எழுத்தாளர் முனியப்பதாசன்

முனியப்பதாசன்

எழுத்தாளர் முனியப்பதாசன் என்னும் புனை பெயரில் ஈழத்து எழுத்துலகில் அறிமுகமான அமரர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன் (தோற்றம் – 1944) 1964ம் ஆண்டு ”கலைச்செல்வி சஞ்சிகை” நடாத்திய சிறுகதைப் போட்டியில் ”வெறியும் பலியும்” என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசினைப் பெற்றுக் கொண்டார். அந்த முதற் சிறுகதையே முதிர்ந்த எழுத்தாக விளங்கியமை பலரை வியப்பில் ஆழ்த்தியது. கனதியான புதியதொரு சிறுகதையைத் தந்த படைப்பாளியை இனம்கண்டு ஈழத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமையை ”கலைச்செல்வி” சஞ்சிகை ஆசிரியர் சிற்பி சரவணபவான் தனதாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் அக்கல்லூரியின் அயலிலேயே வாழ்ந்து வந்தவர். எழுத்தாளர் முனியப்பதாசன் எழுத்துலகில் பிரவேசித்து 1967ம் ஆண்டு வரையான மூன்றாண்டு காலப்பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரை எழுதியுள்ளார். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் மிகக் குறுகிய மூன்றாண்டு காலத்துக்குள் அற்புதமானதும் தனித்துவமானதுமான சிறுகதைகளைத் தந்த இந்த படைப்பாளி மூன்றாண்டு காலத்தில் மறைந்துவிட்டார் என்பதாகும்.

தனது மூன்று தசாப்தங்கள் நிறைவுறாத அகவையில் ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்கு அவர் அளித்திருக்கின்ற செழுமை மிக அதிகமாகும். அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பினை இதுவரை எவராலும் சரிவரக் கணிப்பீடு செய்ய முடியாமைக்குக் காரணம் இவரது ஆக்கங்கள் உதிரிகளாகப் பத்திரிகையிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்து ஒருங்கே தொகுக்கப்படாமல் கிடந்தமையாகும். ஈழத்து முன்னணி எழுத்தாளர் செங்கை ஆழியானும், மல்லிகை சஞ்சிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் இணைந்து முனியப்பதாசன் அவர்களின்சிறுகதைகளைத் தேடிப்பிடித்து தொகுத்து நூலுருவில் வழங்கியமை ஈழத்து இலக்கிய உலகமும், வாசகர்களும் செய்த பாக்கியமேயாகும்.

இவ் எழுத்தாளர் ஆனமீகத் துறையில் பெற்ற முழுமையான தெளிவின் காரணமாக சித்தன் போக்கு சிவன் போக்காக வீதிகளில் அலைந்து திரிந்த நிலையிலும் அவரது உள்ளொளி தெளிவாகவே இருந்தது. எங்கோ ஒரு மூலையில் தேடுவாரற்றுப் போயிருக்க வேண்டிய இவரது சிறுகதைகளையும், இப்படைப்பாளியின் வாழ்வு பற்றியும் அறியத்தந்தவர்களை இலக்கிய உலகம் என்றும் நினைவு கூரும்.

படைப்புக்களில் சில

•வெறியும் புலியும்
•ஆன்மீகத் தேர்தல்
•அம்மா
•நிமிடப் பூக்கள்
•துறவி
•சத்தியத்தின் குரல்
•பிரவாகம்
•ஆணிவேர்
•அழிவும் தேய்வும்
•மேவுவீர் தீக்கொண்டு தோழரே
•பிரபஞ்சப் பூ
•சந்திரிகை என்பன இவரது உன்னத சிறுகதைப் படைப்புகள்.

முனியப்பதாசனின் சிறுகதைகள் – சிறுகதைத் தொகுப்பு

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345