நாச்சிமார் கோவில்

நாச்சிமார் கோவில்

வண்ணை ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் அல்லது நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் இலங்கைத் தீவின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மாநகரின் வண்ணார்பண்ணை பிரதேச சபையின் வடக்கே காங்கேசன்துறை வீதியும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வீதியாகிய இராமநாதன் வீதியும் இணைகின்ற இடத்திலே அமைந்திருகின்றது.

நாச்சிமார் கோவில் கி.பி 1870 ம் ஆண்டு, விஸ்வப்பிரம்மகுல மேஸ்திரியாகிய கந்தர் என்பவரால் கல்லினால் கட்டப்பட்டதாக 1898 இல் யாழ்ப்பாண அரச அதிபரினால் வெளியிடப்பட்ட ஆலயங்கள் பற்றிய ஒரு அரசாங்கக் குறிப்பேட்டிலே காணப்படுகிறது. அத்துடன் அங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்றும், இக்கோயில் விஸ்வப்பிரம்ம குலத்தவர்கள் வசம் காணப்பட்டதென்றும் பதிவேட்டுக் குறிப்பிலே குறிப்பிடப்படுள்ளது. அத்தோடு இக்கோயில் அமைந்துள்ள காணி குளங்கரை மருதடி எனவும் உறுதியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் ஸ்தல விருட்ஷம் மருத மரம் ஆகும்.

இந்த ஆலயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே “நாச்சிமார் கோவில்” என சிறப்பாக அழைக்கப்பட்டது.

“கங்கையார் சடையானைக் காசினியில் பூசனை செய்
மங்கையார் காமாட்சி மாதேவி மருவுமிடஞ்
செங்கையால் நாச்சிமார் சிறு விறகையொடித்தாளின்
கொங்கையாய்ந் தொளிர் வண்ணைக் குளங்கரை சார் மருதடியே”

இப்பாடல் இந்த ஆலயம் உருவான விதம் பற்றி விஸ்வகுலக உயர்நீதிமன்ற நியாயதுரந்தர் திரு. நமசிவாயம் சிவக்கொழுந்து அவர்களால் பாடப்பெற்றது.

ஒவ்வொரு கோவிலும் எவ்வாறு உருவாகியது என்பதனைப் பற்றிய குறிப்புகளை, தலபுராணங்கள் மூலமாகவும், கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாகவும், வரலாறு மூலமாகவும் அறியக்கூடியதாக உள்ளது. இந்த ரீதியில் நாச்சிமார் கோவில் பற்றிய கர்ணபரம்பரைக் கதையொன்று இப்பிரதேச மக்களிடையே வழக்கில் காணப்படுகிறது.

