செல்லத்துரை சுவாமிகள்

செல்லத்துரை சுவாமிகள் பற்றிய ஒரு பார்வை.

 “சண்டையிடும்போதும் சலியான் – அரன்

தன்னிலையிலே சற்றும் பிரியான்”

செல்லத்துரை சுவாமிகள் சிவதொண்டன் நிலையங்களில் உறைந்து “சந்ததம் மோனநிலை தவறாமலே” சதா சிவதொண்டு புரிவதில் விழிப்பாயிருந்த ஒரு சிவதொண்டனாவார்.

செல்லத்துரை சுவாமிகள்

அவர் சைவாசாரசீலத்தில் தடித்தவர்கள் வாழும் சூழலிலே பிறந்து வளர்ந்தார். இளமையிலேயே ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பும் பண்பாடு அவருக்குப் பழக்கமாயிற்று. அவர் தமக்குப் பொருந்திய உபாத்தியாயர் உத்தியோகத்தை வணக்கம் மணக்குமாறு புரிந்தார். ஆயினும் அவர் தம் அந்தரங்கம் கடவுளைக் கண்டு களிப்பதிலேயே குறியாயிருந்தது. அதனால் இலங்கையின் தென்முனையிலேயுள்ள பாடசாலையொன்றில் பணிபுரிய நேர்ந்த பொழுது, வார இறுதி நாள்களைக் கதிர்காமத்தானைத் தரிசிக்கும் புண்ணிய நாள்களாக்கிக் கொண்டார். பாடசாலைத் தவணை விடுமுறைகளில் ஒன்று கதிர்காமத்தவமாகவும், இன்னொன்று செல்வச்சந்நிதி வாசமாகவும், மற்றொன்று இந்தியத்திருத்தல யாத்திரையாகவும் அமைந்தது. சிவதொண்டன் நிலையத்துள் நுழையும் வரை இந்நியமம் தவறாமல் நிகழ்ந்தது. இந்திய யாத்திரையிலே சிதம்பரமும் திருவண்ணாமலையும் முக்கிய மையங்களாயின. அண்ணாமலையிலே ரமணாச்சிரமத்தில் உறைந்து ஆச்சிரம நடைமுறைகளை நயந்ததுடன் ரமணமகரிஷிகளது அருள்நோக்குக்கு ஆட்பட்டு அவர் சந்நிதானத்தில் இருக்கும்போது அடையும் சாந்சுகத்தையும் அனுபவித்தார். இந்திய யாத்திரையின்போது அருணைவடிவேலு முதலியார், வச்சிரவேலு முதலியார் முதலாய நுண்மாண் நுழைபுலமுடையோரின் நட்பு வாய்த்தவதுடன் சமயசாத்திர நூல்கள் பலவற்றையும் வாங்கிச் சேகரித்தார். அவர் இலங்கை மீழும் போது அருட்பிரசாதத்துடனும், நூற்சுமையுடனுமே வந்து சேர்ந்தார். அவர்1954ம் ஆண்டு ஆனி உத்தரதரிசனத்தின் பொருட்டு யாத்திரை சென்றபோது (அப்போது பகவான் ரமணர் சமாதியாகி நான்குவருடங்களாகியிருந்தது) அவருக்கு ஒரு குருபரனுடன் கூடிவாழ வேண்டுமென்ற தாகம் பெருவிடாயாயிற்று. அவர் அகம் கைலைத்திசையை நோக்கிற்று. இமயச்சாரலிலே ஆரேனும் ஓர் இருடி தன்னை ஆதரித்துக் கொள்வார். அவரது காலடியிலிருக்கலாம் என்ற எண்ணத்தோடு கேதாரத்தைச் சேர்ந்தார். கேதாரத்திலே சுவாமிகள் நிதர்சனமாகத் தோன்றி வீட்டுக்கு விரைந்து வா (Come home immediately) என்று அழைத்தார். கறவையின் ஒலிகேட்ட கன்று போல் விரைந்து வந்து கொழும்புத்துறைக் கொட்டிலைச் சேர்ந்தபோது “தம்பி வந்து விட்டாயா வா” எனச் சுவாமிகள் அரவணைத்தார். சுவாமிகள் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தடவை தம் ஞானப்புதல்வர் தம்மைத் தரிசிக்க வந்தபோது திருக்கரத்தாற்றொட்டு ‘தம்பி நல்லாயிருப்பாய் போய் வா” என்று நல்வாக்கு அருளியிருந்தார். இப்பொழுது தருணம் வந்ததும் வரவழைத்துக் கொண்டார். சுவாமிகள் தூண்டில் போட்ட வகையாய் இருந்தார். சிலவருடங்கள் அங்குமிங்குமாக ஆட்டி அலைத்துத் தகுந்த தருணம் வந்ததும் அகப்படுத்திக் கொண்டார்.

