நடேஸ்வராக் கல்லூரி

நடேஸ்வராக் கல்லூரி

காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தப் பாடசாலை பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாகும்.

 

நடேஸ்வராக் கல்லூரி வீதிக்கு வடக்குப் பக்கத்தில் கனிஷ்ட பாடசாலையும், தெற்குப் பக்கத்தில் உயர்தர பாடசாலையும் அமைந்திருந்தன. காங்கேசந்துறை நகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல, கிழக்கே கீரிமலை, போயிட்டி, மேற்கே மயிலிட்டி, பலாலி, தெற்கே மாவிட்டபுரம், கட்டுவன், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் பல மாணவர்கள் இங்கே வந்து கல்வி கற்றனர். இதைவிட சீமெந்துத் தொழிற்சாலையில் உத்தியோகம் பார்த்த பல வெளி மாகாணத்துப் பெற்றோரின் பிள்ளைகளும் இங்கே வந்து கல்வி கற்றனர்.

நடேஸ்வராக் கல்லூரி

அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை திரு.தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் நடேஸ்வராக் கல்லூரியின் முகாமையாளராக் கடமையாற்றினர்.

திரு. சின்னத்தம்பி, இடையாற்று மங்களம் திரு.சுப்ரமணிய ஐயர், இடையாற்று மங்களம் திரு.சூடாமணி ஐயர், திரு. கந்தசாமி, திரு. மார்க்கண்டு, திரு. கிருஷ்ணபிள்ளை, திரு. சிவப்பிரகாசம்,  திரு. சோமசுந்தரம் போன்றோர் உயர்நிலைப் பாடசாலையில் அதிபர்களாகக் கடமையாற்றினார்கள்.

நடேஸ்வரா கனிஷ்ட பாடசாலையில் அக்காலத்தில் திரு. சபாபதிப்பிள்ளை, திரு. சிதம்பரப்பிள்ளை, திரு. கந்தையா, திரு. திருநாவுக்கரசு, திரு. மு.அ. குருநாதபிள்ளை ஆகியோர் அதிபர்களாக இருந்தார்கள்.

நடேஸ்வராக் கல்லூரி

நடேஸ்வராக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. குரு வீதிக்கு வடக்குப் பக்கமாகவும் சந்தை வீதிக்குத் தெற்குப்பக்கமாகவும், காங்கேசந்துறை – யாழ்ப்பாணம் பெரிய வீதி மேற்குப் பக்கமாகவும், கிழக்கே தொடர் வண்டிப் பாதைக்கு அருகாமையிலும் இக் கல்லூரி அமைந்திருந்தது. காலையும் மாலையும் உள்ளுர் தொடர்வண்டி ஒன்று அருகே உள்ள தரிப்பிடத்தில் நின்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏற்றிச் செல்வதுண்டு.

 யுத்தம் காரணமாக இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வந்ததால் இக் கல்லூரி இடம் பெயரவேண்டி வந்தது. பாலர் வகுப்பில் இருந்து உயர்தர வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றனர்.

நேர்மை நெறி நில் என்ற கல்லூரி வாசகத்திற்கு ஏற்ப பல கல்விமான்களை உருவாக்கித் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை தேடித்தந்தது.  உயர் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுக் கொண்டதால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதித் தெற்கு நோக்கி இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரிக் கீதம்

போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்
புகழும் நீதி கலைகள் மேவும் சிகரமாக திகழும் தாயை
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்

பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே
பொறையில் நேர்மை நெறிநில் நீதி அறிவை ஊட்டும் முறையிலே
கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில்
கருணை வெள்ளம் பெருகி ஞான அருவி ஊறும் வாரியை
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்

ஆங்கில் மொழி ஓங்கி விளங்க ஆய்ந்த செந்தமிழ் காவியம்
ஆரியமிசைக் கீதநடனம் அரிய கணிதம் ஓவியம்
பாங்கு மிகுந்த சாஸ்திரத்துடன் பயிற்சித் தொழில்கள் யாவுமே
பாலித்தருளும் பான்மை பெருகப் பானு நிகர வாழ்கவே
போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்

கீரிமலை தீர்த்தக்கேணி

கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தொடர் வண்டிப் போக்குவரத்து, பேருந்துப் போக்குவரத்து என்று எல்லாவிதமான போக்குவரத்துத் தொடர்புகளையும் கொண்டதுதான் காங்கேசந்துறை பட்டினம். நடேஸ்வராக் கல்லூரி அமைந்திருந்த நகரமான காங்கேசந்துறை வடக்கே பாக்குநீரணையும், கிழக்கே பலாலி விமான நிலையத்தையும், தெற்கே மாவிட்டபுரத்தையும், மேற்கே கீரிமலையையும் எல்லையாகக் கொண்டிருந்தது.

