கருங்காலி கிராமம்

போசுட்டி முருகன்
கருங்காலி கிராமம்

காரைநகரில் கருங்காலி எனும் சிறுகிராமம். யாழ் மாவட்டத்திலுள்ள சப்த தீவுகளில் காரைதீவும் ஒன்றாகும். 1869ம் ஆண்டு பொன்னாலை காரைதீவை இணைக்கும் பாலம் அமைக்கப் பெற்றதனாலும், மட்டக்களப்பிலும், புத்தளம் பகுதியிலும் இப்பெயர் கொண்ட காரைதீவு இருந்த காரணத்தினாலும், யாழ் மாவட்டத்தில் உள்ள இக்காரைதீவினைக் “காரைநகர்” என மாற்ற வேண்டுமென சேர். பொன். இராமநாதன் அவர்கள் எடுத்த பெருமுயற்சியினாலும் 12.09.1923 இலிருந்து காரைதீவு காரைநகர் ஆயிற்று. இது பாலகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம், வலந்தலை, களபூமி எனும் கிராமங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இக்கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவம் உண்டு.

இக்கட்டுரையின் முக்கிய கருப்பொருளான “கருங்காலி” என்னும் கிராமத்தைப் பற்றியும் அதன் உள்ளடக்கங்கள் பற்றியும் எழுதுவது சிறப்பாகும். காரைநகரில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் இன்றுவரை பின்தங்கிய கிராமமாகவே இது அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கருங்காலி என்னும் மரங்கள் இருந்த காரணத்தினால் தான் இக்கிராமம் கருங்காலி எனப்பெற்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும் இதுவரை சரியான காரணம் கண்டறியப்படவில்லை.

இக்கிராமத்தின் வடக்கொல்லைகளாக வாரிவளவுபகுதியும், பால்குத்திமடம், சின்னமுருகர் கேணி, புல்லந்தோட்டம் என்பனவும் கிழக்கொல்லைகளாக சாத்தா வயல்பகுதியும், பெரியதம்பிரான் கோவிலும், செட்டிதோட்டப் பகுதியும், தென்பகுதி எல்லைகளாக வயல்களும், வியாவில் கிராமமும், மேற்கெல்லை முழுவதுமாக கடற்பகுதியும் அமைந்துள்ளன. அவை கிளிசை, புளியடி, கேசடை, வேர்க்குளம், செட்டிதோட்டம், வேரப்பிட்டி என்பனவாகும்.

வீரநாராயணன் என்பவன் மாவீரன் வெடியரசன் கீழ் தொல்புரம் என்று விளங்கும் நிலப்பரப்பை இராஜதானியாகக் கொண்டு மேற்கே “மிருமஞ்சிமலை” என்கின்ற இன்றைய வேரப்பிட்டியில் (வீரநாராயணன்பிட்டி) மண் வீரர்கள் அடங்கிய புழுதி மணர்ப்பிட்டிக் கோட்டையை அமைத்தான் என விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு (எழுதியவர் காரையூர் சிவப்பிரகாசம்) என்னும் நூலில் (1988 பக். 103) கூறப்பட்டுள்ளது.

இக்கிராமத்தின் மண்வளம் இடத்துக்கிடம் வித்தியாசமான வகையில் காணப்படுகின்றது. கிளிசைப் பகுதியையும் அதனை ஆண்டிய பகுதியையும் நோக்கும்கால் இப்பகுதி செம்பாட்டு மண்(சிவப்பு) நிறைந்ததாகக் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் மலைபோன்ற கற்பாறைகளும் காணப்பட்டன. அவை யாவும் 1960ம் ஆண்டிற்கு முன் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக அந்நிலத்தில் இப்பொழுது வாழை, தென்னை, முருங்கை மற்றும் பயன்தரு பயிர்கள் பயிரிட்டு அதன் மூலம் பயன் பெறுகின்றார்கள். தத்தம் காணி எல்லைகளைப் பலப்படுத்தும் நோக்கில் பூவரசு, முள்முருக்கு, கிளுவை ஆகிய கதியால்களை நாட்டி வைத்தனர். இப்பகுதியில் உள்ள கிணற்றுநீர் உப்புத்தன்மை கொண்ட காரணத்தினால் இங்குள்ளவர்கள் மழைநீரையும், வயற்கரைகளில் உள்ள கிணற்று நீரையுமே நம்பி வாழ்கின்றனர்.