நாச்சிமார் கோவில்

ஆதிகாலத்தில் இப்பகுதியில் இருந்ததொரு குளத்தைச் சுற்றி நாவல் மரங்களும், மருத மரங்களும் சுற்றுப்புறங்களில் வயல்வெளிகளும் நிறைந்த மிகச்செழிப்பான பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. இப்பகுதியில் விஸ்வப்பிரம்மகுல மக்களே மிகவும் செறிந்து வாழ்ந்தனர். இங்குள்ள பெண்கள் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விறகு சேகரிப்பது வழக்கம். இப்படியிருக்கையில் ஒருநாள் தன்னுடைய மாதவிடாய்க் காலத்தில் விறகு பொறுக்குவதற்காகச் சென்ற ஒரு கன்னிப்பெண், அப்பகுதியிலிருந்த ஒரு மருதமரத்தின் மறைவில் சென்று சிறுநீர் கழித்துகொண்டிருந்தாள். அவ்வேளையில் இந்த கன்னிப்பெண், அந்த மருதமரத்திலிருந்து வந்த ஒரு தேவதை போன்ற ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அதேவேளையில் தன்னுடைய முலைகளை திருகுவதைப் போன்ற வேதனையையையும் தான் உணர்ந்து உடனடியாக அவ்விடத்தை விட்டகன்று வீட்டிற்கு வந்து வீட்டாரிடமும், ஏனையோரிடமும் தனக்கு நடந்ததை கூறியிருக்கிறாள். இதனால் அந்தக்கிராம மக்கள் பெரிதும் பீதியடைந்தனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற கண்ணாத்தை என்னும் விஸ்வகுல வயோதிப மாது மருதமரத்தடியில் கண்ட அந்தப்பெண் தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக அவ்விடத்தில் ஒரு கல்லை வைத்து விளக்கேற்றி நாச்சியார் எனப் பெயரிட்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தார். கண்ணாத்தையைப் பின்பற்றி அந்தக் கிராம மக்களும் நாச்சியாரை வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் நாச்சியார் செய்யும் புதுமைகளைக் கேள்வியுற்று, இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். இவ்வழிபாட்டால் நாச்சியாரின் அருளையும் ஆசியையும் பெற்ற இம்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவ்விடத்தில் ஆலயமொன்றை அமைத்து, விக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள எண்ணினார்கள். அதன்படி அவ்விடத்தில் சிறு கோவிலொன்றைக் கல்லினால் கட்டி, அங்கு மாரியம்மனை வைத்து வழிபாடு செய்துவர ஆரம்பித்தனர். ஆலயச் சுற்றாடலிலே வாழ்ந்த பொற்கொல்லர்கள், காமாக்ஷியைக் குல தெய்வமாக வணங்கும் வழக்கமுடையவர்களாகக் காணப்பட்டனர். எனவே, இக்கோயிலில் காமாக்ஷியையே வைத்து வணங்கவேண்டும் என்று கூறினர். இவர்கள் கருத்து மேலோங்கியதால், பூணூல் வைத்தியலிங்கப் பத்தர் என்பவர், தென்னிந்தியாவிற்குப் போய் காஞ்சி காமாக்ஷியின் திருவுருவத்தைச் செய்வித்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.

கல்லால் கட்டப்பட்ட கோயில் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் புதிதாக அமைக்கப்பட்டபோது, மூலஸ்தானத்தில் அன்னை காமாக்ஷி விக்கிரகமும் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் கி.பி 1887 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயம் விருத்தியடைய இதனைச் சரிவர நிர்வாகிக்கும் பொருட்டு, கி. பி 1893 ஆம் ஆண்டில் ஆலய பரிபாலத்திற்கென அமைக்கப்பட்ட ஐவரைக் கொண்ட பஞ்சாயத்தும், பதின்நான்கு பேரைக் கொண்ட நிர்வாக சபையும் நிறுவப்பட்டது. இவர்கள் நிர்வாகத்தில் இக்கோவில் வளர்ச்சி கண்டதோடு, நாச்சி அம்மனின் அருளும், புகழும் உலகெல்லாம் பரவத்தொடங்கியது. இதன் பின்னர் சுற்றுப்புறப் பிரதேசங்களில் உள்ளவர்கள் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் இக்கோயிலுக்கு மக்கள் வர ஆரம்பித்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரு.நமசிவாயம் செல்லப்பா என்பவர் இந்தியாவிற்கு தலயாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது சுவாமிமலையிலுள்ள சிற்பாச்சாரியாரைக் கொண்டு, விக்கிரகங்கள் பலவற்றைச் செய்வித்தார். பூமாதேவி, மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணு, இலக்குமி, வள்ளிநாயகி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, வைரவர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரி ஆகிய விக்கிரகங்களை அவர் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வந்தார். இவ்விக்கிரகங்கள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவ்வேளையில் சுற்றுப்பிரகார மண்டபமும் அமைக்கப்பட்டு, 1926 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடித்தம்பமும் அமைக்கப்பட்டு, கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பத்துத் திருவிழாக்கள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

