ஏழாலை

ஏழாலையில் ஆதியில் நாகரினத்தவரே குடியிருந்தனர். நமது ஊர்க் குடிமக்கள் பிற்காலத்தில் இந்திய மண்டலத் தமிழரோடு ஒன்று கலந்து தமக்கென கிராமமும் கோட்டமும் அமைத்துக்கொண்டனர். ஏழாலைவாழ் மக்கள் பண்டுதொட்டு நாகரிகம் வளர்ந்த தற்காலம் வரை நாகதேவன் நாகதேவி எனத் தமது வழிபடு கடவுளை பக்தியோடு பூஜிப்பதும் அப்பெயர்களை தம் சந்ததியாருக்கு இட்டு வழங்குவதையும் காண்கின்றோம்.

இன்று யாழ்நகரிலிருந்து இரு நெடுஞ்சாலைகள் வடதிசையில் நீண்டு கிடப்பதைக் காணலாம். ஒன்று காங்கேசன்துறை வீதி மற்றொன்று பலாலி வீதி. இருவீதிகளும் சமாந்தரமாக நீண்டு சென்று கடலோரத்தில் முறையே காங்கேசன்துறையிலும் பலாலியிலும் ஒன்றி நிற்பவை.

காங்கேசன்துறை வீதியூடாக சரியாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் சுன்னாகம் சந்தியுள்ளது. அச்சந்தியின் கிழக்கு பக்கமாக செல்லும் புன்னாலைக் கட்டுவன் தெற்கு சந்தியை ஊடறுத்து புத்தூர் வரை செல்லும். புன்னாலைக்கட்டுவன் தெற்கு சந்தியில் இருந்து முன்னர் நாம் குறிப்பிட்ட பலாலி வீதி வடக்கு புன்னாலைக்கட்டுவனூடு செல்லும். இவ்வீதியின் மேற்கு திசையில் சுமார் கால் மைல் தூரம் சென்றால் ஏழாலையின் கிழக்கு எல்லையை அடையலாம்.

சுன்னாகம் புத்தூர் வீதி ஏழாலையின் தெற்கு எல்லை. சுன்னாகம் சந்தியிலிருந்து இவ்வீதியில் 0.25 மைல் தொலைவில் சுன்னாகம் புகையிரத நிலையம் உள்ளது. புகையிரதப் பாதை வடதிசையாக மல்லாகம்இ தெல்லிப்பழையை கடந்து செல்லும். இப்பாதை எமது ஊரின் மேற்கு எல்லை. தெல்லிப்பழையிலிருந்து கிழக்கு நோக்கி அச்சுவேலி நோக்கிச்செலலும் சாலை கட்டுவன் என அழைக்கப்படும் மையிலிட்டி தெற்குச்சந்தியில் மல்லாகம் செல்லும் வீதியோடு இணையும். இச்சந்தியிலிருந்து தெற்கே 0.5 மைல் சென்றால் குரும்பசிட்டி கட்டுவன் புதுவீதியை அடையலாம். அதுவே  ஊரின் முந்திய வடஎல்லை. இந்த எல்லைகள் பிற்காலத்திலே ஆட்சி அதிகாரஞ்செலுத்திய குழுக்களினால் தாம் கொண்டதே கோலம் என மாற்றி அமைக்கப்பட்டன.

ஏழாலையூரிலே முதலில் குடியேறிய மக்கள் சிறு சிறு குடும்பங்களோடு நெடுங்கண்ணிக் குளத்தினை மையமாக கொண்டே ஒன்று சேர்ந்தனர். அவர்கள் நிரந்தரமாக தங்கி வாழ்வதற்கேற்ப புவி அமைப்பு, மண்வாசி போன்றவை அங்கு அதிஸ்டவசமாக கிட்டின. வாழ்வுக்கு இன்றியமையாத நீர் நிலை அவர்களுக்கு பெருவாய்ப்பைக் கொடுத்தது.

அக்காலத்திலே மாதம் மும்மாரி பொழிந்து வடக்கு வடமேற்கு திசைகளிருந்து பாய்ந்தோடிய வெள்ள நீர் அக்குளத்தினை நிரப்பி மறுகரையாகிய தென்திசை வாய்க்கால் வழி வழிந்தோடும்.

இவ்வாறு ஆரம்பித்த ஏழாலை மக்களின் குடியேற்றம் படிப்படியாக ஒவ்வொரு குறிச்சியாக வியாபித்து ஏழாலையாக உருவாகியது.

நன்றி : ஏழாலை இணையம்
மேலதிக தொடர்புகளுக்கு ஏழாலை

Sharing is caring!

Add your review

12345