கலாநிதி சொக்கன்

சொக்கன்

அமரர் கலாநிதி கந்தசாமிச்செட்டி சொக்கலிங்கம் (கலாநிதி சொக்கன்) அவர்களின் வாழ்க்கை 02.06.1930 – 10.02.2004 வரை ஆகும். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், இல 593 பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணம் என்ற இடத்தை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்த கந்தசாமிச் செட்டி சொக்கலிங்கம் அவர்கள் யாழ் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி கற்று பின்னர் தமிழ் வித்துவான் (Diploma in Tamil), கலைமானி, முதுகலைமானி, கௌரவ கலாநிதிப் பட்டங்களை பல்கலைக் கழகங்களில் பெற்றுள்ளார். இவர் அரச பாடசாலையின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தமிழ் இலக்கிய உலகில் சொக்கன் தடம் பதிக்காத துறை எதுவுமேயில்லை. ஈழத்து நாவல் வரலாற்றில் சாதி முறையை மையமாக வைத்து ”சீதா” என்னும் நாவலை முதலில் எழுதியவர் இவரேயாவார். பல்வேறு புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகம் என எழுதியிருக்கும் சொக்கன் சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். தமிழுக்கும், சைவத்திற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் வாழ்ந்த காலத்தில் இவர் பெரும் தொண்டாற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இவருக்கு ”தமிழ்மாமணி” என்ற பட்டத்தையும், இந்து கலாச்சார அமைச்சு ”இலக்கிய செம்மல்” என்ற பட்டத்தையும் அகில இலங்கை கம்பன் கழகம் ”மூதறிஞர்” பட்டத்தையும் இவருக்கு வழங்கிக் கௌரவித்து உள்ளன. மாணவராக இவர் இருந்த காலத்தில் எழுதிய ”சிலம்பு பிறந்தது”, ”சிங்ககிரிக் காவலன்” ஆகிய இரு நாடகங்களுக்கும் பரிசு கிடைத்துள்ளன.

நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள சொக்கன் ”கடல்” என்னும் சிறுகதை தொகுப்பை 1972ம் ஆண்டு வெளியிட்டு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றார். மரபுவழி கவிதை படைப்பதில் வல்லவரான சொக்கன் வீரத்தாய், நசிகேதன், நல்லூர் நான் மணிமாலை, நெடும்பா முதலிய கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மண்ணில் இவர் வாழ்ந்த காலத்தில் இவர் பங்கு கொள்ளாத இலக்கிய நிகழ்வுகள் இல்லையென்றே சொல்லலாம். சைவமத விழாக்கள், பட்டிமன்றம், கவியரங்குகள் பலவற்றிலும் தலைமத்துவம் வகித்துள்ள இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் சமய நற்சிந்தனை, கவியரங்கு, பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார். கம்பன் கழகத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். 1977 இல் முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் என்னும் ஆய்வு நூல் வெளியீட்டகத்தை அமைக்க இவர் பாடுபட்டார். இந்நூல் நிறுவனம் முதலில் வெளியிட்ட நூல் ”ஈழத்துத் தமிழ் நூல் வளர்ச்சி” என்னும் இவரின் முதுகலைமாணி ஆய்வுக்காக எழுதப்பட்ட நூலாகும்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345