 
 
மாவைக்கந்தன்
வெளிச்சக்கூடு

யாழ்பாணக் குடாநாட்டின் வடபகுதியில் முக்கிய கேந்திர நிலையமாகத் திகழ்ந்த காங்கேசந்துறை, தென்னிந்தியாவில் இருந்து 18 மைல் தூரத்தில் தென்கிழக்குப் பக்கமாக அமைந்திருக்கிறது. காங்கேசந்துறைக்கு வடக்கேயுள்ள பாக்கு நீரணை இலங்கையையும் இந்தியாவையும் கடல் நீரால் பிரிக்கிறது. இனமத வேறுபாடின்றி எல்லாவித மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த இடம் காங்கேசந்துறையாகும்.
அழகான கடற்கரைத் துறைமுகத்தைக் கொண்ட காங்கேசந்துறையின் மேற்குப் பகுதி சுண்ணக்கல் பிரதேசமாக இருப்பதால், இலங்கையிலே சீமெந்து உற்பத்தியில் முதலிடம் வகிப்பது காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையாகும். உள்நாட்டுப் போர்காரணமாக இன்று செயலிழந்து நிற்கிறது. சோழ இளவரசியான மாருதப்புரவீகவல்லி தான் வழிபடுவதற்காக சோழநாட்டில் இருந்து கொண்டுவந்த முருகக்கடவுளின்(மாவைக்கந்தன்) விக்கிரகம் இத்துறையில் வந்து இறங்கியதால், முருகக்கடவுளுக்கு இன்னுமொரு பெயர் காங்கேயன் என்பதால், காங்கேயந்துறை என்று பெயர் பெற்றது.
வடபகுதியில் இருக்கும் கடைசித் தொடர்வண்டி நிலையம் காங்கேசந்துறை என்பதால் சுற்று வட்டத்திலிருந்து பல பிரயாணிகள் இங்கே வருவதுண்டு. கொழும்பு வரை செல்பவர்கள் இருக்கை எடுப்பதற்காக இங்கே வந்து தொடர் வண்டி எடுப்பார்கள். கொழும்பில் இருந்து நான்கு தடவைகள் இந்த நியைத்திற்குத் தொடர் வண்டிகள் தினமும் வருவதால் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும். காங்கேசந்துறைக்குத் தெற்கே உள்ள மாவிடபுரமும் மேற்கேயுள்ள ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரமும் புராதன காலத்தில் இருந்து இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகத் திகழ்கின்றன. இதற்கான சரித்திரச் சான்றுகள் நிறையவே உண்டு.
காங்கேசந்துறைக் கலங்கரை விளக்கம் மிகவும் புகழ் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் காங்கேசந்துறைக் கோட்டை அத்திவாரத்தின் மேல் 1893ம் அமைக்கப்பட்டது. 82 அடி உயரம் கொண்டது. ஒரே சீரான நேரத்தில் மூன்று தடவைகள் 15 விநாடிகள் இடைவெளியில் மின்னி மின்னி எரிவதே இதன் அடையாளமாக இருந்தது. 14 கடல் மைல் தூரத்திற்குத் தெரியும் இதன் வெளிச்சம் வடபகுதி மீனவர்களுக்கு வழி காட்டியாகவும் அமைந்திருந்தது.
பருத்தித்துறை – கீரிமலை வீதியைக் காங்கேசந்துறை  – யாழ்ப்பாணம் வீதி சந்திக்கும் இடத்தில் இந்தக் கலங்கரை விளக்கம் அமைந்திருக்கிறது.

புகையிரத நிலையம்


.
By – Shutharsan.S

நன்றி – ஆக்கம் – குரு அரவிந்தன்

Sharing is caring!

Add your review

12345