கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பற்றி நோக்கும் போது கோப்பாய் பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயமும் பாடசாலையும் அமைப்பதற்கென வணக்கத்துக்குரிய றொபேட் பிறெண்ட் மற்றும் அவரது துணைவியார் 1849 நவம்பரில் வருகை தந்திருந்தனர். இதன்பின் ஒருஆலயம் அமைக்கப்பட்டு ஆலய வளவில் திருமதி. பிறெண்ட் அவர்களால் ஆங்கிலமொழி மூலம் பெண்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் 1852 ம் ஆண்டு இப்பாடசாலை தனித்துவமாக இயங்கத் தொடங்கியது. அப்பொழுது 36 பெண்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். மதகுருமார்களின் மேற்பார்வையில் இப்பாடசாலை 1899 வரை இயங்கியதன் பின்னர் யா/புனித பரியோவான் கல்லூரியின் முகாமையின் கீழ் நிர்வகிக்கப்பட்டது. 1939 இல் திரு.G.S. செல்லையா பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிரேஷ்ட சான்றிதழ் பரீட்சை 1940 இல் நடைமுறைக்கு வந்தது. இக்கால கட்டத்தில் செல்வி வயலெற் ஹட்சின்ஸ் அவர்களின் தலமையில் இயங்கிய பெண்கள் விடுதிப் பாடசாலையும் திரு.G.S.செல்லையா அவர்களை தலமை ஆசியராக கொண்ட ஆண்கள் பாடசாலையும் ஒன்றிணைக்கப்பட்டு 1945 இல் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி எனும் பெயரில் இயங்கத் தொடங்கியது. இதன் முதலாவதுஅதிபராக திரு.G.S.செல்லையாவும் பிரதிஅதிபராக செல்வி வயலற் ஹட்சின்ஸ் அவர்களும் கடமையாற்றினார்கள். ஆரம்பத்தில் ஆண்களுக்கான விடுதி பாடசாலைக்கு வெளியே இருந்தது. பின் அதுவோட்ஸ் வேத் மண்டபத்திற்கு மாற்றப்பெற்றது.
அரச மானியம் இம்மாணவரின் சந்தாப்பணம் ஆகியவற்றின் துணையுடன் பாடசாலை நிர்வகிக்கப் பெற்றது. பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற பணமும் பாடசாலைக்குப் பயன்படுத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் கரப்பந்து, வலைப்பந்து என்பவற்றுடன் ஏனைய விளையாட்டுக்களிலும் மாணவர் ஈடுபாடு காட்டினர். கல்லூரியில் விளையாட்டு மைதானம் இல்லாமையால் அக்காலத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெறவில்லை. ஆயினும் மாணவர்கள் இல்ல ரீதியாக வகைப்படுத்தப்பட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி அக்காலத்தில் நடைபெற்றது.
திரு.A.W. இராசசேகரம் அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் தற்போதைய கோப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள நிலம் ஒன்று குத்தகைக்குப் பெறப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. அக்காலத்தில் ஓட்டப்போட்டி (Mice Race) பிரபல்யமாக இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவரை “மில்லர்” என அழைத்தனர். மாணவர்களுக்குச் சீருடைஅறிமுகம் செய்யப்பட்டது. சிறுவர்கள் மேற்சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்தனர். சிறுபெண்கள் சட்டை அணிய வளர்ந்த பெண்கள் சேலைஅணிந்தனர். இவ் அதிபரது காலத்திலேயே கல்லூரிக்குரிய மனையியல் கூடம் அமைக்கப்பட்டது.
திரு.E.C.A. நவரட்ணராஜா அதிபராக இருந்த காலத்தில் பாடசாலை பல்வேறு துறைகளில் தன்னை விஸ்தரித்துக் கொண்டது. ஆசிரியர் ஓய்வு அறைக்காக பாக்கியம் வில்லியம்ஸ் கட்டடம் அமைக்கப்பட்டது. வகுப்பறைகளுக்காக “ஹட்சன்ஸ்” மண்டபம் அமைக்கப்பட்டது. கல்லூரி வளவில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது. ஹொக்கி, கூடைப்பந்து, காற்பந்து ஆகிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவரது காலத்தில் ஹொக்கி, கூடைப்பந்து, கரப்பந்து, வலைப்பந்து ஆகிய போட்டிகளில் மாணவர்கள் தேசியமட்டம் வரை முன்னேறினர். திரு.E.K.சண்முகநாதன் அதிபராக இருந்த காலத்தில் கல்லூரியின் வடதிசையில் இருந்த வீதி மூடப்பட்டது. தென்புறத்தே சண்முகநாதன் மண்டபம் அமைக்கப்பட்டது. கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. மாணவர் கூட்டுறவுச் சங்கம், ஆசிரியர் சிக்கனக் கூட்டுறவுச் சங்கம், நவரட்ணராஜா ஞாபகார்த்த நிதியம் உருவாக்கப்பட்டது. S.K. கந்தசாமி அதிபராக இருந்த காலத்தில் செல்லையா மண்டபம் உருவாக்கப்பட்டது. அத்துடன் நவரட்ணராஜா மண்டபத்தின் கீழ்த்தள வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டது. இதில் வசதியான விஞ்ஞான கூடம் அமைக்கப்பட்டது. இவருக்குப்பின் S.