தொண்டீஸ்வரம்

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில்

ஈழத் திருநாட்டின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் தென்னாவரம் தொண்டீஸ்வரம் சிவன் திருக்கோயிலும் ஒன்று. (இன்று காலத்தின் கோலத்தாலும், பிற சமய விரோதிகளின் சதியாலும் இத் திருக்கோயில் உருமாறி, பெயர் மாறி, உருத்தெரியாமல் ஆகியிருந்தாலும், இத் திருக்கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

தொண்டீஸ்வரம்

காலத்தால் முற்பட்ட இந்த அழகுத் திருக்கோயில் இன்று அழிந்துவிட்டாலும், இதனைப் பற்றி அறிந்து வைத்திருந்தால், ஏனைய ஈழத்து இந்துத் திருக்கோயில்களும் இதே நிலையை அடைந்து விடாமல் விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்பதே உண்மை.)

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில், ஈழத் திருநாட்டின் ஏனைய நான்கு ஈஸ்வரங்களைப் போலவே, காலத்தால் மிகவும் முற்பட்டது. இதன் ஆதிகாலத் திருக்கோயிலின் உருவாக்கம் பற்றி இன்று அறிய முடியவில்லை ஆயினும், இபின் பத்தூட்டா முதலிய பிற நாட்டு யாத்திரீகர்களும் வந்து, பார்த்து, வியந்து பாராட்டி, தமது வரலாற்று ஏடுகளில் எழுதி வைத்துச் செல்லுமளவுக்கு இத் திருக்கோயில் அழகிலும், செல்வாக்கிலும், தெய்வீகத்திலும் சிறந்து விளங்கியிருக்கின்றது.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், அத் திருக்கோயில் சைவ, வைஷ்ணவ பேதங்களுக்கு இடமளிக்காமல், முழு இந்து மதத்தவர்க்கும் பொதுவாக விளங்குமாறு, சிவபெருமான், மகா விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் ஒரே வளாகத்துள்ளேயே கோயில்களைக் கொண்டு அமைந்திருந்தது என்பதாகும். ( இதேபோல், தமிழகத்தில் தில்லைச் சிதம்பரம் முதலான சில சிவன் திருக்கோயில்களில் மகா விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் அமைந்து, “ஹரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவர் வாயில் மண்ணு” என்று காஞ்சிப் பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதை மெய்ப்பிப்பனவாக அமைந்துள்ளன.)

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இத் திருக்கோயில், இலங்கைத் தீவின் தெற்கு முனைப்பகுதியில், மாத்தறை என்னும் கடலோர நகரத்தில் அமைந்திருந்தது.

தொண்டீஸ்வரம்

இத் திருக்கோயில் தேவன்துறை கோயில், நாக ரீச நிலாக் கோயில் ( இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், அவர் ‘சந்திர மௌலீஸ்வரர்’ என்னும் திருப்பெயரைக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே இப்பெயர்) முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் இத்திருக்கோயில் தெவுந்தர தேவாலே என்று அழைக்கப்படுகின்றது.

மாத்தறைக் கடலோரத்தில் மிகவும் பரந்த இடத்தில் அமைந்திருந்த இத் திருக்கோயில் வளாகத்தில், சந்திர மௌலீஸ்வரர் என்னும் திருநாமங் கொண்ட சிவபெருமானுக்கும், தென்னாவரம் நயினார் என்று அழைக்கப்பட்ட மகா விஷ்ணுவுக்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. அவற்றுடன் கூடவே, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், மகா லக்ஷ்மி தேவி, அம்மன், பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மன், மற்றும் பல பரிவார தேவதைகளுக்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன.

அத் திருக்கோயில்கள் யாவுமே, திராவிட – கேரள சிற்ப மற்றும் கட்டிடக்கலை முறைகளுக் கிணங்க, சிவாகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்டிருந்தன. எல்லாத் திருக்கோயில்களும் அதி உன்னதமான கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடனும், தங்க முலாம் பூசப்பட்ட பித்தளைக் கோபுரங்களுடனும் உயர்ந்து விளங்கின.

அவ்வாறு தங்க வண்ணக் கோபுரங்களுடன் இத்திருக்கோயில் கோபுரங்கள் விளங்கியதால், கடல் மூலம் மாத்தறை மற்றும் காலித் துறைமுகங்களுக்குப் பயணம் செய்த மாலுமிகளின் பார்வையில் இத் திருக்கோயில் வளாகம் ஒரு தங்க நகரமாகக் காட்சியளித்ததாக வரலாற்று எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

அத் திருக்கோயில்கள் யாவுமே, திராவிட – கேரள சிற்ப மற்றும் கட்டிடக்கலை முறைகளுக் கிணங்க, சிவாகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்டிருந்தன. எல்லாத் திருக்கோயில்களும் அதி உன்னதமான கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடனும், தங்க முலாம் பூசப்பட்ட பித்தளைக் கோபுரங்களுடனும் உயர்ந்து விளங்கின.