இக்கிராமத்தின் தென்மேற்கு மற்றும் மேற்குப்பகுதி கடற்கரையை அண்டி இருப்பதனால் அங்கு வெள்ளை மணல் நிறைந்து காணப்படுகிறது. இதன் பெரும்பகுதியின் சொந்தக்காரரான சண்முகம் பல்லாண்டு காலமாக மணல் விற்பனையில் ஈடுபட்டுவந்தவர். இவரை இப்பகுதி மக்கள் கொக்கைத்தடி சண்முகம் என அழைப்பதுண்டு. காரணம் இம்மனிதரே இக்கிராமத்தில் மிக உயரமானவர் என்பதாகும். மூளாய், சுழிபுரம்இ, சித்தன்கேணி, சங்கானை ஆகிய கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து வண்டிகளில் மணல் எற்றிச் செல்வதுண்டு. மணல் ஏற்றும்பொழுது இரண்டொருவர் மணலில் புதைந்ததுமுண்டு. சண்முகம் அவர்களை விட வேலுப்பிள்ளை உடையார் நாகலிங்கம் ஆகியோரும் மணல் விற்பனையில் ஈடுபட்டாலும் பெரிதும் பிரகாசிக்கவில்லை. 1980களின் பின் மணல் விற்பனை வெகுவாக குறைந்து காணப்பட்டது. சில பகுதிகளில் இடையிடையே களிமண்ணும் காணப்படுகிறது.

புவியியல் பேராசிரியர் பொன்னம்பலம் இரகுபதி அவர்கள் வேரப்பிட்டியில் மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் பயனாக தனது “Early settlement in Jaffna” என்னும் நூலில்(1987 பக்.15-16) இரண்டு புகைப்படங்கள் மூலமாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “வேரப்பிட்டி, காரைநகர் பழங்கால துறைமுகக் குடியேற்றப்பகுதியும் இக்கால மீன்பிடி கிராமமும்” ஆகும் என்கிறார். அத்துடன் இங்கு முருகைக் கற்கள், சுண்ணாம்புக் கற்களும் காணப்பட்டதாகவும் இப்பகுதி 5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதும் உயரமான பகுதி என்றும் கூறுகின்றார்(பக். 46).

இக்கிராம மக்கள் விவசாயத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தனர். நெற் செய்கையில் கூடிய கவனம் செலுத்தினர். இது வானம் பார்த்தபூமி என்பதால் சில வேளைகளில் நட்டம் அடைந்துள்ளனர். இவர்கள் நெல் அறுவடை முடிந்ததும் எள்ளு, பயறு, குரக்கன், சணல் போன்ற சிறு தானியங்களை விதைத்து அதிக பயன்பெற்றனர். அதனால், அந்த நல்லெண்ணை ஊர் எள்ளு எண்ணெய் எனப் பெயர்பெற்றதுடன் அதற்கான கிராக்கியும் ஏற்பட்டது. கோடை காலத்தில் கத்திரி, மிளகாய், வெள்ளரித் தோட்டங்களும் செய்தனர்.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. அதற்கிணங்க இக் கிராம மக்கள் தத்தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இலங்கையின் பல நகரங்கள், கிராமங்களில் வியாபாரத்தை ஆரம்பித்து பெரும் பொருளீட்டி வந்தனர்.

