எழுவை தீவு

இத்தீவானது யாழ்ப்பாண நகரின் தென்மேற்குத் திசையில் அனலைதீவிற்கு அண்மையில் அமைந்துள்ளது. ஊர்காவற்றுறையிலிருந்து மூன்றுமைல் தூரத்திலுள்ளது. ஆரம்பகாலத்தில் எழுச்செடிகள் நிறைந்த குடியேற்றமற்ற தீவாகவேயிருந்தது. இத்தீவில் எழுச்செடிகள் நிறைந்து காணப்பட்டதால் எழுவைதீவு எனப் பெயர்வந்ததாகக் கூறுவர். இத்தீவானது இந்தியாவிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி வருபவர்களுக்கு கிழக்குத் திசையில் முதல் தெரிவதால் இதற்கு எழுவைதீவென்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். ஒல்லாந்தர் காலத்தில் அனலைதீவிலிருந்தே மக்கள் முதலில் வந்து குடியேறியதாகக் கூறப்படுகின்றது. முதலில் இங்கு குடியேறிய மக்கள் அனைவரும் சைவத்தினரென்றும் பின்னரே மீன்பிடித்தொழிலுக்காக வெளியூர்களிலிருந்து சில கத்தோலிக்க குடும்பங்கள் வந்து குடியேறினர் என்றும் கூறப்படுகின்றது. இங்கு மணல் செறிந்து காணப்படுவதோடு பனைமரங்கள் பரவலாகத் தீவெங்கும் செறிந்து காணப்படுகின்றன. இங்குள்ள தென்பகுதி இறங்கு துறையில் ஒரு தொம்மையப்பர் தேவாலயமும், துறைமுகத்திலிருந்து கால் மைல் தூரத்;தில் முத்தன் காடு என்ற இடத்தில் ஒரு முருகன் ஆலயமும் இருக்கின்றன. இவ்வாலயத்தை ஈழத்துத் திருச்செந்தூரென அழைப்பர். இங்கு தென்பகுதி மக்கள் மீன்பிடித் தொழிலையும், வடபகுதி மக்கள் பனம் தொழிலையும் முற்காலத்தில் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். தனிநாயக முதலி காலத்தில் நெடுந்தீவிலிருந்து அனலைதீவில் குடியேறிய பரம்பரை மக்களில் சிலரே எழுவைதீவின் ஆரம்பக் குடிகள் எனவும் கூறுவார்கள்.

Sharing is caring!

2 reviews on “எழுவை தீவு”

  1. தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது ஊரின் பெயர் எழுவரை முக்கி. 18-ம் நூற்றாண்டில் எழுகரை முகரி என அழைக்கப்பட்டதா பழைய வில்லுப்பாட்டுகளில் வருகிறது. எழுகரை, எழுவை என்பவை எல்லாம் யாழ்ப்பாணத்தோடு தொடர்புடையாகவே தோன்றுகிறது. எனவே எனது ஊரான எழுவரை முக்கிக்கிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கலாம் என எண்ணுகிறேன்.

  2. நன்றி திருத்துவராஜா. தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளதென எல்லாரும் கூறுகிறார்கள். அது காரணமாகத்தான் அமைந்திருக்கும். எனினும் எனது பேராசிரியரின் கேட்டு தகுந்த பதிலை இடுகிறேன் பின்னர்.

Add your review

12345