அவ்வாறு தங்க வண்ணக் கோபுரங்களுடன் இத்திருக்கோயில் கோபுரங்கள் பிரகாசமாக விளங்கியதால், கடல் மூலம் மாத்தறை மற்றும் காலித் துறைமுகங்களுக்குப் பயணம் செய்த மாலுமிகளின் பார்வையில் இத் திருக்கோயில் வளாகம் ஒரு தங்க நகரமாகக் காட்சியளித்ததாக வரலாற்று எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

கிரேக்க கடலோடியான தொலமி என்பவர் வரைந்த இலங்கைத் தீவின் வரைபடத்தில் இந்த ஐந்து ஈஸ்வரங்களும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

தொண்டீஸ்வரம்

ஆறாம் நூற்றாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கைத் தீவின் கரையோரப் பிரதேசங்கள் முழுவதுமே தமிழ் மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக்கொண்ட அந்தப் பிரதேசம் நாகநாடு என்று அழைக்கப்பட்டது. ( உ-ம்:நாகதீபம் திருக்கோயில் முதலியன).

அவர்களின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தீவின் கரையோரத்தில் முக்கியமான முனைகளில் அமைந்திருந்த இந்த ஐந்து ஈஸ்வரங்களும் மிகச் சிறந்த முறையில் அபிவிருத்தி அடைந்தன.

சிம்ம விஷ்ணுவின் பேரனாகிய முதலாம் நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னன் இலங்கைத் தீவை ஆட்சி செய்தபோது, இதுபோன்ற மேலும் பல கருங்கற்கோயில்களைக் கட்டினான்.

மேலும், தமிழகத்தில் ஆட்சிசெய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இத் திருக்கோயிலுக்குப் பெருமளவு தானங்களை அளித்ததுடன் பல திருப்பணிகளையும் செய்து சிறப்பித்தார்கள்.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் மிகச் சிறந்த துறைமுக நகராகவும் விளங்கியது. வணிகர்களும், யாத்திரீகர்களும் கடல் மூலம் இத் துறைமுகத்துக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டதுடன் (முக்கியமான வணிகப்பொருட்கள்: முத்து, கறுவாப்பட்டை முதலிய வாசனைப் பொருட்கள்) சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே வழிபட்டுக் காணிக்கைகளைச் செலுத்திச் சென்றனர்.

அதன் காரணமாக இத் திருக்கோயில் பெரும் செல்வ வளம் நிறைந்ததாக விளங்கியது. தமிழகத்திலிருந்து யாத்திரீகர்கள் மாதோட்டம் (திருக்கேதீஸ்வரம்), புத்தளம் (முன்னேஸ்வரம்) முதலிய துறைமுக நகரங்கள் வழியாக அத்தலங்களில் அமைந்திருந்த ஏனைய ஈஸ்வரங்களில் விழிபட்டபின்னர், அவ்வழியாக கடல்மூலம் மாத்தறை தொண்டீஸ்வரம் துறைமுகத்துக்கு வருகை தந்து இறைவனை வழிபட்டுச் சென்றனர்.

1236 – 1270 ஆம் ஆண்டுக்காலத்தில், தம்பதேனியாவை ஆண்ட இரண்டாம் பராக்கிரமபாகு மற்றும் 1301 – 1326 ஆம் ஆண்டு ஆட்சி செய்த நான்காம் பராக்கிரமபாகு என்ற மன்னர்கள் இத் திருக்கோயிலுக்குப் பெருந்தொகையான தானங்களை வழங்கியதுடன் பல திருப்பணிகளையும் செய்தார்கள். மேலும் கோட்டை என்ற நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஏழாம் புவனேகபாகு என்ற மன்னன்.

இவன் ஓர் இந்து மன்னன், தனது அரசாணைகள் யாவையும் தமிழ் மொழியிலேயே கையொப்பமிட்டான். இத் திருக்கோயிலுக்குப் பலவித திருப்பணிகள் செய்து கோயிலை மேலும் அழகுபடுத்திச் சிறப்பித்தான்.