க. நாகமுத்து – ரூவான்வெல்லை
பொன்னம்பலம் – கடவத்தை
ஆ. சுப்பரமணியம் – கடவத்தை
க. ஆ. கந்தையா – பதுளை
ஆ. சொக்கலிங்கம் – பதுளை
வே. சுந்தரலிங்கம் – பதுளை
நாகலிங்கம் நவரட்ணம் – நமுன்க்கொல்லை
நாகமுத்து நடராசா – வவுனியா
திருவாதர் தர்மராசா – வவுனியா
கார்த்திகேசு தேவராசா – வவுனியா
மு. கனகசுந்தரம் புத்திரர்கள் – வவுனியா
நாகமுத்து சுந்தரலிங்கம் – வவுனியா
கைலாயபிள்ளை கோபாலபிள்ளை – மட்டக்களப்பு
குமாரவேலு நவரட்ணம் – மட்டக்களப்பு
கந்தையா கணேசன் – கொச்சிக்கடை
க. இராமலிங்கம் – எட்டியாந்தோட்டை
அ. நடராசா – எட்டியாந்தோட்டை
நல்லதம்பி ஆறுமுகம் – கொழும்பு
திருவாதர் யோகேஸ்வரன் – கொழும்பு
நாகமுத்து கந்தசாமி – யாழ்ப்பாணம்
க. வேலுப்பிள்ளை – யாழ்ப்பாணம்
திருவாதர் கந்தசாமி – யாழ்ப்பாணம்
கந்தையா சோமசேகரம் – யாழ்ப்பாணம்
கந்தையா சண்முகம் – யாழ்ப்பாணம்
கந்தசாமி நந்தகுமார் – யாழ்ப்பாணம்
நாகமுத்து கந்தசாமி – யாழ்ப்பாணம்
கந்தையா சிவபாதம் – சுண்ணாகம்
புலம் பெயர் நாடான கனடாவில் “சங்கமம்” பெயரில் வானொலிச் சேவையை நடத்தியது மட்டுமின்றி அந்நாட்டில் முதன்முதலாக 24 மணிநேர தமிழ் வானொலி நிலையத்தை கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனும் பெயரில் நடத்திக் கருங்காலிக் கிராமத்தை சேர்ந்தவரே. இது இக்கிராமத்திற்கும் பெருமை அளிக்கின்றது. இவர்களைவிட வேறுபலரும் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

மேற்கூறியவர்களைவிட அம்பலவாணர் கந்தையா, கந்தையா அருணாசலம், கந்தையா காசிநாதர்(சின்னத்துரை), சைவம் சிவகுரு, முருகப்பர் தம்பையா, சின்னப்பு கந்தசாமி(இளவாலை), இளையதம்பி கணேசன், முருகேசு நீலாவதி ஆகியோர் இக்கிராமத்திலே கடை வியாபாரம் செய்து வந்தனர். இவர்களில் அம்பலவாணர் கந்தையா ஐம்பது வருடங்களுக்கு மேலாக வியாபாரத்தை நடத்தி வந்தார். இது ஒரு கூப்பன் கடை என்பதால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. சு.தம்பாபிள்ளை என்பவர் சைக்கிள் திருத்தும் கடையை வைத்திருந்ததுடன் சைக்கிள்களை வாடகைக்கு விட்டிருந்தார்.

இங்கு சுருட்டுத் தொழிலும் சிறு கைத்தொழில் போன்று பிரபல்யம் பெற்றிருந்தது. ஆ. கிருணபிள்ளை, வே. கணபதிப்பிள்ளை, வேலாயுதர் தம்பையா வைத்தியலிங்கம் கைலாயபிள்ளை போன்றோர் சுருட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி சுருட்டு தொழிலைச் சிறப்புறச் செய்து வந்தனர். இவர்களிடத்தில் சுருட்டுத் தொழிலாளர்களாக இக்கிராமத்தைச் சேர்ந்த காசுபதி தம்பையா என்றழைக்கப்பட்ட நல்லதம்பி, வே. கந்தையா, இ. வேலுப்பிள்ளை, இராமசாமி பொன்னம்பலம், கதிரவேலு கந்தசாமி, ஆகியோர் கடமையாற்றினார். இவர்களில் காசுபதி தம்பையா என்றழைக்கப்படும் நல்லதம்பி அவர்களே நாளொன்றிற்கு அதிகூடிய (1000க்கு மேல்) சுருட்டுக்களைச் சுருட்டினார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேலும் இக்கிராமத்தில் வண்டில் மாடு வைத்து தொழில் செய்தோருமுளர் . இவர்களில், குழந்தையர் பொன்னம்பலம், இ.குமாரவேலு, இ.கதிரவேலு, வெற்றியர் கதிரவேலு, சோமசுந்தரம், ராசன் போன்றோர் முக்கியமானவர்கள்.

