கலா பரமேஸ்வரன்

கலா பரமேஸ்வரன்

புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருநெல்வேலியை வாழ்விடமாகக் கொண்டவர். தமிழ் கலைமாணி சிறப்புப் பட்டமும், தமிழ் முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள அமரர் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (02.08.1944 – 24.07.1983) என்ற கலா பரமேஸ்வரன் இம்மண்ணில் காலத்தின் குரலாக வாழ்ந்தவர். 1960 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர் சங்கத்தை முதன் முதலாக ஸ்தாபித்தவர். அப்போது அவருக்கு வயது பதினாறு. அன்று அவர் உருவாக்கிய இச்சங்கத்தில் இணைந்த அங்கத்தினர் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமக்கென தனித்துவ ஆளுமை மிக்கவர்களாக விளங்குகின்றார்கள்.

1963ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப் படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட இவர் அங்கும் தனது இலக்கியச் செயற்பாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார். பல்கலைக்கழக வெளியீடாக வந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ”காலத்தின் குரல்கள்” தொகுப்பின் ஆசிரியராக இவர் இருந்தார். பல்கலைத் தமிழ்ச் கங்க வெளியீடான ”இளங்கதிர்” என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். கலா பரமேஸ்வரன் அவர்களின் ஆளுமை மிக்க செயற்பாடு அவருக்குப் பல பதவிகளை பெற்றுக் கொடுத்தது. 1969 -1972 காலப்பகுதி வரை தேசிய சேமிப்பு வங்கியின் மேற்பார்வையாளராகவும் இருந்தார். 1977 ம் ஆண்டு தொடக்கம் 1981 ம் ஆண்டுவரை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராகவும் பின்னர் செயலாற்று முகாமையாளராகவும் கலா பரமேஸ்வரன் பதவி வகித்தார்.

வானொலிக் கலைஞனாக நல்லதோர் எழுத்தாளனாக, ஆற்றல்மிகு நாடகக் கலைஞனாக திறமைசார் ஆய்வாளனாக விளங்கிய காரணத்தால் இவருக்கு ”கலா பரமேஸ்வரன் ” என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. ”நச்சினார்க்கினியாரின் இலக்கியத் திறனாய்வு” என்னும் ஆய்வினை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவரின் ஆய்வுக் கட்டுரை இவர் இறந்த பின்னர் 2000ம் ஆண்டு தமிழ்நாடு சேலம் குயில்பண்ணை வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. இம்மண்ணில் இலக்கிய வெளிப்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த பல்கலை விற்பன்னர் இவராவார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345