எழுத்தாளர் தணிகாசலம்

எழுத்தாளர் தணிகாசலம்

அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் தணிகாசலம் (தோற்றம் – 28.09.1946) ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கினை வாழ்விடமாகக் கொண்டுள்ளார். அச்சகத் தொழிலையும் விவசாயத்தையும் குடும்ப வருமானமாகக் கொண்டு வாழ்க்கை நடாத்தி வரும் இவர் யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஸ்ட தராதர வகுப்பு வரை பயின்று கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திக் கொண்டார். இதன் பின்னர் ஈழத்து இலக்கிய உலகில் கால் பதித்த இவர் சிறுகதை, கவிதைகளை பத்திரிகையில் எழுதி வராலானார். தேசிய கலை, இலக்கியப் பேரவையின் இணைச் செயலாளராக 1974ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகின்றார். தனது பதினெட்டாவது வயதில் இருந்து இலக்கியப் பணி ஆற்றி பலரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள கந்தையா தணிகாசலம் ( எழுத்தாளர் தணிகாசலம் ) ”தாயகம்”  என்னும் ஈழத்துச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக செயற்பட்டு வருகிறார். இச்சஞ்சிகை ஒரு கலை, இலக்கிய விஞ்ஞானத்தை உள்ளடக்கி வெளிவரும் சஞ்சிகையாகும்.

பொறுப்பு வாய்ந்த ஆசிரியராக இருந்து ”தாயகம்” சஞ்சிகையை வழிநடத்தி வரும் எழுத்தாளர் தணிகாசலம் இச்சஞ்சிகையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறார். ஈழத்தில் கனதியான ஆக்கங்களைப் படைத்துள்ள இப்படைப்பாளியின் புனைபெயர் ”கணிகையன்” ஆகும். இப்புனைபெயரிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. வேலிகள், அகதி, நாய்களோ, பிரம்படி முதலான நல்ல சிறுகதைகளை ஈழத்து வாசகர்கள் முன் படைத்து அளித்துள்ள இவரின் ”பிரம்படி” என்னும் சிறுகதைத்தொகுதி 1988ம் ஆண்டில் சென்னை புக்ஸ் சென்ரரின் வெளியீடாக வெளிவந்தது. இவரால் எழுதப்பட்ட மற்றொரு சிறுகதைத் தொகுதியான ”கதை முடியுமா” தொகுதி 1995ம் ஆண்டு சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் சென்ரரின் வெளியீடாகப் பிரசுரமானது. இது தவிர இவரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல் 2002ம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வெளி வந்தது. நாடகத்துறையிலும் ஆற்றல் மிக்கவராக எழுத்தாளர் தணிகாசலம் அவர்கள் விளங்கியுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345