இக்கிராமத்தில் ஆசிரியர்கள் பலர் இருந்தனர். இவர்களில் சட்டம்பி இராமர்,  நாட்சி பொன்னம்பலம், முருகேசு நல்லதம்பி, வேலுப்பிள்ளை இரகுநாதன், அருணாசலம் தேவராசா, நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை, ஆறுமுகம் அன்னமுத்து, வைத்தியலிங்கம் நல்லம்மா, நாகலிங்கம் தியாகராசா ஆகியோர் இக்கிராம மக்களுக்கு அறிவொளியூட்டிய வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையில் கற்பித்தவர்களாவர். ஏனையோர் பரமநாதர் விக்னேஸ்வரன் (வட மாகாண கல்விப்பணியாளர்), க. சரவணமுத்து, கந்தசாமி சண்முகநாதன், அருணாசலம் மகேந்திரன், பரமநாதர் திருஞானசம்பந்தன், கந்தசாமி அருளானந்தம், கந்தசாமி செல்வமலர், சுப்பிரமணியம் மகேஸ்வரன், மு. வைரமுத்து ஆகியோராவர்.

இவர்களில் அருணாசலம் தேவராசா அவர்கள் வியாவில் கூட்டுறவுச் சங்க வளர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்பணித்தவர்.

முருகேசு நல்லதம்பி அவர்கள் இக்கிராமத்தவர் மத்தியில் சமய வளர்ச்சியிலும் கருங்காலி போசுட்டி முருகன் ஆலய வளர்ச்சியிலும் பெரும்பங்கு கொண்டு உழைத்தவர். இளைப்பாறிய பின்னர் சமாதான நீதவானாகவும் பதவி வகித்தவர்.

க. சரவணமுத்து ஆசிரியர் அவர்கள் தெரிந்த காலம் முதல் கருங்காலி போசுட்டி முருகன் ஆலய திருவிழாக் காலங்களில் அங்குள்ள மடத்தில் கோவில் திருவிழாவுக்கென வரும் மக்களுக்கு தாகசாந்தி வழங்குவதில் பெரும்பங்கு கொண்டுழைத்த தனிமனிதர் என்பதுடன் தனது ஆசிரியத் தொழிலைச் சிறப்புறச் செய்தவர்.

நாச்சி பொன்னம்பலம் என்பவரை இப்போதுள்ள பலருக்குத் தெரியாது.  1947ம் ஆண்டு அரிவரி வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு இருந்து படிப்பதற்கு மேசை, கதிரை இருக்கவில்லை. பதிலாக அவர்கள் நிலத்தில் இருந்தே படித்தனர். அவர்கள் முன்னால் மணல் பரவப்பட்டிருக்கும் அந்த மணலில் “அ” என்ற உயிரெழுத்து முதல் மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துகள் என்கின்ற எழுத்துகளை எழுதவேண்டும் அதுவும் வலது கைச் சுட்டுவிரலால் எழுதவேண்டும். சரியாக எழுதாவிடத்து நாச்சி பொன்னம்பலம் அவர்கள் விரலைப்பிடித்து மண்ணில் ஊன்றி எழுதுவார். அப்பொழுது விரல் வலிக்கும், இரத்தம் வராத குறையாக இருக்கும். இதனால் பலர் அழுவதுண்டு. இவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் வாழ்கையில் நன்கு முன்னேறி இருக்கின்றனர். அவரின் அன்றைய சேவையைப் பற்றி பலர் இன்றும் பேசிக் கொள்கின்றனர். இவர் கந்தபுராணம் படித்து பொருள் கூறுவதிலும் வல்லவர். கருங்காலி போசுட்டி முருகன் கோவலில் கந்தபுராணம் படித்து பொருள் கூறுவார். பரமநாதர் விக்னேஸ்வரன் தனது ஆரம்பக் கல்வியை வியாவில் சைவப்பரிபாலன வித்தியாசாலையில் மேலே கூறப்பட்ட ஆசிரியர்களிடமும் வேறு ஆசிரியர்களிடமும் பெற்றவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் பல்கலைக்கழகம் சென்று தேறி ஆசிரியத் தொழிலில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி அதிபர், வடமாகாண கல்விப் பணியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது வடமாகாண கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து இப்பொழுது வடமாகாணக் கல்வித் திணைக்களத்தில் உதவிச் செயலாளராகக் கடமையாற்றுவது பெருமை தரும் விடயம் என்பதுடன் இச்சிறிய கிராமத்திற்கே பெருமை சேர்க்கும் விடயமாகும்.

