது பொருள். அதிலிருந்தே பின் கயிற்ஸ்  என்ற பதம் ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று விளக்கம் தரப்படுகிறது.

பொற்காலம்

வட பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் ஊர்காவற்றுறை ஆகும். வடகீழ்> தென்மேல் பருவகாலங்கள் இரண்டிலும் பாதுகாப்பான துறையாக இது விளங்குவது விசேட அம்சமாகும். பன்னெடுங்காலமாக காவாலூர் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பிருந்தமையால் அந்நாட்டுத் துறைமுகங்கள்வரை சென்று பண்டைமாற்று வணிகஞ் செய்திருக்க வாய்ப்பிருந்தது. பல தென்கிழக்காசிய நாடுகள்வரை காவலூர் மாலுமிகள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே ஊர்கவற்றுறைத் துறைமுகம் மிகவும் புகழ்பெற்றிருந்தது எனலாம். பிரித்தானியர் ஆசிய நாடுகளான பர்மா தற்போதைய மியான்மார்> சயாம்> றங்கூன் முதலிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தனர். இந்த இறக்குமதி வர்த்தகத்தில் பிரதான பங்கெடுத்டுக்கொண்ட பட்டுக்கோட்டைச் செட்டிமார் ஊர்காவற்றுறை> பருத்தித்துறை> வல்வெட்டித்துறை முதலிய துறைமுகங்களை இறக்குமதி வர்த்தகத்துக்குப் பயன்படுத்தினர். அககாலப் பகுதியில் காவலூர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. கப்பல்கள்> படகுகள்> டிங்கிகள்> தோணிகள் என்று துறைமுகம் மரக்கலங்களால் நிறைந்திருக்கும். பனைமர அளவுக்கு உயரமான பாய்மரங்கள் வானைமுட்டி உயர்ந்து நிற்க> பாரிய கப்பல்கள் எந்நேரமும் நங்கூரமிட்டுச் சரக்குகளை இறக்கும் காட்சியை அறுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் கண்டவர்கள் பலர் இன்னும் சீவந்தராய் இருக்கிறார்கள். படகுகளில் பணியாற்றிய மாலுமிகளில் ஒரு சிலர் இன்னும் பண்டைய நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்க்கிறார்கள். கறிச் சரக்கு வகைகள்> வெங்காயம்> மிளகாய்> சர்க்கரை முதல் கலிக்கட் ஓடுவரை கரை இறக்கப்பட்ட அந்தச் செழிப்பான காலத்தை எண்ணிப்பார்க்கப் பெருமையளிக்கிறது. முந்நாளில் காவலூர்த் துறைமுகம் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். அது காவலூரின் பொற்காலமாகும். செழிப்பான அந்த நாட்கள் என்று வருமோ!

பட்டுக்கோட்டைச் செட்டிமாரின் செல்வாக்கினால் காவலூரிலும் கப்பல் கட்டும் தொழில்> படகுத்துறைத் தொழில் என்பன விருத்தி அடைந்தன. பலர் வேலைவாய்ப்புப் பெற்றதோடு மாலுமிகளாகவும்> கப்பல் உரிமையாளராகவும் மிகுந்த உச்சநிலையில் இருந்தனர். யுத்தகாலப் பஞ்ச நிலமைகள் காவலூரை அவ்வளவாகப் பாதிக்கவிலை. காவலூர் அரிசிக் களஞ்சியமாக இருந்ததால் அரிசிக்கும் பஞ்சம் இருக்கவிலை.

