சின்னப்பா உபாத்தியார்

சின்னப்பா

அமரர் ஶ்ரீமத் அருணாசலம் சின்னப்பா உபாத்தியாயரின் வாழ்க்கை வரலாறு:
அனலைதீவு அருணாசலம் சின்னப்பா ஆசிரியர் அவர்களின் நினைவு குறித்துத் தொகுக்கப் பெற்ற அருட்பாடல் தொகுதி – 1954 இல் யாழ்ப்பாண விவேகானந்த அச்சகம் வெளியிட்ட நூலில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தைச் பிறப்பிடமாகவும் அனலைதீவின் சைவ வேளாண் பரம்பரைச் பிரபுவும் பேராசிரியருமாய் விளங்கிச் சிவபதமடைந்த ஶ்ரீமத் அ. சின்னப்பா உபாத்தியாயர் அவர்களின் சரித்திரச் சுருக்கம்.
சப்த தீவுகளுள் ஒன்றாய் விளங்கும் உயர்தனிச் சிவஷேத்திரமாகிய அனலைதீவிலே இற்றைக்கு(2012 படி 150 வருடங்கள்) தொண்ணூற்றிரண்டு ஆண்டுகளின் முன் இப்பெரியார் சைவமும் தமிழும் சிறக்கத் தோன்றினார். இவர் தந்தையார் அருணாசலம், தாயார் இராமாசிப்பிள்ளை, இவர்களுக்குச் சசோதரர்கள் நால்வர் உளர். உயர் குடிப்பிறந்த உத்தமராய இவர் கனிஷ்ட புதல்வராதலாற் பாலப்பருவத்துப் பல்வகைச் சிறப்புடன் வளர்வாராயினார்.
யாழ்ப்பாணத்து நாவலர் வித்தியா பீடத்திலே கல்வி பயின்றார். நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைப் பிரதமாசிரியராயிருந்த இவரின் சிறிய தந்தையார் ஶ்ரீமத். மா. வைத்தியலிங்கம் பிள்ளையே இவரின் வித்தியாகுரு ஆவர். ஶ்ரீமத் சுவாமிநாத பண்டிதர் இவரின் சகபாடிகளுள் ஒருவர். இலக்கண இலக்கிய புராணேதிகாசங்களை ஐயந்திரிபறக் கற்றதோடு சிவ தீட்ஷைப் பேறெய்திச் சைவானுஷ்டான சீலராய் விளங்குவாராயினர்.
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அனலைதீவில் முதன்முதற் சைவத் தமிழ்ப் பாடசாலை ஸ்தாபித்து நடத்தி வந்தவரிவரே. இப்பாடசாலை அனலைதீவு சதாசிவ தமிழ் சைவ வித்தியாசாலையென அழைக்கப்பட்டு தற்போது அனலைதீவு சதாசிவ ஆங்கில வித்தியாசாலை (1960 இல் அரசினர் பாடசாலையை பெறுப்பேற்றது முதல் அது சதாசிவ வித்தியாசாலை)யென்னும் பெயரால் அறியப்பட்டு வருகின்றது. இவரிடம் கந்த புராணம், பெரிய புராணம், முதலாம் சிவ புராண படனப் பயிற்சி பெற்றோரும் பலராவர்.
அனலைதீவிலுள்ள ஆலயங்களில் உபாத்தியாயரின் சிவத்தொண்டு சேராதவை எவையுமிரா. “ஆலய நிர்வாகத்திற்கு அனலைதீவு” என்னும் பெயர் வரக் காரணராயிருந்தவர் இவரும் இவரது மாதுலரும் (மைத்துனர்) அனலைதீவு உடையாருமாயிருந்து ஏலவே காலஞ்சென்ற ஶ்ரீமத். சு. வேலுப்பிள்ளை அவர்களுமேயாவர்.
இப்பெரியார் அனலைதீவுக் கிராமச் சங்கத் தலைவராய்ப் பலவருடங்கள் சேவை செய்துள்ளார். இவர் குறித்த கிராமத்தவரின் அன்புக்குரிய மன்னனாய் வாழ்ந்து வந்தாரென்னதற்குப் பல அறிகுறிகளுண்டு.
அனலைதீவை ஜெனன பூமியாகக் கொண்டு தற்போது மலாயாவிலிருக்கும் ஶ்ரீமான். ஐ. சோமசுந்தரம் டாக்டர் (அப்போது மலேசியாவில் வசித்த டாக்டர் அவரது பெறாமகனும் முன்னாள் அதிபருமான அமரத்திரு.சிவபாதசுந்தரம் ஊடாக சதாசிவப் பாடசாலை நிரந்தர கட்டுமான வசதிபெற உதவினார்கள்) இவர்கள் போன்ற கல்விச் செல்வங்களால் மேம்பட்ட உத்தமர்கள் பலர் இவரின் அன்புக்குரிய மாணவர்களாவர்.
மனைவியரிருவர் பாலுந் தோன்றிய ஏழு ஆண் மகாருக்கம் ஆறு பெண் மகாருக்கும் தந்தையாராய் விளங்கிய இவர் புத்திர மித்திர களத்திரச் சிறப்பு யாவுமுற்றுச் சென்ற விஜய வருடம் பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தோடு கூடிய பூரணைத் தினத்தில் (19-03-1954) தனது பூதவுடலை நீத்துப் புகழுடம் பெய்தினார்.
சுபம்.
இணைப்பு:- (இவருடைய புதல்வர்கள் அமரத்திருமதி. சு. மீனாட்சிப்பிள்ளை, அமரத்திரு. சி.பொன்னையா, அமரத்திரு. சி.தில்லையம்பலம் – இவர் அனலை தெற்கு அரசினர் பாடசாலையின் முதல் அதிபராக பணியாற்றினார். அமரத்திரு. சி.அருளம்பலம், அமர பாலகன் சி.சோமசுந்தரம், அமரத்திரு. சி.வேலுப்பிள்ளை அமரத்திருமதி. சு. சிவக்கொழுந்து அமரத்திருமதி. பத்தினிப்பிள்ளை-இந்தியா அமரத்திருமதி. ப.நாகமுத்து, அமரத்திருமதி. க.பொன்னம்மா, அமரத்திருமதி. கா.மங்கையற்கரசி மற்றும் திரு. சி.பசுபதிப்பிள்ளை, திரு. சி.அருளானந்தம், திரு. சி.பரஞ்சோதி-மாப்பாணர் முன்னாள் தபாலதிபர் ஆகியோர் தற்போது கனடாவில் வசித்துவருகின்றனர்.)

By – Shutharsan.S

நன்றி – தொகுப்பு – அ.சி.வே. யோகராஜா (பேரன்- ஜேர்மனி)

தகவல் மூலம் – analaiexpress.ca இணையம்.

Sharing is caring!

Add your review

12345