கவிஞர் அரியாலையூர் சிவநாமம் சிவதாசன்

கவிஞர் அரியாலையூர் சிவநாமம் சிவதாசன் அவர்களின் தோற்றம் 04.11.1948. அரியாலையூர் சி.சிவநாதன் என்ற பெயரில் எழுத்துலகில் பிரவேசித்த இக் கலைஞர் இல. 58, கனகரத்தினம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டவர். பரம்பரை வழியாக நாடகக் கலையை வளர்த்து வரும் குடும்ப வாரிசான இவர் பிறந்தகமும் அரியாலைக் கிராமமாகும். ஆரம்பக் கல்வியை யாழ் ஆனந்தா வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ் கனகரத்தினம் (ஸ்ரான்லி கல்லூரி) மத்திய மகா வித்தியாலயத்திலும் நிறைவு செய்து கொண்டவர். தான் கற்ற யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மணியாற்றி வருகிறார்.

கவிஞர் சிவநாமம் சிவதாசன்

பாடசாலைக் காலத்தில் இருந்தே எழுத்துத் துறையிலும் நாடகத் முறையிலும் ஈடுபாடு கொண்டு வந்தவர். தன் இலக்கியச் செயற்பாடுகளை இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வருகிறார். பேச்சுத் திறன் ஆற்றல் கொண்ட இவர் இலங்கை சகரோக நிவாரண சங்கத்தின் பிரச்சாரப் பிரிவில் இளைஞனாக இருந்த காலத்தில் பங்குபற்றி வந்துள்ளார். சிறுவர்களுக்கான ஆக்கங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவரின் “வேப்ப மரத்தடிப்பேய்” என்னும் சிறுவர் நவீனம் வரதர் வெளியீடாக நூலுருவில் வெளிவந்தது. “தங்கமலர் சிறுவர் பாடல்” இதுவும் நூலுருவில் வெளிவந்தது. வீரகேசரி வாரவெளியீட்டில் இருபத்தைந்து வாரங்கள் வெளிவந்த “அதிசயப்பறவை” என்னும் சிறுவர் நவீனமும் “விஜய்” சிறுவர் வாரப் பத்திரிகையில் “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் பெயரில் வெளிவந்த சிறுவர் இலக்கியமும் இவரால் எழுதப் பெற்றவையாகும். அரியாலை மேற்கு அண்ணமார் ஆலய வரலாறு, அந்தாதி, திருப்பொன்னூஞ்சல் அடங்கிய நூலினையும், இசை நாடக உலகில் வி.வி வைரமுத்து அவர்களோடு பலகாலம் பெண் பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்ற கலாபூஷணம், சோகச் சோபித சொர்ணக் கவிக்குயில் வி. கே. இரத்தினம் அவர்களின் அரங்க செயற்பாடு பற்றி “இசைநாடகக் கவிக்குயில்” என்ற நூலினையும் எழுதியுள்ள இவரின் “தென் யாழ்ப்பாணம்” நாடக வரலாறும், நாடகக் கலைஞர்கள் பற்றிய ஆய்வும் கொண்ட நூல் கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றது.

காலத்திற்கு காலம் உள்நாட்டு, வெளிநாட்டு இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பண்பாட்டுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், எழுதி வந்துள்ள இக்கவிஞர் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். கலாபூஷணம் அமரர் வி.கே. இரத்தினம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். மேலும் இவரின் கலை இலக்கியப் பணியை பாராட்டி நல்லூர்ப் பிரதேச கலாச்சாரப் பேரவை இவருக்கு 2008 ம் ஆண்டு “கலைஞானச்சுடர்” பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இவர் போன்ற கலைஞர்களின் வரலாற்றை எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

By -‘[googleplusauthor]’

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 ம் ஆண்டு வெளியீடு

Sharing is caring!

Add your review

12345