1965 ஆம் ஆண்டிலே சப்பைரதம் செய்யப்பட்டது. பல புனருத்தாரணப் பணிகளின் பின் 1967 ஆம் ஆண்டுஇ மீண்டும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்தோடு பத்து நாட்கள் நடைபெற்றுவந்த வருடாந்த மகோற்சவம், பதினைந்து நாட்களாக மாற்றம் பெற்றது. 1968 ஆம் ஆண்டு சிறு மஞ்சமும் செய்யப்பட்டது. 1971 ஆம் ஆண்டு இவ்வாலயத்திற்கென அழகிய சிற்பத்தேர் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிற்பாச்சாரியார் ஆ.தம்பித்துரை அவர்கள் இத்தேரை உருவாக்கினார். சித்திரத்தேரின் அடித்தளத்துச் சிற்பங்கள் சில இந்தியாவில் செய்யப்பட்டன.

இக்கோயிலின் இராசகோபுரம் சைவாகம விதிகளுக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டது. இராசகோபுரத்தை அமைக்கும் பணிகள் 1976 ஆம் ஆண்டிலே ஆரம்பமாகியது. இவ்வேலைகள் தமிழகச் சிற்பாச்சாரியாரான நாகலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அற்புதமான அமைப்பைக் கொண்ட இக்கோபுரம் 51.5 அடி உயரமும், 17.5 அடி விட்டமும் கொண்டது. இக்கோபுரத்திலே ஐந்து வாசல்களும், ஐந்து கலசங்களும் காணப்படுகின்றன. கோபுரத்தின் அடித்தளத்திலே கோயிலோடு தொடர்புடைய ஐதீகங்கள் சிற்பவடிவிலே பேசும் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் மணிக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வலதுபுற மணிக்கோபுரம் 1985 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டது. கோபுரத்தைக் கடந்து சென்றதும் உள்ளே கொடித்தம்பம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைத் தரிசிக்க முடிகின்றது. பலாமரத்தினால் செய்யப்பட்ட கொடித்தம்பம் செப்புத்தகட்டினால் சுற்றப்பட்டுள்ளது.

நாச்சிமார் கோவில் கர்ப்பக்கிரகத்தில் மூலமூர்த்தியாக அமைந்துள்ள காமாக்ஷி அம்பாளின் வடிவம், ஸ்தானக நிலையிலே கருங்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாளின் இடக்கரங்களில் முல்லை, அசோகு, மா, நெய்தல், தாமரை ஆகிய ஐந்துவகை மலர் அரும்புகளும், வலக்கரங்களுள் ஒன்றிலே கரும்பு வில்லும், மற்றொன்றிலே அங்குசமும் காணப்படுகின்றன. அர்த்தமண்டபத்தின் வாயிலில் துவாரபாலகர்கள் காணப்படுவர். இக்கோயிலில் மகாமண்டபத்திலே சிவன், சுக்கிரவார அம்மன், முருகன், பிள்ளையார், சண்டேஸ்வரி, நந்தனகோபாலர் ஆகியோரின் பித்தளை உருவச்சிலைகள் காணப்படுகின்றன. மகாமண்டபத்து வாசலிலே நந்தா, சகந்தா என்னும் துவாரபாலகர்களின் சிலைகள் காணப்படுகின்றன. அவை தற்போது (2006) ஆலயக் கோபுரவாசலின் இருமருங்கிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பிள்ளையார், பூமாதேவி, மகாலட்சுமி சமேத விஷ்ணு, விஸ்வப்பிரம்மா, இலக்குமி, வள்ளிநாயகி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி, வைரவர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரி ஆகியோர் இக்கோயிலிலுள்ள பரிவார மூர்த்திகளாவர்.

