கவிஞர் நடராசா சத்தியபாலன்

கவிஞர் நடராசா சத்தியபாலன்

கவிஞர் நடராசா சத்தியபாலன் அவர்களின் தோற்றம் 17.04.1954. அரச பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை எழுதுதல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்குகிறார். நல்லூர் இராஜவீதியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டுள்ள இவர் 1981ம் ஆண்டு காலப்பகுதி முதல் ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். இவரின் எழுத்துத் துறைக்கு செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட “அமிர்த கங்கை” என்னும் சஞ்சிகை முதலில் களம் அமைத்துக் கொடுத்தது. “நிறமிழக்கும் கறைகள்” என்னும் சிறுகதையே முதலில் பிரசுரமாக சிறுகதையாகும். தொடர்ந்து பல சிறுகதைகளை இவர் பத்திரிகைகளில் எழுதி வரலானார். கவிதைகள் படைப்பதையே தன் முக்கிய செயற்பாடாக கொண்டிலங்கும் இவர் சௌஜன்யஷாகர், நேசன் என்னும் புனை பெயர்களிலும் தன் ஆக்கங்களை எழுதி வருகின்றார்.
இவரது முதலாவது கவிதைத் தொகுதி “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. தனது பாடசாலை ஆசிரியர்களான திருமதி வசந்தா சத்தியபாலன், குழந்தை ம. சண்முகலிங்கம் ஆகியோரையும் படைப்புத் துறையில் உந்து சக்தியாக விளங்கிய யேசுராசா ஆகியோரை தன் துறை வளர பயிற்றுவித்த ஆசான்களாக இவர் கூறியுள்ளார். கலைமுகம் சஞ்சிகையில் “சுவைத்தேன்” என்னும் கவிதை பற்றிய தொடரை சௌயன்ய ஷாகர் என்ற புனை பெயரில் இவர் எழுதி வருகின்றார். உதயன் பத்திரிகையில் புதன் வசந்தம் என்னும் பகுதியில் “மண்மூடும் சுவடுகள்” தொடர் தற்பொழுது வெளிவருவதாக கூறியுள்ள கவிஞர் நடராசா சத்தியபாலன் தன் ஆற்றலை தொடர்ந்து வெளிப்படுத்தும் திறமைமிகு படைப்பாளியாக ஈழ மண்ணில் விளங்குகின்றார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – கலைஞானம் 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345