கோப்பாய்
கோப்பாய் என்ற அழகிய கிராமம் ஈழநாட்டின் வடபுலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 5 மைல் தொலைவில் உள்ளது. இதன் வடக்கு எல்லையாக நீர்வேலியும், தெற்கே நல்லூரும், மேற்கே உரும்பிராயும், கிழக்கே கைதடியும் அமைந்துள்ளன. கோப்பாய் கிராமத்தின் பரப்பளவு பன்னிரண்டு சதுர மைல் அளவிற்கும் மேற்பட்டது. ஆனால் கோப்பாய் தேர்தல் தொகுதி என்னும் போது அது இன்னும் பல கிராமங்களை உள்ளடக்கி பரந்து விரிகின்றது.
கோப்பாய் என்னும் பெயர்….
கோப்பாய் =ரீ கோ + பாய்
கோ = அரசன், பாய் = இருப்பிடம், அதாவது அரசனின் இருப்பிடம் என பொருள்படுகிறது. இன்னும் சிலர் கோ + பாய்= அரசன் பாய்ந்த இடம் எனவும் பொருள் கூறுவர்.
பண்டைய காலத்தில் நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகராக இருந்த போது கோப்பாய் உபதலைநகராக இருந்திருக்க வேண்டும். போர்க்காலங்களில் அரசன் தப்பித்து செல்ல நல்லூரிலிருந்து கோப்பாய் வரை சுரங்கப் பாதைகள் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கால மாற்றத்தில் இவை சிதைவடைந்து போயிருக்க வாய்ப்புக்கள் உண்டு.
சான்றுகள்
கோப்பாய் சந்திக்கு வடபுறமாக 200 யார் தொலைவில் பழைய கோட்டை ஒன்றும் நீராடும் தடாகம் ஒன்றும் இருந்ததாக அறியப்படுகிறது. காலப்போக்கில் கோட்டை அழிவடைந்துவிட்டது. ஆனால் குளம் இப்போதும் உள்ளது. இக் குளம் குதியடிக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
மக்கள்
கோப்பாயில் வசிக்கும் மக்களில் பெரும்பகுதியினர் சைவசமயத்தவர் ஆவர். இதற்கு ஏற்றால் போல் இங்கு பெரிதும் சிறிதுமாக பல இந்து ஆலயங்கள் அமைந்துள்ளன. கிறிஸ்தவ மக்களும் குறிப்பிடதக்களவு கோப்பாயில் வாழ்கிறார்கள்.
தொழில்கள்
கோப்பாய் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். பயிற்செய்கைக்கேற்ற வளமான செம்மண்ணையும், மற்றும் நெல்விளைவதற்கேற்ற மண்ணையும் எம் ஊர் கொண்டுள்ளது. வாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. வெங்காயம், உருழைக்கிழங்கு, புகையிலை ஆகியவை மட்டுப்படுத்தப்பட்ட அள்வில் பயிரிடப்படுகின்றன..
By – Shutharsan.S
நன்றி- ஆக்கம் – வ.சித்திரவேலாயுதம், மூலம்-http://www.kopay.infoஇணையம்
2 reviews on “கோப்பாய்”