கவிஞர் சிவசிதம்பரம்

கவிஞர் சிவசிதம்பரம்

கவிஞர் சிவசிதம்பரம் அவர்களின் தோற்றம் 21.02.1962. முழுப்பெயர் நாகலிங்கம் சிவசிதம்பரம். கவிதை, நாடகம் ஆகிய இரு துறைகளிலும் ஆற்றல் கொண்டு விளங்கும் இக்கவிஞர் கல்விமாணிக் கற்கை நெறியை தேசிய கல்வியியற் கல்லூரியில் பூர்த்தி செய்து யாழ். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இக்கவிஞர் யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறந்தகமாகக் கொண்டு இல. 53, கருவப்புல வீதி, கொக்குவில் கிழக்கினை வாழ்விடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை யாழ் இணுவில் சைவமகாஜனா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார். புல கவியரங்குகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி நிறைவான கவியரங்க கவிதைகளை வழங்கியுள்ளார். பாடசாலை தமிழ்தின விழாவின் போது சிறுவர்களின் அரங்க செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம், கவிஞர் இ.முருகையன், கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோரைத் தன் கவித்துறை வளரவும், நாடக அரங்கச் செயற்பாடுகளை குழந்தை ம.சண்முகலிங்கம், கலாநிதி மௌனகுரு ஆகியோரிடமும் கற்றறிந்து கொண்டதாகவும் கூறியுள்ள இவர் அவர்களை தன் ஆசான்களாகவும் ஏற்றுள்ளார். இலங்கையில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றிலும் சஞ்சிகைகளிலும் தன் கவிதை இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
வடஇலங்கை சங்கீத சபையினரின் “நாடக கலாவித்தகர்” என்ற பட்டம் பெற்றுள்ள இக்கவிஞர் தன் செயற்பாட்டினை இம்மண்ணில் தொடர்ந்து செயற்படுத்தி வருகிறார். கவிதையாக்கத்தில் தனக்கென தடம் பதித்துள்ள இக்கவிஞர் இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் உபதலைவராக இருந்து சமூக இலக்கியப் பணிகளை ஆற்றி வருகிறார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – கலைஞானம் 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345