மேற்கூரியவர்களைவிட வேறு சிலரும் அரசாங்க பதவிகளை வகித்துள்ளனர்.

இரகுநாதன் கனகசுந்தரம் – மருத்துவ கலாநிதி, பேராசிரியர்
செல்வி கனகரட்னம் நவமலர் – மருத்துவ கலாநிதி
பெரியதம்பி தில்லைநாதர் – இலங்கைப் போக்குவரத்துச் சபை
கந்தையா கனகரட்னம் – எழுதுவினைஞர்
கந்தையா நடராசா – அரசாங்க அச்சகம்
சிவகுரு கணேசன் – அரசாங்க அச்சகம்
சுப்ரமணியம் மகாலிங்கம் – எழுதுவினைஞர்
தம்பையா நடராசா – வருமானவரி இலாகா
நமசிவாயம் நடராசா – இலங்கை வங்கி
நமசிவாயம் பாலசுப்ரமணியம் – R.M.P. பதிவு செய்யப்பட்ட மருத்துவர்
முருகேசு நாகராசா – களஞ்சியக் காப்பாளர், உணவுத் திணைக்களம்
நாகலிங்கம் திருநாவுகரசு – கிராமசேவையாளர்
நாகலிங்கம் அருள்நந்திசிவம் – இலங்கை புகையிரத திணைக்களம்
திருநாவுகரசு ஸ்ரீஸ்கந்தராசா – கிராமசேவையாளர்
வேலுப்பிள்ளை கந்தசாமி – மரணவிசாரணை அதிகாரி
வேலுப்பிள்ளை இராமலிங்கம் – காங்கேசன் சீமெந்துதொழிற்சாலை
சறோஜினிதேவி பரமசாமி – தொலைபேசி இயக்குநர்
கந்தையா சிவசோதி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
முருகேசு கனகசுந்தரம் – காவலாளி
சிவகுரு தியாகராசா – இலங்கை போக்குவரத்துச் சபை
வேறு சிலரும் அரசாங்க பதவிகளை வகித்துள்ளனர்.

கருங்காலி கிராமத்திற்கென ஓர் உபதபாற் கந்தோர் அமையபெற்றது. இதன் முதல் உபதபால் அதிபராக இக்கிராமத்தைச் சேர்ந்த பரமசாமி பேபிசறோஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்.

கிராமசபை அங்கத்தவர்கள்

இக்கிராமம் காரைநகர் தெற்கு கிராம சபையின் இரண்டாம் வட்டாரமாகும். கந்தையா பரமநாதர் அவர்கள் இவ்வட்டார அங்கத்தவராக 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக இருந்துள்ளார். இவரை தொடர்ந்து கைலாயபிள்ளை ஏகாம்பரம், அம்பலவாணர் தம்பிராசா போன்றோரும் அங்கத்தவராக இருந்துள்ளனர்.

கருங்காலி களபூமி இணைப்பு வீதி

இவ்வீதி மேற்கு பிரதான வீதியிலிருந்து தொடக்கி கேசடைப் பகுதி வழியாக சாத்தா வயலப் பிட்டியை அண்மித்த வயல்களை ஊடுருத்தச் சென்று களபூமி சந்திதிரத்தை கிழக்கு பிரதான வீதி இன்னையும் பகுதியைச் சென்றடைகின்றது.

