எழுத்தாளர் முத்துலிங்கம்

முத்துலிங்கம்

ஈழத்தின் முற்போக்கு சிந்தனை கொண்ட புனைகதைப் படைப்பாளியான முத்துலிங்கம் கொக்குவிலை வாழ்விடமாகக் கொண்டவர். சிறுகதைகளைப் படைப்பதில் வேறு நிலைப்பட்டுத் தனக்கென ஒரு கோணத்தில் இலக்கியம் படைத்தவர். மிகவும் கவரும் தன்மை கொண்ட இவரின் புனைகதைகள் அக்கால வாசகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சமூகப்பார்வை கதையின் களம், கதையில் பின்னிப் பிணைந்து செல்லும் பாத்திரப்படைப்பு, ஆகியன பரந்து பட்டனவாக உலகளாவியனவாக, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சிந்தனை நிறைந்தனவாக வீச்சு நிறைந்தவையாகக் காணப்படுகின்றன.

இவரின் கதைகளில் உலகின் இயற்கை வடிவங்களுக்கும், மிருகங்கள், பறவைகள் என்ற ஐந்தறிவு ஐீவராசிக்கும் இடமளிக்கப்பட்டிருக்கின்றன. மனித நேயமும், ஜனநாயகத்தின் தேவையும் நிறைந்துள்ள கதைகளை இவர் வாசகர்கள் முன் நிலைப்படுத்திக் காட்டியுள்ளார். கோடை மழை, பக்குவம், அக்கா ஆகிய கதைகள் மிகவும் தரம் மிக்கவை. மண்வாசனை கொண்ட இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ”திகடசக்கரம்”, ”அக்கா” என்ற பெயர்களில் நூலாக வெளிவந்துள்ளன. நகைச்சுவை உணர்வோடு கதைகளை நகர்த்திச் செல்லும் இவரின் எழுத்தாக்கங்கள் பண்பாட்டுக் கோலங்களையும் நுட்பமான சமூக விழுமியங்களையும் கொண்டனவாக விளங்குகின்றன. தற்பொழுது அமெரிக்க நாட்டில் இவர் புகலிடம் தேடி வாழ்வதாக அறியப்படுகிறது. முற்போக்குக் காலகட்டத்தில் புனைகதைகள் வெளியிட்டுள்ள முத்துலிங்கம் மேலும் ”வம்சவிருத்தி”, ”வடக்கு வீதி” ஆகிய சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது. இந்நூலுக்கு தமிழ்நாடு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345