தாம் அகப்படுத்திக் கொண்ட சிவதொண்டன் நிலையத்துக்கு நல்ல ஆளை நிலையத்திலே குடியமர்த்தினார். நான்கைந்து ஆண்டுகள் கடுமையான தவ வாழ்க்கையை விதித்தார். தம்மைச் செல்லப்பர் வளர்த்தெடுத்த வண்ணமே தாமும் செல்லத்துரையாரைச் சதுர்வித உபாயத்தாலும் வளர்த்தார். தமக்கு ஞானவித்தையின் நுட்பங்களையெல்லாம் செல்லப்பர் பயிற்றியது போலவே தாமும் உபாத்தியாருக்கு (சுவாமிகள் இவ்வாறுதான் அவரை அழைத்தனர்) எல்லாம் பயிற்றினார். தாம் அன்பர்களைக் கொண்டு மொழிபெயர்த்தெடுத்த ‘குண்டலினிசக்தி’ என்னும் நூலை அவரிடம் ‘இது உனக்கு நான் தரும் பொக்கிசம்’எனச் சொல்லிக் கொடுத்தார். உபாத்தியார் ஊட்றோவ் எழுதிய Serpent Powerஎன்னும் மூலநூலையும் வாங்கிக் கற்றுச் சாதனை பயின்றார். சாதனை பயிலும் காலத்தில் “யோகநெறி” எனும் பாடலையும் சுவாமிகள் எழுதிக் கொடுத்தார். குண்டலினி ஏறுதற்கு நேர்ந்த தடையையும் நீக்கி நாசி நோக்கை விழிக்கச் செய்து நடனமும் காட்டி வைத்தார். ‘கடவுளை எங்கும் கண்டுகளிப்பார்’ எனும் பாடலைச் சொல்லி எழுதுமாறு  கூறி அவருக்கு வேண்டும் தியான சாதனை, பத்திநெறி, கருமயோகம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினார். மார்க்கண்டு சுவாமிகளுக்குச் சுவாமிகள் காட்டிய குறி சதாநிட்டை, உபாத்தியாயரான செல்லத்துரை சுவாமிகளுக்குக் காட்டிய குறியோ சகசஸ்தி. அதாவது நிட்டையில் நிலைத்த வண்ணமே உலகையும் பார்த்திருத்தல் ”சும்மா தியானத்தில் அடங்கியிருப்பதனாலென்ன பயன்? என்றும் எவ்விடத்தும் தன்னை மறக்காமலிருக்கும் சகசதிநிலையில் பெறவேண்டும்” என அவருக்கு உபதேசித்தார்.

சிவதொண்டன் நிலையத்திலுறைந்து பணிசெய்ய வேண்டியவராதலால் இவ்வண்ணம் நிட்டையும், சாக்கிரதையும் ஒருங்கே அவருக்கு வேண்டியிருந்தன போலும்! இவ்வண்ணமெல்லாம் பயிற்றிய பின் சுவாமிகள் சிவதொண்டன் நிலையத்தில் உறைந்த ஒரு நாள் அவருக்கு அநுபூதிச் செல்வதையும் அருளிச் செய்தனர்.

செல்லத்துரை சுவாமிகள் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் சிவதொண்டன் நிலையப் பொறுப்பாளராக அமர்ந்து சிவதொண்டு புரிந்தார். அவர் சுவாமிகள் சிவதொண்டன் நிலையத்தை நிறுவியதன் நோக்கம், இந்நோக்கத்திற்கியைய ஏற்பாடு செய்த நியமங்கள், இந்நியமங்களை அநுட்டித்தற்காக விதித்த கண்டிப்பான நடைமுறைகள் என்பன பற்றித் தெளிந்த விளக்கமுடையவராயிருந்தார். அநுபூதிச் செல்வமும், ஞானநூற்பயிற்சியும் ஆச்சிரம நடைமுறைகள் பற்றிய அறிவும், வைரித்த ஒழுக்கமும் ஆகிய இவைகள் அவர்தம் பணியினைச் செம்மையாகச் செய்ய உதவின. சிவதொண்டன் நிலையமெனும் தவசாலையிலே தன்னையறியத் தவமியற்ற வருவார்க்கு வேண்டுவன வெல்லாவற்றையும் குறைவிலா நிறைவாய் வைத்திருப்பதில் அவர் மிக விழிப்பாயிருந்தார். அவர்களது தவத்துக்கு இடையூறு ஏதும் ஏற்படாதவாறு பார்க்கும் கடமையில் பரிந்தோ பயந்தோ தவறியதில்லை. அவரது பார்வை திருவடி முதல் கழிப்பறை வரை வியாபித்திருந்தது. அவர் அமர்ந்திருந்த இருப்பு அத்தனைக்கும் வாய்ப்பானதாக இருந்தது. இவ்வாற்றால் சிவதொண்டனுக்குரிய தனித்துவமான மரபொன்றை அவர் ஏற்படுத்தினார். இதனாலேதான் அவரைச் சிவதொண்டன் செல்லத்துரைசுவாமி என அறிந்தோர் கூறினர்.

