தம்பிராசா பரமலிங்கம்

தம்பிராசா பரமலிங்கம்

மானிப்பாய், நவாலியைப் பிறப்பிடமாகவும், இல 17/22 A, நாவலடி வீதி, வண்ணார் பண்ணை வடமேற்கு, யாழ்ப்பாணத்தை நிரந்தர வாழ்விடமாகவும் கொண்ட தம்பிராசா பரமலிங்கம் (தோற்றம் – 29.05.1945) குடும்பநிலை காரணமாக பாடசாலைப் படிப்பினை இரண்டாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டவர். நாடகம், சிறுகதை, நாவல், கவிதைத் துறைகளில் ஆற்றல் மிக்கவராக விளங்கும் இவர் கவிதைத் துறையில் மிகையான ஈடுபாடு கொண்டவர். மரபு வழிக் கவிதைகளை எழுதும் இவரை வரகவி என்று கூறுவது சாலவே பொருத்தமானதாகும்.

இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, தினகரன், மித்திரன், ஈழநாடு, முன்பு வெளிவந்து தற்பொழுது வெளிவராதிருக்கும் பத்திரிகைகளான சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலையரங்கில் தமிழர் திருநாட்களான தைப்பொங்கல், புதுவருடம், தீபாவளி ஆகிய தினங்களுக்காக நடைபெறும் கவியரங்குகளில் தம்பிராசா பரமலிங்கம் கலந்து சிறப்பித்துள்ளார். 19 62ம் ஆண்டு முதல் தனது இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தி வரும் இக்கலைஞர் யாழ்ப்பாணத் திறந்த வெளி அரங்கு போன்ற புகழ் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அரங்குகளில் பல நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். திரு. தம்பிராசா பரமலிங்கம் அவர்கள் 1965 ம் ஆண்டுக் காலப்பகுதி முதல் ஈழத்திருநாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கவியரங்குகளில் பங்கு கொண்டு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 2001ம் ஆண்டு இலங்கை இந்து சமயப் பேரவையால் ”கவிமணி” என்ற பட்டம் சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்ட இக்கவிஞர் யாழ் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம் மூன்றாம் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345