கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன்

கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன்

கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) அவர்களின் தோற்றம் 14.09.1939. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்த ஈழத்து கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் கொக்குவிலில் வாழ்ந்து வருகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வித்துவான் கார்த்திகேசு “கொம்யூனிஸ்ற்” கார்த்திகேசன் முதலியோரிடம் ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் கலாநிதி கு.சிவப்பிரகாசத்திடமும் பலகலைக்கழகத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பியிடமும் பட்டப்பின் படிப்பில் Palmer, David Crystal ஆகியோரிடமும் கற்க வாய்த்தமையைப் பெரும் பேறாகக் கருதுகின்றார் சோ.பத்மநாதன் அவர்கள். சிறப்புக் கலைமானி, டிப்ளோமா இலக்கியம், டிப்ளோமா கல்வி ஆகிய பட்டங்களை பெற்றவர். புலாலி ஆசிரியர் கலாசாலை அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்.
கவிதையைத் தமது முதற் காதலாகப் போற்றும் இவருடைய முதற் தொகுதியான “வடக்கிருத்தல்” (1998) நமது இன்னல் வரலாற்றின் இன்னொரு இலக்கிய சாட்சி எனப் பேசப்படுகிறது. “நினைவுச்சுவடுகள்” (2006) வேறொரு விதமான படைப்பு. இவருடைய “நல்லூர் முருகன் காவடிச் சிந்து” (1986” ஈழநாட்டில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒலிப்பேழை என்ற சிறப்பிற்குரியது.
மோரிபெயர்ப்பில் ஆர்வத்தோடு ஈடுபடும் இக்கவிஞர் “ஆபிரிக்க கவிதை” (2001), “தென்னிலங்கைக் கவிதை” (2003) ஆகிய தொகுதிகளைளத் தந்துள்ளார். குழந்தை சண்முகலிங்கத்தின் மூன்று நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (Shanmugalingam : Plays (2007)) வெளியிட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டில் சோ.ப வின் கவியரங்கு என்றால் அதற்கென ஒரு ரசிகர் கூட்டம் வரும். கவியரங்குகள், பட்டிமன்றங்கள் என பல நிகழ்ச்சிகளை வழங்கி தனது புலமையால் மக்களுக்கு சிறந்த கருத்துக்களை அளித்துள்ளார். மேலும் சைவ வித்தியா விருத்திச் சங்கம், இளங்கலைஞர் மன்றம் ஆகியவற்றிலும் பொறுப்புள்ள பதவி வகித்து ஆன்மீக, சமூகப் பணியாற்றியும் வருகின்றார். இருமுறை மாகாணப் பரிசும், ஒரு தடவை சாகித்திய மண்டலப் பரிசும், ஆளுநர் விருதும், நல்லூர்ப் பிரதேச கலாசாரப் பேரவையின் “கலைஞானச்சுடர்” பட்டமும் சோ.ப பெற்ற அங்கீகாரங்கள்.

Sharing is caring!

1 review on “கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன்”

Add your review

12345