குளம்

இக்கிராமத்தில் ஒரேயொரு குளம் மட்டுமே அமைந்துள்ளது. இதன் பெயர் வேரக்குளம் என்பதாகும். மாரிகாலத்தில் இக்குளத்தில் நீர் நிரம்பி வழியும். தேவையேற்படின் அயலில் உள்ள வயல்களுக்கும் நீர் பாய்ச்சுவர். குளத்தில் ஆடு, மாடுகள் நீர் அருந்திவிட்டுச் செல்வது வழக்கம். கிராமத்தில் மேலதிமாக மழை பெய்தால் அந்நீர் ஓடி இக்குளத்தில் சங்கமமாகும்.

உடையார் ராமலிங்கம் நாகலிங்கம்

இங்கு பெரியவர்கள் என்ற வரிசையில் முக்கியமாக உடையார் இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களைக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இவர் 1948ல் போசுட்டி முருகன் ஆலய நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார். அதேநேரம் வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையின் முகாமையாளராகவும் கடமையாற்றி வந்தார். இவையிரண்டும் தனது இரண்டு கண்மணிகள் போன்றவை என நினைத்து கண்ணும் கருத்துமாக செயலாற்றி வந்தார்.
ஆலய நிர்வாகி என்ற வகையில் ஆலயத்தில் நேர்ந்தவராத பூஜை வழிபாடு, அவை சைவ ஆகம விதிமுறைகளுக்கேற்ப நடைபெற வேண்டுமென எண்ணி இவை அவ்வாறே நடைபெற அவன செய்தார். ஆலயத்தில் மதத்தின் பெயரால் களியாட்டங்கள் நடைபெறுவதி அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அடியார்கள் ஆலயத்திற்கு வரும்பொழுது ஆசார சீலர்களாக வரவேண்டுமேன்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலை முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில் பாடசாலை நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தினார். ஆசிரியர்களும் மாணவர்களும் நேரந்தவறாது பாடசாலைக்கு வரவேண்டும் என்பதை அறிவுறித்திய அவர் நேரந்தவறி வந்தவர்களுக்கான தண்டனையையும் தானே நேரில் வழங்கினார்.

மாணவர் ஒருவர் பாடசாலைக்கு வரவில்லை என்றால் ஆள் அனுப்பி அவரை அழைத்து வரச்செய்தார். சில வேளைகளில் தானே அம்மாணவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அம்மாணவரை அழைத்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் எல்லோரும் காலையில் கட்டாயமாக ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அப்படி ஆலயம் செல்லாமல் இருப்பவர்களை உரிய காரணம் கேட்டு விசாரிப்பார். தகுந்த காரணம் கூறாதவிடத்து தண்டனையும் வழங்கினார். வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தங்களையும், கொப்பிகளையும் இலவசமாகவே வழங்கி அவர்களின் கல்விக்கு ஊக்கமளித்தார். பாடசாலை மாணவர்கள் பசியுடன் இருக்கக் கூடாதென்பதற்காக மதிய உணவாக பாண் பருப்புக்கறி, கடலை, அவல், தோசை என்பனவற்றைத் தவறாது வழங்க ஆவன செய்தார். இவற்றைத் தயார் செய்து வழங்குவதற்காக ஆரம்ப காலத்தில் திருமதி சிதம்பரப்பிள்ளை அவர்களையும் அவரின் மறைவை அடுத்து அவரின் மகளான பாறாத்தை என எல்லோராலும் அழைக்கப்படும் பார்வதி அவர்களையும் நியமித்து ஆவன செய்தார்.

பாடசாலையில் நாயன்மார் குருபூஜைகள், நவராத்திரி என்பனவற்றைக் கொண்டாட ஆவன செய்தார். நவராத்திரி காலங்களில் மாணவர்களை வீடுவீடாக அழைத்துச் சென்று கோலாட்டம் அடித்து

“கன்னித் திங்கள் வருகிறதம்மா

கருத்துடன் நவராத்திரி பூஜை”

பாடலை மாணவர்கள் மூலமாக பாடவைத்து கிராம மக்கள் மத்தியில் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அவர்களும் பதிலுக்கு மாணவர்களுக்கு கடலை, அவல், கற்கண்டு என்பனவற்றை வழங்கி மகிழ்வுற்றனர். இதன் மூலம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் அன்னியோன்யம் சிறப்புற்று விளங்கியது.

ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்கு வரவில்லையென்று தெரிந்து கொண்டால் தானே நேரில் அவ்வகுப்புக்குச் சென்று அவரது பாடங்களைக் கற்பித்தார். பாடசாலை நேரத்துக் மேலதிகமாக மாலையிலும் வகுப்புகளை நடத்தினார். இவ்வகுப்பு நேரத்தில் மாணவர்களின் வீட்டு வேலை மற்றும் மீட்டல் வேலைகளுக்கு ஆசிரியர்கள் உதவி வந்தனர்.

இவர் ஒரு காந்தியவாதியும் கூட. எக்கூட்டங்களுக்கு செல்வதாக இருந்தாலும் காந்திய தொப்பியுடனும், கதர்வேட்டியுடனும் செல்வது வழக்கம். காரைநகர் சைவமகாசபையின் நீண்டநாள் உறுப்பினராகவும், நிர்வாகசபை உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்து சைவமகாசபையின் பெருவளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். இந்தியாவில் இருந்து இச்சபையின் சார்பில் சமய பெரியார்களையும், தமிழ் உணர்வாளர்களையும் வரவழைத்து, சைவத்திற்கும், தமிழுக்கும் அரும்பணியாற்றிய பெரியார் என்றால் மிகையாகது. வித்துவான் F.X.C நடராசா அவர்கள் உடையார் நாகலிங்கம் அவர்கள் பற்றி தாம் எழுதிய காரைநகர் மான்மியம் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

அந்தக்காலத்து பாடசாலை முகாமையலர்களுள் இவர் தனித்தன்மை வாய்ந்தவர். பாடசாலைக்கு நாள் தவறாது செல்லும்பான்மையுடையவர். காலையிலும் போவார். மாலையிலும் போவார். மாலையில் போகும்போது மல்லித் தண்ணீர் கொண்டு செல்வார். பாடசாலையை நாள்தோறும் தொடக்கி வைப்பவரும் இவர். முடித்து வைப்பவரும் இவரே. அடியேனும் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்தவன். இந்த முகாமையாளர் எனக்கு வைக்காது போயிருந்தால் நான் ஆசிரியராகப் பயிற்சி பெற்றிருக்கமாட்டேன். என்னை நிலைபேறானா ஆசிரியராக ஆக்கிய பெருமை இவருக்கே உரியது. அத்துடன் நின்றுவிடாது சைவ மகாசபையிலும், பாடசாலையிலும் நெசவு நிலையங்களை உண்டாக்கி காரைநகரில் முதன்முதலாக நெசவுதொழிலைப் பரப்ப உதவியவரும் இவரே என்பதுடன் பழக இனியவர், பேச இனியவர், கள்ளங்ககபடமற்றவர்! போதுதொண்டே இவரது ஆசையும், பாசமும் எனக் கூறி முடிக்கிறார்.