செல்லத்துரை சுவாமிகள்

செல்லத்துரை சுவாமிகள் தன்னை உள்ள வண்ணம் அறியச்செய்த சுவாமிகளுக்குச் செய்யும் கைம்மாறொன்றுளதெனில் அது சுவாமிகளை உள்ள வண்ணம் உலகறியச் செய்வதே எனத் துணிந்திருந்தார். இத்துணிபினாலே சுவாமிகளது திருவாய்மொழிகள் செம்மையான நூலுருப் பெறுவதில் விழிப்புடன் செயற்பட்டார். ‘நற்சிந்தனை’ யைச் செம்மையாக வெளியிடுவதில் அவர் சுவாமிகளது அணுக்கத்தொண்டர்களுடன் சேர்ந்து உழைத்தார். ’எங்கள் ஆசான் அருள் மொழிகள்’ வெளியிட்டதில் அவர்பங்கு அளப்பரிது. சுவாமிகளது அணுக்கத்தொண்டர்களின் குறிப்புப் புத்தகத்திலிருந்த அவற்றைச் சேகரித்ததுடன் பெரும்பாலும் பேச்சோடு பேச்சாகச் சுவாமிகள் சொன்ன அவ்வமுத மொழிகளைச் சுவாமிகளது எழுத்து நடை எவ்வாறிருக்குமோ அவ்வாறான நடையில் அமைத்தெடுத்தது அவர்தம் அரும்பணியே, இத்திருநூல்களுடன் அன்பர்களது ஞானசாதனைக்குகந்ததெனச் சுவாமிகள் கருதித் தம் பழவடியார்களைக் கொண்டு வெளியிட்ட தியானகாலம்,விவேகசூடாமணி ஆகிய நூல்களை அரிய பதிப்புரைகளுடன் மறுபதிப்புச் செய்தார். பெருமானது ஆட்கொள்ளும் வண்ணத்தை அழகுறச்சொல்லும் திருவாசகத்தை நுண்பொருளுடன் வெளியிட்டார். எவர்க்கும் சமயாசாரத்தையும்,சிவஞானத்தையும் ஒருங்கே புகட்டும் தொண்டர் சீர்பரவும் பெரியபுராணத்தை செம்மையான வசன நடையில் வெளியிட்டார். சுவாமிகளை பெருமளவு உள்ளவாறே காட்டவல்ல சரித நூலொன்றை எழுதி அளித்ததுடன் புராணமண்டபங்களில் அவரைத்தங்கப் பொம்மையாகப் பிரதிட்டை செய்து வைத்ததும் அவர்தம் அரும்பணியே. இவ்வாறாக அவர் செய்த சிவதொண்டு குருபீடமொன்றிலே பரமாசாரியாராய் வீற்றிருக்கும் ஒருவர் செய்யும் இறைபணியை நிகர்த்ததாய் இருந்தது.

செல்லத்துரை சுவாமிகள் அரை நூற்றாண்டு காலம் ஆற்றிய சிவதொண்டிலே அரைவாசிக்காலம் யாழ்-சிவதொண்டன் நிலையத்திலும் மீதி அரைவாசிக்காலம் மட்-சிவதொண்டன் நிலையத்திலும் அமைந்தது. அவர்தம் திருவடிக் கலப்பும் சிவதொண்டன் நிலையத்திலேயே நிகழ்ந்தது.

செல்லப்பா சுவாமிகள் விசர்க்கோலத்தைச் செம்மையாக நடித்தார். யோக சுவாமிகள் தாம் எல்லோரையும் போன்ற ஒருவன் என்னும் போர்வையைச் செம்மையாகப் போர்த்தியிருந்தார். செல்லத்துரைசுவாமிகள் பொறுப்பான ஆள் என்னும் போர்வைக்குள் மறைந்திருந்த அநுபூதிச்செல்வர்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://www.sivathondan.org/sellathuraiswami.htm

தொடர்புடைய பதிவுகள்

Sharing is caring!

Add your review

12345