மொராக்கோ என்ற நாட்டைச் சேர்ந்த யாத்திரீகரான இபின் பத்தூட்டா என்பவர் பதினான்காம் நூற்றாண்டில் புத்தளம் வழியாக கடல்மூலம் இத்திருக்கோயிலுக்கு வந்து, இத்திருக்கோயிலின் அழகையும், புனிதத்துவத்தையும், அங்கே வாழ்ந்துவந்த பக்தர்கள், துறவிகள் மற்றும் இறைவன் சந்நிதியில் நடனமாடிய நூற்றுக்கணக்கான தேவ நடனப் பெண்களையும் பற்றி தமது பயண நூலில் அழகுற வர்ணித்துள்ளார்.

இவ்வாறு, பல நூற்றாண்டுக்காலம் மன்னர்களாலும், பக்தர்களாலும், பிற தேச யாத்திரீகர்களாலும் சிறப்பாகப் போற்றப்பட்ட இத் திருக்கோயில், இலங்கைத்தீவைக் கைப்பற்றிய அந்நிய ஆட்சியாளர்களாகிய போர்த்துகேயர்களால் முற்றிலுமாக இடித்து, அழித்துச் சூறையாடப்பட்டது.

போர்த்துக்கேயக் கடற்படைத் தளபதியான தாமஸ் டி சூசா என்பவனின் தலைமையில், பெருந்தொகையான போர்த்துகேய வீரர்கள் இத் திருக்கோயில்களையும், கோயில் வளாகம் முழுவதையும் 1588 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இடித்து அழித்ததுடன் கோயிலில் பணியாற்றிய பக்தர்கள், பூசகர்கள் முதலிய அனைவரையும் படுகொலை செய்து, திருக்கோயில்களில் நிறைந்திருந்த விலையுயர்ந்த திரவியங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தார்கள்.

திருக்கோயிலினுள்ளே பசுமாட்டை வெட்டி கோயிலின் புனிதத்துவத்தை இழிவுபடுத்தினார்கள்.

இத் திருக்கோயில்களின் கருங்கற்களைக் கொண்டு மாத்தறைக் கோட்டையைக் கட்டியெழுப்பினார்கள். அந்நாட்களுடன் இத்திருக்கோயில் தனது புனிதத்துவத்தையும், மகத்துவத்தையும் இழந்தது.

அதன்பின்னர், இந்தப் பிரதேசம் தமிழ் மக்களின் கைகளை விட்டு அகன்றதால், இத்திருக்கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டித் திருப்பணி செய்து, அதன் பழைய மாட்சியை மீண்டும் நிலைநாட்ட யாருமே முன்வரவில்லை.

நீண்ட காலத்துக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டில், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் இத்திருக்கோயிலின் சிதைபாடுகளும், தெய்வத் திருவுருவச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், நான்கரை அடி உயரம் கொண்ட பூர்வீகமான சிவலிங்கமும், விநாயகர், முருகன், நந்தி, லக்ஷ்மிதேவி, துவார பாலகர்கள் முதலிய திருவுருவச் சிலைகளும், இருநூறுக்கும் மேற்பட்ட கருங்கற் தூண்களும், மகர தோரண வாயில்களும் அடங்கும். இப் பொருட்கள் யாவும் தற்போது பல பொருட்காட்சிச் சாலைகளில் உறங்குகின்றன.

இத் திருக்கோயில் அமைந்திருந்த வளாகத்தில் புத்த மத விகாரை அமைந்திருப்பதுடன், அவற்றின் ஒரு புறத்தில், சிங்கள பௌத்தமயமாக்கப்பட்ட விஷ்ணு தெய்வத்தின் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

சிங்கள மக்கள் மகா விஷ்ணுவை ‘சக்க தெய்யோ’ என்று அழைத்து வணங்குகின்றார்கள். அவர் தமது கரத்தில் சக்கரம் வைத்திருப்பதால் அப்பெயர். அதேபோன்று, கணபதி என்று அழைக்கப்படும் விநாயகரை கண தெய்யோ என்றும், கண்ணகியை பத்தினி தெய்யோ என்றும் அழைக்கின்றார்கள்.

இந்தக்கோயில் சிங்களக் கலாச்சார முறையில் ஒரு கூரைக் கோயிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கோயிலினுள்ளே காணப்படும் மகாவிஷ்ணுவின் திருவுருவம் நீல வண்ணத்தில், சிங்களக் கலாசார முறையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், கோயிலின் சுவர்களும் நீல வண்ணத்தில் காட்சியளிக்கின்றன.

சிங்கள பௌத்த மக்கள் இத்தெய்வத்தை உப்புல்வண்ண தெய்யோ என்று அழைத்து வணங்குகின்றார்கள்.

தொடர்புடைய ஈஸ்வரங்கள்

திருக்கோணேஸ்வரம்

திருக்கேதீஸ்வரம்

முன்னேஸ்வரம்

நகுலேஸ்வரம்

நன்றி – மூலம்- சிவன்ரெம்பிள் இணையம்.

Sharing is caring!