சிவனேசன் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் நவரட்ணராஜா மண்டபத்தின் மேல் தளம் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் 125 வது ஆண்டு நிறைவு ஞாபகார்த்த மண்டபம், கிறிஸ்தவ ஆலயத்திற்கான எல்லை மதில் என்பன கட்டப்பட்டன. இக்காலத்தில் அரசின் புதிய கல்விக் கொள்கையின் பிரகாரம் ஆரம்பப்பிரிவு வகுப்புக்கள் ஆண்டு தோறும் படிப்படியாக இல்லாமல் போயின. இவ்வாறு நிறுத்தப்பட்ட ஆரம்பப்பிரிவு வகுப்புக்களை மீள ஆரம்பிக்க அதிபர் சிவனேசன் முயற்சித்த போதும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
திரு.S. செல்வரத்தினம் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் முறைசாராக் கல்விக்கென புதிய கட்டடம் நிர்மானிக்கப்பட்டது. இதன் மிகுதி வேலைகள் பதில் அதிபராகக் கடமையாற்றிய திருமதி.P.அருண்ராஜா காலத்தில் நிறைவு பெற்றது.
திரு.P.K. இராஜரட்ணம் அதிபராக இருந்த காலத்தில் உயர்தர வகுப்பில் வர்த்தகப்பிரிவு ஆரம்பிக்கப் பெற்றது. இக்காலத்தில் இந்திய அதிகாரிக்கும் படையின் இராணுவ நடவடிக்கையின் போது பாடசாலை சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டு கோப்பாய் நாவலர் பாடசாலையில் தற்காலிகமாக இயங்கியது. பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் பத்து வகுப்பறைகளும் நீர்த்தாங்கியும் உருவாக்கப்பட்டது.
திரு.T. முத்துக்குமாரசாமி அதிபராக இருந்த காலத்தில் அதிபர் அலுவலகம் பாக்கியம் வில்லியம் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டதுடன் இராணுவ நடவடிக்கைகளால் சேதமடைந்த கட்டடங்கள் அகற்றப்பட்டன. சேதமடைந்த மதில் திருத்தப்பட்டது. தற்காலிக வகுப்பறைகள் உருவாக்கப்பட்டது. மிதிவண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டது. பாடசாலைக்கான பாதை செப்பனிடப்பட்டது. பழைய மாணவர் சங்க நிதியம் பாடசாலை அபிவிருத்திச் சங்கநிதியம் முதலிய வங்கிக்கணக்குகள் உருவாக்கப்பட்டது. திரு. N. சிவகடாட்சம் அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் கார்த்திகேயன் மண்டபம், இராசசேகரமண்டபம், சிவசுப்பிரமணியம் மண்டபம் இந்து, கிறிஸ்தவ கோவில்கள், கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து விளையாட்டுத் திடல்கள் என்பன உருவாக்கப்பட்டன. 125 வது ஞாபகார்த்த மண்டபம், நவரட்ணராஜா மண்டபம், தண்ணீர்த் தாங்கிகள் மெருகூட்டப்பட்டன. இத்தோடு குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கலைத்திட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. பேராதனை, மொரட்டுவை,  பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதோடு ஏனைய துறைகளுக்கும் மாணவர்கள் அனுமதிக்கப்பெற்றனர். சங்கீதம், நடனம், மற்றும் துறைகளுக்கும் மாணவர்கள் நுண்கலைப் பீடங்களிற்கு அனுமதிக்கப் பெற்றனர். விளையாட்டுத்துறையானது தேசிய மட்டம் வரை மாணவர்கள் செல்லக்கூடியதாக இருந்தது. தற்காலிக கொட்டகைகள் தளபாடப்பற்றாக் குறை கல்விஅபிவிருத்திக்குப் பெரும் தடையாக இருந்தன. ஆயினும் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் இவைகள் சீர் செய்யப்பட்டன. அரச,அரசசார்பற்ற நிறுவனங்கள் கொழும்பு பிரித்தானியா பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் என்பவற்றின் உதவி பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின என்று கூறினால் அதுமிகையாகா. இவரதுகாலத்திலேயே விளையாட்டு மைதானம் அகலமாக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது.
அதிபர் சிவகடாட்சத்தின் அகால மரணத்தைத் தொடர்ந்து கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டதிரு.A. அகிலதாஸ் அவர்கள் 1½ வருடங்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலத்தில் விளையாட்டு மைதானத்தில் மண் நிரப்பப்பட்டு புல் பதித்து சீர் செய்யப்பட்டது. அத்துடன் பாடசாலையின் நடைபாதை தார் போட்டு செப்பம் செய்யப்பட்டு பூங்கன்றுகள் வைத்து அழகுப் படுத்தப்பட்டது. இவரது காலத்தில் விளையாட்டுத்துறைகள் ஊக்குவிக்கப்பட்டு வலைப்பந்தாட்ட அணி தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு- www.kopaychristiancollege.org இணையம்

Sharing is caring!

Add your review

12345