அறுபதுகளுக்குப் பின்

ஊர்காவற்றுறை

சப்த தீவு மக்களும் சங்கமமாகும் இடம் காவலூராகவே இருந்தது. 1960ம் ஆண்டுவரை நெடுந்தீவு உட்பட அனைத்துத் தீவு மக்களும் ஊர்காவற்றுறைத் துறைமுகம் வந்துதான் காரைநகர் ஊடாக யாழ்ப்பாணம் சென்றனர். ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையே அனைவருக்கும் மருத்துவப் பணிக்கு நடுநிலையமாய் இருந்தது. பொலீஸ் நிலையம்> நீதிமன்றம் என்பன காவலூர் பட்டினத்திலேயே இருந்தன. இதன் காரணமாக நீதித்துறை சார்ந்த சகல தேவைகள்> சட்டத்தோடு தொடர்புடைய குற்றவியல் விசாரணைகள்> வழக்குகள் அனைத்தும் காவலூரில் இடம்பெற்றமையால் நீதிமன்றம் கூடும் நாட்களில் தீவுப்பகுதி மக்கள் இங்கு கூடுவது வழக்கம். அதனால் ஊர்காவற்றுறைச் சந்தை எப்பொழுதும் கலகலப்பாகவே காணப்படும். 1950ம் ஆண்டுவரை காவலூர் சுங்கப்பகுதி கொழும்புக்கு அடுத்த்தாக வருமானத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. சுங்கப் பகுதியில் அநேக மக்கள் வேலை வாய்ப்பைப் பெற்றனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்லினக் காளை மாடுகளும்> ஆடுகளும் காவலூரின் மேற்கில் உள்ள மாட்டுக்காலை எனப்படும் தடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு நோய்த்தடுப்புச் செய்யப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. மிருகங்களுக்கு மாத்திரமல்ல> மனிதர்களுக்கான அம்மை நோய்த் தடுப்பு முகாமும் மாட்டுக்காலையை அண்மித்த ஊர்காவற்றுறை மேற்குப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. சுகாதார வைத்தியப் பகுதியினர் இத்தடுப்பு நிலையத்தைப் பராமரித்து வந்தனர்.

ஆய்வுக்குட்பட்ட ஆதிக் குடியேற்றம்

கிராம சேகவர் பணிகளை இலகுவாக்க தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட பரவலாக்கற் பிரிவுகளின்படி உருவாக்கப்பட்ட கரம்பொன் வடக்குப் பிரிவுஊர்காவற்றுறை மேற்கை அடுத்த பகுதியாகும். மாட்டுக்காலையை அண்மித்த கரம்பொன் வடக்குப் பகுதியே ஆதிக் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படுகிறது. ஊருண்டி என முன்னர் அழைக்கப்பட்ட இப்பகுதியே முதன் முதலில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி என்பது ஆய்வாளர் கருத்தாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரான கலாநிதி பொ.இரகுபதி அவர்கள் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுக் குறிப்புகளின்படி இப்பகுதி செம்மண் கலந்த பூமியாக இருந்தது என்றும் மக்கள் இங்கு குடியேறியிருந்தமையினாலேயே போர்த்துக்கேயர் இப்பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்தக் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோட்டைப் பகுதியில் யாழ் திருமறைக் கலா மன்றத்தினர் திருப்பாடுகளின் காட்சியை (யேசு சிலுவையில் மரித்த காட்சியை) ஒளிப் படமாக்கியது குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசம் கல்வாரி மலையை ஒத்திருந்தமை இந்தப் புனித நிகழ்வை காட்சிப்புலமாக்க உதவியது.

ஊர்காவற்றுறை

போத்துக்கேயரின் கீழ்த்திசை ஆட்சிக் காலம் தொடர்பான வரலாற்று நிபுணரான இலண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பொக்ஸர் இலங்கையிலுள்ள போத்துக்கேயரின் கோட்டைகளை இனங்கண்டு ஆய்ந்தபோது அவற்றுள் ஒன்றைப்பற்றிய ஐயமேற்பட்டபோது ஊர்காவற்றுறைக்கு வந்து இந்தப் பழங்கோட்டையைப் பார்த்தபின்னரே தான் தவறவிட்ட கோட்டை அதுதான் என்பதை நிச்சயப்படுத்தித் தெரிந்து கொண்டார். பேராசிரியர் பொக்ஸர் அவர்களை அழைத்துவந்த கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்று அறிஞரான கலாநிதி திகிரி அபயசிங்கா அவர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளார். கலாநிதி இராமகிருஷ்ணன் அவர்களும் இவ் ஆய்வுக்கு உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊர்காவற்றுறை

கரையில் உள்ள போர்த்துக்கேயரின் பழங்கோட்டையைவிட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னுமோர் வரலாற்று மீதி ஊர்கவற்றுறைக்குப் பெருமை தருகிறது. காவலூருக்கும் காரைநகர் கடற்படைத் தளத்துக்குமிடையில் அமைந்துள்ள கடற்கோட்டை இலங்கையில் காணக்கூடிய மிக அபூர்வமான வரலாற்று மூலமாகும். ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட இக் கடற்கோட்டை “ஹமன்ஹீல்” என அழைக்கப்படுகிறது. 1990ம் ஆண்டுக்குப் பின் அது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

