கிட்டிப்புள்

கிட்டிப்புள்

கிட்டிப்புள் விளையாட்டு பற்றி விக்கி பீடியாவில் பின்வருமாறு குறிப்பு உள்ளது. கிட்டியும் புள்ளும் விளையாட்டே இன்றைய கிறிக்கற் விளையாட்டின் மூலவேர் என ஆய்வுகள் கூறுகின்றன.
”கிட்டிப்புள்” சிறுவர்கள் ஆடும் ஒரு விளையாட்டு.
கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள். கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. கீந்துகுழி ஆட்டத்துக்கு அதன் இரு முனைகளும் கூராக இருக்கும். அடிகோல் ஆட்டத்துக்கு முனைக்கூர் இருக்காது. கிட்டிக்கோல் ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 செனடிமீட்டர் நீளமும் கொண்டது.

கிட்டிப்புள்
ஆட்ட வகை

கிட்டிப்புள் விளையாட்டில் இரண்டு முறைகள் தமிழத்தில் இருந்து வந்தன.

கீந்து-குழி ஆட்டம் (இந்தியாவிலும், இலங்கையிலும்)
அடிகோல் ஆட்டம்
ஆடிவோர் வகை
குழு ஆட்டம்
அணி ஆட்டம்

குழு ஆட்டத்தில் ஒருவர் அடிக்க ஏனையோர் எதிராளி ஆவர். அணி ஆட்டத்தில் ஆடும்-அணி, எதிர்-அணி என இரு குழுக்கள் அமையும்.

கீந்துகுழி ஆட்டம்

ஆட்ட அரங்காகக் குதிக்காலால் திருகிய குழி, அல்லது சுமார் ஒருமுழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும். குழியில் ஒருமுனை இருக்கும்படி கிடைமட்டமாகக் கிட்டிப்புள் வைக்கப்படும். இந்தப் புள்ளைக் கிட்டிக்கோலால் தட்டிவிடுவர். இதற்குத் தெண்டுதல் என்று பெயர்.
புள் பறக்கும்போது கிட்டிக்கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர், அல்லது எதிர்-அணியினர் பறந்துவரும் புள்ளைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு தடியால்(கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும்.
புள் வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கிப் புள்ளு வீசப்படும். அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும்.
இந்த கிட்டிப் புள் தடியைத் தெண்டில், தாண்டில் என்றெல்லாம் சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டம் வேறு வகையிலும் ஆடப்படும்.

வேறு வகையான விளக்கம்

அடிகோல் ஆட்டம்

அடிகோல் ஆட்டத்தில் கீந்துகுழி இல்லை. கிட்டிப்புள்ளின் முனை கூராக இருக்காது. ஒவ்வொருவரும் 4 முறையில் விளையாடவேண்டும்.
ஒன்றான் (வெற்றிப்புள்ளி 1)
ஒருகையால் புள்ளைத் தூக்கிப் போட்டு, மற்றொரு கையிலுள்ள கோலால் அடித்தல்
இரண்டான் (வெற்றிப்புள்ளி 2)
ஒரு கையிலுள்ள கோலின்மீது புள்ளை வைத்துத் தூக்கிப்போட்டு அதே கையிலுள்ள கோலால் அடித்தல்
மூன்றான் (வெற்றிப்புள்ளி 3)
ஒரு கையின் ஆள்காட்டி-விரல், சுண்டு-விரல் ஆகியவற்றில் புள்ளை நிறுத்தித் தூக்கிப் போட்டு மறுகையில் உள்ள கோலால் அடித்தல்
நாலான் (வெற்றிப்புள்ளி 4)
ஒரு காலின் மேல்-பாத்ததில் புள்ளை நிறுத்தி அக்காலால் தூக்கிப்போட்டுக் கையிலுள்ள கோலால் அடித்தல்

ஆடும் முறை

ஒன்றான், இரண்டான், மூன்றான், நாலான் முறைமையை ஒவ்வொருவரும் வரிசையாகப் பின்பற்ற வேண்டும். ஆட்டம் தவறாமல் ஆடினால் ஒருவர் தொடர்ந்தாற்போல் 4 படிநிலைகளையும் முடித்து 10 வெற்றிப் புள்ளிகளையும் ஈட்டலாம். ஒன்றில் ஒருவர் தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். எல்லாரும் அடித்து முடிந்தபின் மறுமுறை ஆட்டம் வரும்போது ஒவ்வொருவரும் தான் தவறிய படிநிலையில் ஆடவேண்டும். ஒரு படிநிலை முடிந்தால்தான் அடுத்த படிநிலை.

பந்தைப் பிடித்தல்

ஒருவர் புள்ளை அடிக்கும்போது பிறர் பறந்துவரும் புள்ளைக் கையாலோ, துணியை விரித்தோ பிடிக்கலாம். புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டால் அடித்து-ஆடியவர் ஆட்டம் இழப்பார்.

விழுந்த புள்ளை எறிதல்

பிடிபடாமல் புள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அடித்த உத்திக் குழி அடையாளத்தை நோக்கி எறிவர். எறியும் பந்தை அடித்தவர் தடுத்து அடிக்கலாம். அடித்தாலும் அடிக்காவிட்டாலும் புள் விழுந்த இடத்திலிருந்து உத்திக் குழி வரையில் தான் அடித்த கோலால் அளந்து வரும் எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளி ஆக்கிக் கொள்ளலாம். புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் இழப்பர்.

தண்டனை

ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவருக்குத் தண்டனை உண்டு. அதிக புள்ளி பெற்றவர் தன் விருப்பம்போல் புள்ளைப் பிடித்துத் தொலைவுக்கு அடிப்பர். அங்கிருந்து பிறர் ஒவ்வொருவராக அவரவர் அடிக்குப் புள் சென்ற தொலைவிலிருந்து மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே கிட்டி அடித்த உத்தி-இடத்தைத் தொடவேண்டும்.”

கிட்டியும் புள்ளும் பாடல்

மாம்பட்டை மருதம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்….
பாக்குப் பழுத்தால் பதினாறோலை
மூங்கிலோலை முதிரப்பட்ட
வேட்ட வாளி பட்டணம் பட்டணம்….
ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடிய சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கி இறுக்கிக் கட்டு
ஈச்சாலை தும்போலை
பாக்குப் படிச்ச வண்ணான் ஓலை
மூங்கிலோலை முதிரைக்குத்தி
வேட்ட வாளி பட்டணம் பட்டணம்….
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரம்
கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு….
ஆலஞ்சருகு மடமடன்ன
ஆங்கோர் வண்டி உருண்டுவர
சோலைக் கிளியார் கொத்தியடிக்க
நாய் குலைக்க நல்லாண்டம்மா
பையோடா பையோடா….
நத்தை சூரி புல்லுத்தின்ன
நறுவிலி சங்கிலி பாராயோ
காரா வென்கிற பசுவைக் கண்டால்
கடைக்கண்ணாலே பாராயோ
பாராயோ பாராயோ….
கண்ணாம் பொத்தி கடகட மார்
ஆலஞ்ச நகு மடமட வெனவே
அங்கொரு வண்டிலுருண்டு வரக்
காலடி வரப் பொழுதேறிவரத்
தொந்தட்ட தெரு தட்ட
தெருவெங்கும் பொறி தட்ட தட்ட
பூம்பட்டை புளியம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்

நன்றி – தகவல் மூலம் – http://eezanaddiyam.blogspot.com இணையம்

Sharing is caring!

Add your review

12345