இக்கிராமத்தில் இருபாடசாலைகள் உள்ளன. அவையாவன

வியாவில் சைவபரிபாலன வித்தியசாலை

வேரப்பிட்டி தமிழ்க்கலவன் பாடசாலை

வியாவில் சைவபரிபாலன வித்தியசாலை

இப்பாடசாலை 125க்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இப்பாடசாலை இன்று மகாவித்தியாலய தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்ற பலர் அரச நிறுவனங்களிலும் வேறுபலர் சிறந்த வர்த்தக நிலையங்களை உருவாக்கி நல்லமுறையில் நடாத்தியும் வருகின்றனர். இப்பாடசாலையின் தலைமை ஆசிரியர்களாக கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த சட்டம்பி இராமர், மு. நல்லதம்பி, அ. தேவராசா, பலுகாடு கிராமத்தைச் சேர்ந்த சு. வேலுப்பிள்ளை, கதிரவேலு ஆசிரியர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த ஆ. விநாயகசிவம்பிள்ளை, வேதர் அடைப்பைச் சேர்ந்த அருளானந்தம், களபூமியைச் சேர்ந்த சி. கந்தையா மற்றும் இடைக்காட்டைச் சேர்ந்த பண்டிதர் சு. இராமசாமி ஆகியோரும் பதவி வகித்துள்ளனர். மேலும் இப்பாடசாலையில் காங்கேசன்துறையை சேர்ந்த மு. மாணிக்கம் ஆங்கில ஆசிரியராகவும், இணுவிலைச் சேர்ந்த நடராசா ஆசிரியர் நெசவு ஆசிரியராகவும், கொட்டக்காட்டைச் சேர்ந்த சுப்பையா பாக்கியம் ஆங்கில ஆசிரியராகவும், கோப்பையைச் சேர்ந்த சின்னம்மா பன்னவேலை ஆசிரியை ஆகவும், இராமுப்பிள்ளை கோமளவல்லி ஆகியோரும் கடைமையாற்றியுள்ளனர். இப்பாடசாலையில் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் துணை கொண்டு ஐவர் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பெற்றுச் சென்று அரசாங்க செலவில் வேலணை மத்திய கல்லூரியில் பயின்றனர். இவர்களில் இப்பாடசாலையில் இருந்து முதன்முதலில் புலமைப்பரிசில் பெற்று (12-05-1953) சென்றவர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த தம்பையா நடராசா என்பவராகும். அவரைத் தொடர்ந்து சென்றவர்கள் பலகாட்டைச் சேர்ந்தவர்களான பேரம்பலம் இராசலட்சுமி, சபாபதி நாகரட்ணம், மற்றும் கருங்காலியைச் சேர்ந்த நல்லதம்பி ஆறுமுகம், சபாபதிப்பிள்ளை தியாகராசா ஆகியோராகும். இப்பாடசாலையில் கல்வி பயின்ற சிலர் அப்பாடசாலையிலேயே ஆசிரியர் சேவை புரிந்து இளைப்பாறியுள்ளனர்.

வேரப்பிட்டி தமிழ்க்கலவன் பாடசாலை

இப்பாடசாலை 1970ம் ஆண்டின் பின் ஆரம்பிக்கப்பட்டதாகும். மாணவர் தொகையும் குறைந்த அளவிலேயே இருக்கின்றது. இப்பாடசாலையின் முதல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் கடமையாற்றினர். பலுகாட்டு கிராமத்தைச் சேர்ந்த இராமுப்பிள்ளை ஆசிரியரும் இவருடன் கடமையாற்றினார்.

மீனவர் வாழ்வு

வேரப்பிட்டி கல்லந்தாழ்வு பகுதிகளில் பலர் மீன்பிடிக்கும் தொழிலிலும், கள்ளிறக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். போர்ச்சூழல் ஏற்படமுன்னர் இவர்களில் பலர் கட்டு மரங்களில் ஆழ்கடல் சென்ற மீன்பிடித்து வந்தனர். அதனால் அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. போர்ச்சூழல் ஏற்பட்டதன் பின்னர் கடல் எல்லையைச் சுருக்கிய காரணத்தால் பலர் மீன்பிடி தொழிலை இழந்து தவிக்கின்றனர். இதனால் பலர் கூலி வேலைக்குச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. கள்ளிறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் எல்லோருமே இறக்கும் கள்ளைத் தவறணைக்கே கொடுத்து விடவேண்டும் என்பது தற்போதைய நியதியாகும். 1970ம் ஆண்டுக்கு முன்னர் கள்ளிறக்கும் தொழிலில் ஈடுபட்டவர் தாம் இறக்கிய கள்ளை அவ்விடத்திலேயே விற்றுக்கொண்டனர். அவரை நாடி பல வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இரகசிய குடிகாரர்களுக்கும் இது ஒரு சிறந்த இடமாக அமைந்திருந்தது. இவர்களில் பலர் இன்றும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும்நனி சிறந்தனவே

குறிப்பு: கருங்காலி கிராமம் பற்றிய தகவல்கள் இயன்றவரை தொகுத்து எடுத்துவரப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

நன்றி – ஆக்கம் – தம்பையா நடராசா, கருங்காலி

தகவல் மூலம் – http://www.posuddymurugan.org இணையம்

Sharing is caring!

Add your review

12345