காவலூரின் குடிப்பரம்பல் எப்போது ஏற்பட்டது என்பது பற்றித் தெழிவாக அறியமுடியவில்லை. தென் இந்தியாவில் மணற்பாடு தூத்துக்குடி இராமேஸ்வரம்பாம்பன்திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்து வந்த மக்கள் தீவுப்பகுதியில் குடியேறியிருக்கலாம். இந்தியப் படையெழுச்சியின் போது போர்வீரர்களாகவும்படைகளுக்குத் துணையாகவும் வந்தவர்கள் இங்கு குடியமர்ந்திருக்கலாம். வியாபார நோக்கத்தோடு வந்தவர்களிற் சிலர் இங்கு தங்கி அவர்களின் சந்ததி பெருகியும் இருக்கலாம். ஒரு பகுதியினர் மன்னார் மாந்தைப் பகுதியில் இருந்து வந்து குடியேறினர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஊர்காவற்றுறை கிழக்கு ஊர்கவற்றுறை மேற்கு ஆகிய இடங்களில் வாழும் மக்களுக்கு மன்னார்த் தொடர்புகள் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த பன்னீராயிரம் மக்கள் ஊர்காவற்றுறைப் பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இச்சனத் தொகை முக்கிய நான்கு சமுகத்தினரை அடக்கியுள்ளது என்பதற்கு இங்குள்ள நான்கு ஆலயங்கள் சான்று பகருகின்றன.

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறின் அவலங்கள்

ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது. பல வழிகளில் துரிதமாக முன்னேறி வளர்ந்துகொண்டிருந்த காவலூர் எவருமே எதிர்பாராது 1990ம் ஆண்டு ஆவணி 22ல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையால் உலகப்போரில் அகப்பட்ட ஜேர்மனி நாட்டைப்போலவும், அணுகுண்டு வீசப்பட்ட நாகசாக்கி நகரத்தைப் போலும் சிதைந்து அழிந்த நிலையில் இன்று காட்சி தருகிறது. குண்டு வீச்சு, ஷெல் வீச்சுகளாலும், கடற்படைப் பீரங்கி வேட்டுக்களாலும், சிதைந்த கட்டடங்கள், புள்டோசர் போட்டு மிதித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், அரச அலுவலகங்கள் என்பவற்றுடன் அநேக வீடுகளின் சுற்றுமதில்களும், சிதைந்து புதர்மண்டிக் காடுகள் வளர்ந்ததுபோல் மரங்கள் வளர்ந்து மூடிப் பல வீடுகள் அடையாளங் காணமுடியாத படி காட்ச்சி தருகின்றன.

1984க்குப் பின் நீதி மன்றம், பழைய பொலிஸ் நிலையம், புதிய பொலிஸ் நிலையம், வாடி வீடு என்பன தீவிரவாத சக்திகளால், அவை எதிரிகள் வசமாகாதவாறு தகர்க்கப்பட்டன. ஆனால் 1990 புரட்டாதியில் காவலூர் புதிய தபாலகம் உட்பட பல அரச நிறுவனங்கள், சந்தைக் கட்டடங்கள், மக்கள் குடியிருப்பு மனைகள் என்பன அரச படைகளால் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. இறங்குதுறை மண்டபம் தகர்ந்து, துறைமுகப் பாலம் சிதைந்து காட்சி தருகிறது. வீடுகள் பல சுவர்களோடும், கூரைகளோடும் நின்றாலும், கதவுகளும், யன்னல்களும் இல்லாது பாழைடைந்த வீடுகளாய் தோற்றமளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்த விலைமதிப்பற்ற தளபாடங்களும், பெறுமதிமிக்க பொருட்களும் சூறையாடப்பட்டன. அமைதியில் வாழ்ந்த காவலூர் முந்திய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தப்பியிருந்த போதிலும் 1990ம் ஆண்டு புரட்டாதி இருபத்தெட்டில் வரலாறு காணாத பேரழிவை எதிர்கொண்டு, மக்கள் சொந்த மண்ணை விட்டு நிலைகுலைந்து, நிர்க்கதியாய், அகதிகளாய் அடைக்கலம் புகுந்து, சொத்துக்களை இழந்தாலும், சுகத்தை இழ்ந்தாலும், உயிரையாவது காப்பாற்றிக்கொண்டால், என்றோ ஒருநாள் மீண்டும் தமது வதிவிடங்களுக்குத் திரும்பலாம் என்று தவித்து நின்றனர். ஆனால் அடைக்கலம் நாடிப் புலம்பெயர்ந்த இடங்களில் அவர்கள் ஆறு மாதங்கள் கூட நிமதிப் பெருமூச்சு விட்டிருக்க காலம் இடம்தரவில்லை.

