தமிழ்வேள் இ.க.கந்தசாமி

தமிழ்வேள் இ.க.கந்தசாமி

அமரர் தமிழ்வேள் இ.க.கந்தசாமி அவர்கள் (அவர்கள் கண்ணோட்டம்) தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களாலேயே உலகம் சிறப்புகளை தழுவுகின்றது. இவ்வகையில் தமிழுலகம் நன்மைப்பட வாழ்ந்தவர் இணுவில் மண் இனிதீன்றளித்த அறிஞர் தமிழ்வேள் கந்தசாமி அவர்கள்.
இணுவில் கிழக்கில் கந்தையா-சிவக்கொழுந்து தம்பதிகளின் மகனாகப் பிறந்து கற்றனகற்றுக் கற்றாங்கொழுகிய இ.க.கந்தசாமி அவர்கள் இணுவில் இளைஞர் சோவாசங்கச் செயலாளராயிருந்து ஊருக்கு உன்னத பணிகள் ஆற்றினார். இவரது குலதெய்வமாகிய சிவகாமி அம்மன் ஆலயத்தில் வெள்ளிதோறும் அறிஞர்களை அழைத்து நற்பிரசங்கங்கள் செய்வித்து வந்த இவருக்கு வழிகாட்டியாக விளங்கியவர். நாடறிந்த நல்லறிஞர் இணுவில் சபா ஆனந்தர் அவர்களாவார்.

சமயப்பணிகளோடு சமூகப்பணிகளிலும் முன்னின்றுழைத்த இவர் இணுவில் கிராம முன்னேற்றச் சங்கத்தின் செயலாளராகவும், உடுவில் கிராமசபை அங்கத்தவராகவும் செயற்பட்டுப்பல ஊர்ப்பணிகளை நிறைவேற்றினார். இணுவில் புகைவண்டி நிலையம், அஞ்சலகம் என்பன தோன்றவும், இணுவில் கிராமத்து வீதிகள் பலவும் திருத்தமுறவும் புதியபாதைகள் திறக்கப்படவும் காரணகர்த்தாவானார்.

இதுபோலவே அரசியலில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்த இவர் இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் இயங்குமுறுப்பினராக விளங்கித் தந்தை செல்வா கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று விளங்கினார். இவ்வாறே கல்விப்பணியிலும் கரிசினை கொண்ட ஆசிரியராக இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலை (இன்றைய மத்திய கல்லூரி) யில் பணியாற்றிப்பின்பு கொழும்புக்கு மாற்றப்பட்டார்.

தமிழ்வேள் இ.க.கந்தசாமி

அங்கும் ஆசிரியப்பணியோடு தமிழுலகு நன்கறிந்த கொழும்புத்தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளராக 30 ஆண்டுகளாகத் தமிழ்ப்பணியும் ஆற்றினார். நாடளாவிய வகையில் தமிழ் மாணவர் மத்தியில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தினார். தமிழ்ச் சங்கத்துக்குப் பெரியார்களை அழைத்து இலக்கிய, சமய, தமிழ், இலக்கண சொற்பொழிவுகளும் பெரியார்கள் நினைவு விழாக்களும் நடாத்தினார். இதனால் இவர் கொழும்பு தமிழ்ச் சங்க வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் முன் நல்லை ஆதீனத்தின் ஈழத்து தமிழ்ப்புவர் மகாநாடு இவரது முயற்சியால் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இணுவில் சின்னத்தம்பிப்புலவர் பாடிய சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவனத்தூது ஆகிய நூல்களை உரை எழுதி வெளிக்கொணர்ந்துள்ளார். இவர் வாழ்நாள் பிரமச்சாரியுமாவார். தமிழ்நாடு, மலேசியா, மொறிசீயஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள இவரால் இணுவிலும் ஈழமும் பெருமை பெறுகின்றது. இவரது இழப்பு இணுவிலுக்கு மட்டுமல்லாது தமிழுலகுக்கே பாரிய இழப்பாகும்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம்- http://inuvil.blogspot.com/ இணையம்.

Sharing is caring!

Add your review

12345