செல்வச்சந்நிதி ஆலயம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வடமராட்சிப் பகுதியின் மேற்கெல்லையாக அமைந்துள்ளது “தொண்டமானாறு” என்னும் அழகிய கிராமம் அங்கு அமைந்துள்ள சந்நிதி அடியவரது தீராத நோய் தீர்க்கும் அருமருந்தான முருகன் உறையும் இடமாகும். அவன் திருவடியைக் காண ஓடி வரும் அன்பர் கூட்டம் சந்நிதியை உலகம் அறியச் செய்தது. முருகன் கோலமின்றி வேலின் கோலமே கண்டு வழிபடும் சிறப்புடையது. அந்த சந்நிதியான் உறைவிடமோ உப்பாற்றங்கரை. மலையில்லாத மாயமான ஆறு தொண்டைமானாறு எனப் பெயர் பெற்றது.
தொண்டைமானாறு கிராமத்தின் தெற்குப்பக்கத்தில் தொண்டைமான் ஆற்றங்கரையில் கழிமுகத்துக்கண்மையில் செல்வச்சந்நிதி கோயில் அமைந்துள்ளது. சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்ற பெயர்களாலும் அழைக்கப்படும். கோயிற் சூழலின் இயற்கை அழகு எல்லோரையும் ஈர்ப்பது. சூழவுள்ள மருதமரக் காடும் பாக்கு நீரிணைக் கடலும் அருகே காணும் வயலும் இடையே கிழக்கே கிடக்கும் பரந்த எல்லை வெளியும் மக்கள் வாழ்வியல் காட்டும்.
சந்நிதி என்பது முருகன் முன்னிற்றலைக் குறிக்கின்றது. கோவிலின் மேற்குப்புறத்தேயுள்ள பூவரச மரமே தலவிருட்சம். கோபுரம் இல்லை. சுற்று மதிலும் இல்லை. 1950 களில் அடியார் தங்கக்கூடிய 18 மடங்கள் இருந்தன. 16 கிணறுகள் இருந்தன. இரு குளங்கள் இருந்தன. “மாணிக்ககங்கை” என அழைக்கப்பட்ட தீர்த்தக்குளமும் உண்டு. வாய் கட்டிப்பூசை செய்யும் மரபே உண்டு. 63 ஆலைகளில் மடையிட்டு அதனை மருந்தென எல்லோரும் வாங்கியுண்பர். இம் மடையிடல் நாள்தோறும் நடைபெறும். பாற்செம்பு, காவடி, கரகம், குழந்தையை விற்று வாங்கல், மொட்டையடித்தல்,கர்ப்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணை, அடியளித்தல், காதுகுத்துதல், பால்பருக்கல், சோறு தீற்றுதல் போன்ற வழிபாட்டு நடைமுறைகள் உண்டு.
ஆவணிப்பூர்வபட்சத்தில் விசேட திருவிழா 15 நாட்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் முருகன் கதிர்காமம் புறப்படுவதையும் திரும்பி வருவதையும் பாவணை செய்து நடைபெறும் விழாவும் சிறப்பான விழாக்களாகும்.
திருவிழாக்காலத்தில் சந்நிதியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.               தேர்த்திருவிழாவில் மரபான கட்டுத்தேரும் சித்திரத்தேரும் வலம் வரும். 1925ல் கட்டுத்தேருடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 1984ல் செய்யப்பட்ட சித்திரத்தேர் 1987ல் எரியுண்டது. திருவிழாக் காலங்களில் திருவிழா முடிய 12 சிறுமிகள் சிறு தட்டில் விளக்கேற்றி முருகனுக்கு ஆரத்தி எடுப்பர். திருவிழாவுக்குக் கொடித்தம்பம் இல்லை. கொடியேற்றத் தினத்தன்று கொடித்தம்பம் இருக்க வேண்டிய இடத்தில் வள்ளிக்கொடி ஒன்று முளைக்கும். விழாவிலும் நாளாந்த பூசையிலும் பறைமேளம் அடிக்கப்படும். பறை ஒலிகேட்டுப் பக்தர் ஆடுவர், பாடுவர், கண்ணீர் வடிப்பர். ஈற்றில் விபூதியைப் பூசி அமைதியடைவர். இது சந்நதி வழிபாட்டில் சொற்களால் விளக்க முடியாத பக்திக்கோலம்.
View Larger Map

Sharing is caring!

Add your review

12345