எழுத்தாளர் யோகநாதன்

எழுத்தாளர் யோகநாதன்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் நல்லூர் கிழக்கு மூத்த விநாயகர் வீதியை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் எழுத்தாளர் யோகநாதன். அமரர் செ. யோகநாதன் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முக்கியமானவர்களுள் ஒருவராக விளங்கும் இவர் தமிழுலகம் நன்கறிந்த ஈழத்தின் படைப்பாளி. இம்மண்ணில் இன்று வாழும் எழுத்துலக பிரபலங்களை இனம்கண்ட சிற்பியின் கலைச்செல்வி ”சஞ்சிகை மூலம்” ”மனக்கோலம்” என்னும் சிறுகதையை எழுதி இலக்கியத் துறைக்குள் புகுந்தவர் இவர்.

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த காலத்திலேயே எழுத்துலகில் பிரவேசித்து ஈழத்து எல்லாப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை இவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்திய மாநிலமான தமிழகம் நன்கறிந்த ஈழத்து எழுத்தாளராக விளங்கிய இவர் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் ”இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்” என்ற பெயரில் இரண்டு பாரிய சிறுகதைத் தொகுதிகளான ”வெள்ளிப்பாதரசம்”, ”ஒரு கூடை கொழுந்து” என்பவற்றை வெளியிட்டு ஈழத்தின் பலதரத்து எழுத்தாளர்களின் பேராற்றலை உலகறியச் செய்தவர்.

முற்போக்குச் சிந்தனையும், தமிழ்த் தேசியவாதமும், மண்வாசனையும், எம் மண்ணின் சாதிப் பிரச்சினையும், போராட்ட வரலாற்றில் தமிழ்ச் சமுதாயம் பட்ட அவலங்களும் எழுத்தாளர் யோகநாதன் கதைகளில் பின்னிப் பிணைந்து வாசிக்கத் தூண்டும் உத்வேகத்தையும் கொண்டிருந்தன. அமரர் செ. யோகநாதனின் எழுத்துலகச் செயற்பாடு தங்கப் பதக்கங்களைப் பரிசில்களாகத் தன் படைப்புக்களுக்காகப் பெறுவதுடன் ஆரம்பமாகியது. இளம் எழுத்தாளர் சங்கம், பல்கலைத் தமிழ்ச் சங்கம் ஆகியன நடாத்திய இலக்கியப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இவர் பெற்றுக் கொண்டார். சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற இவரது ”ஒளி நமக்கு வேண்டும்” என்ற குறுநாவல் யுனெஸ்கோ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இது தவிர தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களான பாலு மகேந்திரா, லெனின் ஆகியோருடன் இவர் கூட்டாகத் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். ”கண்ணாடி வீட்டினுள் இருந்து ஒருவன்” என்ற மலையாளப் படத்திற்கு இவர் கதை வசனம் எழுதியுள்ளார். இப்படைப்பாளியின் பங்கு ஈழத்து இலக்கிய உலகில் செழுமை மிக்கதாகும்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

1 review on “எழுத்தாளர் யோகநாதன்”

Add your review

12345