மக்களைத் துரத்திய 1991

1991ம் ஆண்டு சித்திரை மாதத்தில் காவலூரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடன், அடைகலம் தந்தவர்களும் சேர்ந்து லைடன் தீவைவிட்டே வெளியேறி குடாநாட்டை நோக்கி இடம்பெயர்ந்த அவலங்களைப் பெரிய ஒரு நூலாக எழுதலாம். இராணுவ நடவடிக்கைகள் காரணமாக லைடந்தீவு, புங்குடுதீவு, மண்டைதீவு மக்கள் 75,000 பேர் குடாநாட்டை நோக்கிப் படையெடுத்தனர். எகிப்திலிருந்து இஸ்றாயேல் மக்கள் இரவோடு இரவாகப் புலம்பெயர்ந்தபோது நிகழ்ந்த ஆறாத்துயரங்கள் போன்று தீவக மக்களும் தாங்கமுடியாத வேதனைகளை அனுபவித்தனர். காவலூர் மக்களும் இதில் அடங்குவர். கத்தோலிக்க மறைத் தொண்டர்களும், குருமாரும், மனித முன்னேற்ற நடுநிலையமும், பங்குத் தந்தையர்களும், அரச்சார்பற்ற தாபனங்களும் அந்தக் காலப் பகுதியில் ஆற்றிய மனிதநேயப் பணிகளால் லைடந்தீவு மக்கள் தம் உயிரையாவது காப்பாற்ற முடிந்தது என்றால் மிகையில்லை. எனினும் இக்காலப் பகுதியில் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடுகள் என்பவற்றின் விளைவாகப் பலர் உயிரிழந்தனர். சிலர் அங்கவீனமாகினர். பல குடும்பங்கள் அவ்வாறான சோக அவலங்களைச் சுமந்து இன்றுவரை துன்பக் கடலில் தத்தழித்து மீள முடியாத இழப்புக்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர்.

நல்லதொரு எதிர்காலம் வருமா?

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளால் லைடன் தீவும், மண்டை தீவும் நலிவடைந்தன. அதிலும் காவலூரே பெருமளவு அழிவுகளை எதிகொண்டு வரலாறு காணாத அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துப் பண்டைய பெருமைகள் அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையிலுள்ளமை சோகமான வரலாற்று நிகழ்வாகும். 2002ல் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட சமாதன ஒப்பந்தத்தைத் தொடர்ந்து லைடன் தீவின் சில பகுதிகள் படிப்படியாகப் பழைய பொலிவினைப் பெற ஆரம்பித்தது. எனினும் பல்வேறு அரசியல் காரணங்களால் சமாதான ஒப்பந்தம் முறிவடந்தது. 2009 மே மாதத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலங்களின் பின்பு படிப்படியாக ஒரு சிலர் மீண்டும் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பியுள்ளனர். எனினும் ஏற்கனவே இங்கிருந்து வெளியேறிய ஆயியரக்கணக்கானோர் மீண்டும் இங்கு திரும்பாத காரணத்தால் ஏராளமான வீடுகள் திருத்தமுடியாத அளவிற்கு சிதைவடைந்த நிலையில் உள்ளமை வேதனைக்குரியது. இனிவரும் காலங்களிலாவது இங்கு சிறந்த மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்கு வாழ்ந்த பலரிடம் காணப்படுகிறது.

(1995ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலயத்தின் நூற்றாண்டுச் சிறப்பு மலரிலிருந்து எடுக்கப்பட்டது)

காவலூரின் பெருமையுள்ள பழங்குடி மக்கள்

இலங்கைத் தீவில் முதலில் கப்பலோட்டிய தமிழன்

ஆக்கம்: காவலூர் கவிஞர் ஜி.எம்.செல்வராசா

ஊர்கவற்றுறையின் பூர்வீகக் குடிகள் எங்கிருந்து வந்தார்கள், எப்போ இங்கு குடியேறினார்கள் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது போயினும், ஒரு சில பகுதியராவது தென் இந்தியாவிலிருந்து மன்னாரில் குடியேற்றப்பட்டு, அங்கிருந்து பூனரி, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, கோவளம், நாவாந்துறை, சாட்டி, அல்லப்பிட்டி, நாரந்தனை, ஊர்காவற்றுறை முதலிய இடங்களுகளில் காலகதியில் குடியேறினார்கள் என்று அனுமானிக்க இட்டமிருக்கிறது.

