கவிஞர் நாகேந்திரம் இலட்சுமணராசா

கவிஞர் நாகேந்திரம் இலட்சுமணராசா அவர்கள் நெடுந்தீவின் முன்னாள் கிராம சபைத் தலைவரான நாகேந்திரரின் மகனாவார். இல 26, சிவன் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாக கொண்டுள்ளார். தற்பொழுது உதயன் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் செயற்பட்டு வரும் இவர் கவிதை, கட்டுரை, பேட்டி எடுத்தல் ஆகிய இலக்கியச் செயற்பாடுகளில் ஆற்றலும், அனுபவமும் மிக்கவராக விளங்குகிறார். சிறுவயதில் தான் வாழ்ந்த நெடுந்தீவு நாற்புற இயற்கை எழிலை இரசித்து வந்த இவர் அந்த இயற்கை எழிலை கவிதைகளாக வடித்து பத்திரிகைகளில் வெளிவரச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் மிக்கவராக இருந்தார். 1964 ம் ஆண்டு தேசியப் பத்திரிகையான வீரகேசரியின் நெடுந்தீவுச் செய்தியாளராக நியமனம் பெற்று செயற்படத் தொடங்கிய இவர், தனது முதலாவது கவிதையை வீரகேசரிப் பத்திரிகைக்கு எழுதி இருந்தார். நெடுந்தீவு பற்றிய அக்கவிதை பிரசுர வாய்ப்பை பெறவில்லை. இருந்த போதும் இவரது செய்திக் கட்டுரைகள் தொடர்ந்து வீரகேசரியில் பிரசுரமாகின.

கவிஞர் நாகேந்திரம் இலட்சுமணராசா

1974 ம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் இவரது கவிதை பிரசுரமானது. அப்பொழுது அப்பத்திரிகையின் வாரமலர் ஆசிரியராக இருந்த சசிபாரதி சபாரத்தினம் அவர்கள் அளித்த ஊக்குவிப்பு இவரை மேலும் கவிதைகள் எழுதத் தூண்டியது. தினகரன், வீரகேசரி, உதயன், தினக்குரல், ஈழநாடு உட்பட ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என இருபத்திரண்டு ஊடகங்கள் வாயிலாக இவரின் கவிதைகள் வெளிக்கொணரப்பட்டன. ”உயிர்மூச்சு”, “சிரிக்கும் பூக்கள்” என்னும் கவிதை நூலுக்கு யாழ் இலக்கிய வட்டம் பரிசு வழங்கிக் கௌரவித்தது. இலங்கை வானொலியிலும் இவரது ஆக்கங்கள் ஆற்றுகைப் படுத்தப்பட்டுள்ளன. இவரின் இலக்கியத்துறைச் செயற்பாட்டிற்கு ஈழநாடு வாரமலர் ஆசிரியர் சபாரத்தினம், உதயன், சஞ்சீவி ஆசிரியர் கானமயில்நாதன், சகோதரர் இராமச்சந்திரன் ஆகியோர் ஊக்குவிப்பாளராக இருந்துள்ளார்கள். ஈழத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராக விளங்கும் இவர் இன்றும் தனது இலக்கியப் பணியை தொடர்ந்து வருகிறார்.

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345