திருமுறைகளுக்கும், விராட்புருஷனாகிய விஸ்வப்பிரம்மனுக்கும் பூசை செய்வது இக்கோயிலுக்கேயுரிய மரபாகக் காணப்படுகிறது. திருவிழாக்காலத்திலே அம்மனுக்குக் கட்டியங் கூறப்படும்போது,

“யாழ்ப்பாணம் வண்ணை மாநகரே ஸ்ரீமத்
குளங்கரை மருதடி ஸ்ரீ காமாட்சி அம்பிகா
ஜாக த்வஜாரோகணாதி தீர்த்தாந்த
பஞ்சதச தின பரியந்தம மஹோத்சவ
கல்யாண சேவாந்தே மனு மய
துவஷ்டா சிற்பி விஸ்வக்ஞ வம்சகுல
தேவாலயே அனுமத்த்வஜ மேகவாகன
பஞ்சானன பரப்பிரம்ம விராட் விஸ்வப்பிரம்ம
குல சமூக சித்தே”

எனக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் நித்திய, நைமித்திக வழிபாடுகள் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும். தினமும் ஐந்துகாலப் பூசை நடைபெறும். சில சமயங்களிலே சங்காபிஷேகமும் நடைபெறுவதுண்டு. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பான பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று, கன்னிகளும், சுமங்கலிகளும் நன்மை பெரும் பொருட்டு திருவிளக்குப்பூசை வழிபாடு நடைபெறுகின்றது. இக்கோயிலின் வருடாந்த மகோற்சவம் பதினைந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. வருடாவருடம் சித்திரை பௌர்ணமிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும். திருவிழாக் காலங்களில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்திற்குரிய சிறப்பான நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்க இவ்வாலயத்தை ஆதாரமாகக் கொண்டு பல பொதுப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 1960 ஆம் ஆண்டளவில் உருவாகிய வண்ணை ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபை, வெள்ளிக்கிழமை தோறும் பிள்ளைகள் திருமுறைகளைக் கற்க ஏற்பாடு செய்தது. இவற்றோடு திருக்குறள் வகுப்பு, சமய வகுப்புகளையும் நடத்தி இளந்தலைமுறையினரின் சமய ஊக்கத்திற்கு ஆதாரமாயிருந்தது. 1969 ஆம் ஆண்டிலிருந்து “ஶ்ரீகாமாட்சி சனசமூக நிலையம்” இயங்கி வருகிறது. 1986 ஆம் ஆண்டிலே அன்னதானசபை உருவாக்கப்பட்டது. திருவிழாக்காலங்களிலும், ஆலய விசேட தினங்களிலும் அன்னதானம், குளிர்த்தி ஆகியவற்றைச் செய்து வருகிறது. 1989 ஆம் ஆண்டிலே தோன்றிய ஆலயத் தொண்டர்சபை, ஆலயத் தொண்டுகளைச் செய்ய உதவி வருகின்றது. 2000 ஆம் ஆண்டிலிருந்து “ஶ்ரீகாமாக்ஷி முன்பள்ளி” இயங்கி வருகிறது.

இவ்வாலயத்தில் சைவ ஆகம முறைப்படி கிரியைகள் யாவும் நடைபெற்று வருகின்றன. 1887, 1926, 1967, 2006 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகங்கள் நடைபெற்றிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொடித்தம்பமும் புதிதாக பித்தளையினால் செய்யப்பட்டு அழகூட்டப்பட்டது. விஸ்வப்பிரம்மா கோயிலுக்கு பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விஸ்வப்பிரம்மா விக்கிரமும், ஐந்து ரிஷிகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

ஆரம்ப காலத்தில் மருதமரத்தடியில் ஆரம்பித்த தேவதை வழிபாடு, தற்காலத்தில் பெருவளர்ச்சியடைந்து, நாளடைவில் ஆகம வழிபாட்டைக் கொண்ட கோயிலாக மாற்றமடைந்து உள்ளது. இக்கோயில், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை காமாக்ஷி அம்மன் ஆலயம் என வழங்கப்பட்டுள்ளபோதிலும், நாச்சிமார் கோயில் என்ற பெயரே புகழ்பெற்ற பெயராகி, யாழ்ப்பாணத்திலுள்ள அம்பிகை ஆலயங்களுள் அருளும், பெருமையும் மிக்க ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – வண்ணை ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் 2006. சித்திரத்தேர் மலர் 1971.

ஒருங்கிணைப்பு – சர்மிளா

Sharing is caring!

Add your review

12345