எழுத்தாளர் துருவன்

துருவன்

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகவிருந்து மிக இளம் வயதிலே அமரத்துவம்  அடைந்த துருவன் என்னும் எழுத்துலகப் புனைபெயர் கொண்ட அமரர் கனகரத்தினம் பரராஜசிங்கம் (22.11.1943 – 07.04.1989) நல்லூர் செங்குந்தா இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் சிறப்புப் பட்டதாரியானவர். தனது கல்லூரி ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் விளங்கிய சிவ சரவணபவான் (சிற்பி) அவர்களின் ஆசிரியத்தின் கீழ் இயங்கிய ”கலைச்செல்வி” சஞ்சிகையின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த துருவன் கல்லூரி மாணவர் சஞ்சிகையான ”சுடரொளி” யிலும் தன் எழுத்தின் தடம் பதித்தவர். குறுகிய காலத்துள் பெருவிருட்சம் போல் படர்ந்து இலக்கிய உருப்பெற்றவை இவரின் சிறுகதைகளாகும்.

இவரின் தந்தையார் நகைச்சுவைப் பாத்திரங்களில் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்ற ”பபூன் சின்னத்துரை” என அழைக்கப்பட்டவர். அவர் வழியில் இவரும் நாடக நடிகராகவும், நாடக எழுத்தாளராகவும், இயக்குனராகவும் விளங்கியவர். நகைச்சுவை ஆக்கங்களைப் படைப்பதிலும் இவர் வல்லவராக விளங்கினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முகிழ்ந்த பிரபல எழுத்தாளர்களான செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், குந்தவை, அங்கையன், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், சிதம்பரபத்தினி, முதலானவர்களின் சமகால பல்கலை மாணவனாக துருவன் அவர்களும் எழுத்துலகில் ஒன்றாக படைப்பிலக்கியம் தந்தவர். அறுபது எழுபதுகளில் புனைகதைகள் படைப்பதில் போட்டியிருந்தது. அந்தப் போட்டியினூடே வளர்ந்த எழுத்தாளர் துருவன் ”பூ” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் அவர் மறைவின் பின் அவரது துணைவியார் செல்வராணியால் அவர்களின் மணி விழா நாளில் நூலுருப் பெற்று வெளிவந்தது.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345