குப்பிழான்

புல்லிலிருந்து உருவான பெயர்

யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப்பக்கமாகச் சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் குடாநாட்டின் பிரதான வீதிகளான பலாலி வீதியில் புன்னாலைக் கட்டுவன் (வடக்கு) சந்தியினையும், காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் சந்தியினையும் இணைக்கும் வீதியில் (மத்திய ரேகை போன்று கிராமத்தினை ஊடறுத்துச் செல்லும் வீதி) கடும் சிவப்பு நிறமான செம்மண் வளம் கொழிக்கும் சிறு கிராமமே “குப்பிழான்” என்னும் சிற்றூர் ஆகும். மானிப்பாய்த் தொகுதியில் சுமார் இரண்டு சதுர மைல்களை பரப்பளவாகக் கொண்ட இக்கிராமத்திற்கு “குப்பிழான்” என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாகக் கிடைக்காவிட்டாலும் 1964 ஆம் ஆண்டளவில் ஏழாலைக் கிராமமாக உருவாக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட கிராமோதய மலர் சஞ்சிகையில் “குப்பிழால்” என்னும் ஒரு புல் பூண்டு இந்த பகுதி மண்ணில் அதிகமாகக் காணப்பட்டதன் காரணமாகவே “குப்பிழான்” என்னும் பெயர் உருவாகியது என குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக மாலை நேரங்களில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் என ஒற்றுமையாகத் தங்கள் தங்கள் சொந்த விளைநிலங்களில் இருந்து உற்சாகமாக வேலை செய்வதனைப் பார்த்தால் அதுவே கிராம மக்களின் விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மக்கள் குடியிருக்கும் கிராமத்தின் ஏனைய பகுதிகளில் கிடுகுவேலிகள், மதில்கள் ஆகியவற்றினால் சுற்றி அடைக்கப்பட்ட இல்ல வளவுகளும் அக் குடியிருப்புகளில் உள்ள தனித்தனி நீர்ச் சுரங்களான கிணறுகள், அக்கிணற்றிலிருந்து கிடைக்கும் சுவைமிகுந்த குடிதண்ணீர் அவ்வளவினுள் செழிப்பாக வளர்ந்து சோலை போன்று மூடியிருக்கும் பலா, மா, தென்னை, தோடை, எலுமிச்சை மரங்கள் இவைகள் யாவும் ஓர் இயற்கையின் அமைப்புக்களாகும்.

Sharing is caring!

Add your review

12345