திருவெண்காடு சித்தி விநாயகர்

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயம் பற்றிய வரலாறு. தெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் இலங்கா புரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு. செந்நெல் வயல்களும், சிறு தானியங்களும், புகையிலையும், மா, பனை, தென்னை முதலிய விருட்சங்களும் செழித்து விளங்குவதும், செந்தமிழ் கற்றறிந்த பண்டிதர்களும், சைவநெறி வழுவாத சான்றோர்களும், செல்வந்தர்களும் வாழுகின்ற கரைகடல் நித்திலம் ஒலிக்கும் கிராமம் மண்டைதீவாகும். இப்பதியின் கண் வசித்து வந்த வேளான் குடி மக்களில் இலங்கை நாயக முதலியின் புதல்வன் குலநாயக முதலி அவர்களின் புதல்வன் ஐயம்பிள்ளை உடையார். இவர்களின் குடும்பத்தவர்கள் சிறந்த ஒழுக்கமும் சமய ஆசார விதிகளில் ஒழுங்கு தவறாமலும், சீவகாருண்யம் உள்ளவர்களாகவும், மக்களில் அன்புள்ளவர்கள்களாகவும், சிவ தொண்டு செய்பவர்களாகவும், செல்வச் சீமான்களாகவும் விளங்கினார்கள். ஐயம்பிள்ளை உடையார் இளம் பராயம் முதல் சிறந்த சிவ பக்தராக விளங்கியதுடன் சிவதொண்டு மக்கள் தொண்டு செய்வதில் அதிக விருப்புடனும் செயற்பட்டு வந்தார். இவர் 1773ம் ஆண்டு மண்டைதீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு என அழைக்கப்படும் பகுதியில் அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயிலை ஸ்தாபித்தார். இவ்வாலயத்தை இவர் அமைப்பதற்கு ஏதுவாக ஓர் ஐதீகக் கதை கூறப்பட்டு வருகிறது.

யானை வடிவில் தோன்றிய விநாயகர்

மண்டைதீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு எனும் குறிச்சி அக்காலத்தில் பற்றைகளும், திருக்கொன்றை, வேம்பு முதலிய மரங்களும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியாக திகழ்ந்தது. இக்காட்டில் ஓர் பெரிய ஆல விருட்சமும் காணப்பட்டது. இக்கிராமத்தின் வட பகுதியில் வசித்த மக்கள் தென்பகுதிக்கு இக்காட்டின் ஊடாகவே சென்று வந்தார்கள். அவர்கள் சென்ற பாதை அந்த ஆல விருட்சத்தின் அருகாமையில் அமைந்து இருந்தது. ஒரு நாள் மாலை நேரம் ஐயம்பிள்ளை உடையார் இப்பாதை வழியாக சென்று இவ் ஆல விருட்சத்தை கடந்து கொண்டிருக்கையில், தன்னை பின் பக்கத்தினால் ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற விரமை அவருக்கு ஏற்பட்டது. அவர் திணுக்குற்று திரும்பிப் பார்த்த போது ஆல விருட்சத்தின் கீழ் பெரிய வெள்ளை யானை ஒன்று தன் துதிக்கையை அவரை நோக்கி நீட்டிய வண்ணம் நின்றது. இதைக் கண்ணுற்ற ஐயம்பிள்ளை உடையார் ஆச்சரியப்பட்டார். இதன் போது யானை ஆலமரத்தின் மறுபக்கம் சென்று மறைந்துவிட்டது. இச்சம்பவம் அவருக்கு ஓர் அதிசயமாகவும், மிகுந்த பயமாகவும் இருந்த போதும் அவர் அவ் யானையை பார்க்க வுண்டும் என்ற ஆவலுடன் அச்சுற்றாடலில் தேடினார். ஆனால் அவரால் யானையை மீண்டும் காண முடியவில்லை. அவர் இச்சம்பவத்தை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊர்மக்களுக்கும் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அவர்கள் எல்லோரும் பிள்ளையார் தான் இவ்வாறு காட்சி அளித்தார் என்ற கருத்தை கூறினார்கள். இதன் காரணமாகவே அவர் அவ் ஆலய விருட்சத்தின் அருகில் பிள்ளையார் ஆலயத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது. பிற்காலத்தில் கோயிலுடன் கூடிய தொடர்பு கொண்டும் திருத்தொண்டுகள் செய்தும் வந்த மக்களில் பலர் தாம் காணும் கனவுகளில் கோயிலில் இருந்து வெள்ளை யானை ஒன்று வெளிப்பட்டு ஊரைச்சுற்றி வருவதாகவும் தங்கள் அருகில் வந்து நிற்பதாகவும் கூறி அதிசயித்தனர்.
By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345