துரையப்பா வைத்திலிங்கம்

துரையப்பா வைத்திலிங்கம்

ஈழத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அறுபதுகளில் வெளிவந்து பெருமளவில் விற்பனையானதும் அக்கால வாசகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றதுமான ஈழநாடு பத்திரிகையில் நல்ல பல சிறுகதைகளைப் படைத்தவர்களில் ஒருவர் அமரர் துரையப்பா வைத்திலிங்கம் அவர்கள். யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்த இவர் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவர். படைப்பாளியான இவரின் ஆளுமையை நினைவுகூரும் போது இரண்டு பக்கங்களை மிகத்தெளிவாக நோக்க முடியும். ஒன்று அவரின் அரச நிர்வாகப் பணி, மற்றையது அவரின் இலக்கியப் பணி. அரச பணியில் இறுதியாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரின் ஆக்கப்பணி என்றும் காரத்தால் அழிக்க முடியாதவை. புனைகதை வடிவங்களான குறுநாவல், நாவல், சிறுகதை ஆகியவற்றில் இவர் பங்களிப்பு அளப்பரியதாகும். ”மண்ணின் கனவுகள்” என்ற சிறுகதைத் தொகுதிதையும், ”ஒரு திட்டம் மூடப்படுகிறது”, ”பூம்பனி மலர்கள்”, சிறைப்பறவைகள்”, ”மண்ணின் குழந்தைகள்” முதலான குறுநாவல், நாவல்கள் ஆகியவற்றையும் இவர் ஆக்கித் தந்துள்ளார்.

இவருடைய புனைகதைகளை முழுமையாக படித்து முடிக்கும் போது மனதில் எஞ்சி நிற்கின்ற உணர்வுகள், ஏக்கம், தவிப்பு, துயரம் எல்லாவற்றிற்கும் ஆமலாக இந்த மண்ணின் அடிமட்ட மக்களை அழுத்தி நிமிரவிடாது, அமுக்குகின்ற அயோக்கியத் தனங்களின் பல்வேறு வடிவங்கள் சமூகத்தின் சிந்தனைக்கு முன் வைக்கப்பட்டிருக்கும். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆக்க இலக்கியத் துறையில் ஈடுபட்டு வந்தவர். சிறு வயதிலிருந்தே தன் ஆளுமையை இவர் வளர்த்து வந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் சிந்தனைத் தெளிவும், ஆற்றலும் மிக்க ஆசான்களான மு. கார்த்திகேசன், அற்புதரத்தினம், ஏரம்பமூர்த்தி, சிவராமலிங்கம், கணேசரட்ணம், ஆகியோரிடம் கல்வி கற்கின்ற தகுதி அவருக்கிருந்தது. வாசிப்பதில் இயல்பாகவே விருப்புடைய அமரர் துரையப்பா வைத்திலிங்கம் அவர்கள் நாடகம் நடிப்பதிலும் ஆற்றலுடையவராக விளங்கினார். பாடசாலைக் காலத்தில் மேடை நாடகங்களில் நகைச்சுவை நடிகராக வந்து பலரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். எழுத்துத்  துறையில் இவரது சாதனைக்காக யாழ் இலக்கிய வட்டம், தகவம் போன்ற நிறுவனங்களினால் பரிசுகள் வளங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345