இப்பூர்வீகக் குடிகள் அனைவரும் சைவ சமயத்தவர்களே. 1600ம் ஆண்டிலேயே வேத வித்து ஊர்கவற்றுறையில் வேரூண்டப்பட்டது. எனவே அதற்கு முந்திய காலப் பகுதியில் இங்கு சைவ சமயமே தழைத்தோங்கி இருந்தது.

காலகதியில் கத்தோலிக்க மதம் கண்ணாடிச் சுவமியாரால் இங்கு பரப்பப் பட்டபோதிலும், ஊர்கவற்றுறை மக்களில் பிரமுகர்களாக விளங்கிய ஒரு சிலர் தம் ஆதி சமயத்தைக் கைவிடாமல் சமய வைராக்கியர்களாக இருந்தர்கள். அவர்களில் முதன்மை வாய்ந்தவர்கள் ஆண்டி அம்பலரும், ஐயப்பனாரும் ஆவர். தற்போது அம்பலப்புலம் என அழைக்கப்படும் பகுதி முழுவதும் அக்காலத்தில் ஆண்டி அம்பலருக்கே சொந்தமாக இருந்தது. அதனாலேயே, “அம்பலர்-புலம்”, அம்பலப்புலமாக மாறியதெனலாம். இவ்வண்ணமே ஐயப்பனாருக்கும் ஏராளமான காணிகள் இருந்திருக்கின்றன. ஐயப்பன் தோட்டம் என்றழைக்கப்படும் காணி ஒன்று இன்றக்கும் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. மேற்படி ஆண்டி அம்பலனாரின் மகன் “பேதுறுதே பெற்றக்கோன்” என்னும் குருவானவரால் ஞானஸ்ஞானம் பெற்று, மத்தேசு என்னும் பெயர் பூண்டு மேற்குப் பகுதி பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்தார். இதுவே அம்மபலப்புலத்துக்கும் மேற்குப் பகுதி மக்களுக்கும் ஏற்பட்ட முதல் சம்பந்தமாகும். மத்தேசு பெயரால் வெட்டப்பட்ட நீரோடையொன்று “மத்தேசு வாய்க்கால்” என்று இன்றைக்கும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஊர்காவற்றுறையில் குடியேறிய பூர்வ குடிகளில் முதலி வம்ஷமும் ஒன்றாகும். இவர்கள் போதுக்கீசரோடு சம்பந்தம் செய்தபடியால் “பறங்கியர்” என்னும் பட்டப் பெயரோடு அழைக்கப்படலானார்கள். இவர்களுடைய பூர்வீகத் தொழில் நெசவு வேலையாகும். ஊர்கவற்றுறையில் பருத்தி விளைச்சல் அதிகமாக இருந்தபடியாலும், போத்துக்கீசரின் சலுகைகள் அதிகம் கிடைத்ததாலும் நெசவுத் தொழில் பல வழிகளிலும் முன்னேறியது. காலகதியில் ஒருவித வேரினால் சேலைகளுக்குச் சாயம் தோய்க்கவும், வேலைபாடுகள் போடவும் கற்றுக் கொண்டதினால் “வேர் குத்தும் பறங்கியர்” என்னும் பிறிதொரு பட்டப் பெயரையும் இவர்கள் பெறலாயினர்.

இக்குலத்தவர்கள் நெடுந்தீவிலும், வண்ணார்பண்ணையிலும், புங்குடுதீவிலும் பரந்து வாழ்ந்தர்கள். இவர்களுள் தலைமையாக விளங்கியவர் வீரசிங்க முதலியாகும். இவர் நெடுந்தீவில் தலமை அதிகாரியாக இருந்தார். இம்முதலி வம்சத்தாரின் செல்வாக்கையும், பண்டைப் பெருமையையும் எடுத்துக்காட்ட நெடுந்தீவில் பல சரித்திரச் சான்றுகள் உண்டு. ஊர்காவற்றுறையில் மேற்கு வட்டாரம் முழுவதும் இவர்களுக்கே சொந்தமாக இருந்தது என்பதற்குச் சான்றாகப் பழங்கால உறுதிகளில் பறங்கித் தோட்டம், பறங்கி வளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிபிட்த்தக்கது. பறங்கியர் என அழைக்கப்பட்டுவந்த இவர்கள் முதலி வம்சத்தவர்களின் பரம்பரையினர் ஆவர்.

Sharing is caring!

Add your review

12345