சிதம்பரபத்தினி

சிதம்பரபத்தினி

பதினாறு வயது முதல் ஈழத்துப் பத்திரிகைகளில் கவிதை, சிறுகதை எழுதிவரும் சிதம்பரபத்தினி எனும் திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல் (தோற்றம் – 09.05.1944) வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது மெதடிஸ்த மிசன் பாடசாலை வீதி, வண்ணை வடமேற்கு, ஆனைக்கோட்டையை வாழ்விடமாகக் கொண்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பட்டதாரியான இவர் பாலபண்டிதர், சைவப்புலவர் பரீட்சையிலும் சித்தி பெற்றவர். இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து பலவருட காலம் பிரதேச செயலராக சேவை செய்து பின் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, வானொலி நிகழ்ச்சிகள், மேடைப்பேச்சு ஆகிய துறைகளில் தன் ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ள சிதம்பரபத்தினி கலை இலக்கியத் துறையிலும், ஆன்மீகத் துறையிலும் ஈடுபாடு கொண்டு இம்மண்ணில் திகழ்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர். உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற இசை ஆசான் திலகநாயகம்போல் அவர்களின் துணைவி இவராவார். நிஜத்தின் நிழல், தேன்வதை, மழலை அமுதம் ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கும் சிதம்பரபத்தினி அவர்கள் சிறுவர் இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவர். வலிகாமம் வடக்கு பிரதேச மலரின் ஆசிரியராக இருந்த இவர் கட்டுரைகள் சிலவற்றை எழுதியுள்ளார். மேலும் வலி வடக்கு பிரதேச செயலகத்தின் ”வசந்தம்” என்னும் மாதாந்த சஞ்சிகையை முன்னின்று இயக்கவும் செய்துள்ள இவர் ஈழத்து இலக்கிய உலகிற்கு அணிசேர்த்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிதம்பரபத்தினி தன் சிறுகதைகளில் பல்வேறு குணவியல்புகள் உடைய பெண்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பெண்விடுதலை, ஆண்களால் அடக்குமுறை காரணமாக அவதியுறும் பெண்களின் நிலை பற்றி தனது சிறுகதையினூடாக இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பாடசாலைக் காலங்களில் கலைப்போட்டிகள் பலவற்றில் பங்குபற்றி முதல் பரிசினைப் பெற்றுள்ள இவர் நாடகங்களிலும் பங்குபற்றியுள்ளார். கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றிலும் தன் திறனாற்றலை வெளிப்படுத்தியதோடு ”இணைந்தது ஒன்று” என்ற நாடகத்தை எழுதி நெறியாள்கையும் செய்துள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345