நாதோலை அருள்மிகு முத்துமாரியம்மன்

இளவாலை நாதோலை முத்துமாரியம்மன் பழமையும் புதுமையும் வாய்ந்த ஆலயமாக ஏறத்தாழ நூற்றியம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆலயமாகும். இவ்வாலயத்திற்கு ஒருமண்டபம் அமைத்துத் தரும்படி சேர் .பொன். இராமநாதன் அவர்களுக்கு கனவில் தோன்றியதாகவும் அவர்களால் ஒருமண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகின்றது. இவ்வாலயச் சுற்றாடலில் வாழ்ந்தவர்கள் இயல், இசை, நாடகத்துறையில் சிறந்து விளங்கியதால் நாதஅலை என்று அழைக்கப்பட்டதாகவும் நாளடைவில் இப் பெயர் நாதோலை என்று வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாலய அயலில் உள்ள வயல்களில் நெல்விதைப்பார்கள். நெல்நாற்று இடமுன் அம்மனிடம் நேர்த்தியிட்டு விதைத்து அறுவடை செய்வார்கள். நேர்த்தியாக பங்குனித்திங்களுக்கு பொங்கி அம்மனுக்குப் படைப்பது வழமையாகும். இவ்வாலயத்தின் புதுமைகளில் வெப்ப நோய்களைத் தீர்ப்பதில் அருள் மிக்க ஒன்றாகும். இவ்வூர்மக்கள் பங்குனியில் குளிர்த்தி செய்வார்கள். வெப்ப நோய்களைத் தீர்ப்பதற்காக அம்மனிடம் அருள் வேண்டி வணங்குவார்கள்.

இவ்வாலயத்திற்கும் கொடிகாமத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது என வரலாறு. அங்கும்நாதோலை அம்மன் வைத்து ஆதரிக்கின்றார்கள். இளவாலை நாதோலையம்மனை சிவஸ்ரீ வ.வேலுப்பிள்ளை வீரசைவ சிவாச்சாரியாரால் இவ்வாலயத்தினைப் புனரமைத்து இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மூலமூர்த்தி நிர்மானிக்கப்பட்டு தற்போது உள்ளமை குறிப்பிடத்தக்கவை. இவரின் மகன் வே.கந்தவனம் ஐயா மூன்று வாத்தியக் கருவிகளை ஒரே நேரத்தில் தானே இயக்கி வாயினால் பாடும் பெருமைக்கு உரியவராக விளங்கிய இவர் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று தனது இசையை வழங்கிய பெருமை நாதோலைக்கு பெருமையைச் சேர்த்துள்ளது. வ.வேலுப்பிள்ளைக் குருக்களும் சித்துள்ளவராக இருந்தார் என மதித்தனர். இவர் 1961 ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். 100வயதுவரை வாழ்ந்தவர். இவரின் மறைவின் பின் சின்னையா அவர்களால் ஆதரிக்கப்பட்டு இவர் 1975 ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். அதன் பின் வ.வேலப்பிள்ளை குருக்களின் பூட்டன் சி.வாமதேவன் ஐயாஅவர்களால் சிறு புனரமைப்பு செய்து 1983 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
பின்பு முழு ஆலயமும் 2001 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு இளவாளை, கருகம்பனை, மயிலங்கூடல், காடிவளை, சித்திரமேழி ஆகிய ஐந்து கிராம அடியவர்களின் விடா முயற்சியால் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம் தரிசன மண்டபம் ஆகியவை நிறைவு பெற்ற ஒரு ஆலயமாக புதுப் பொலிவு பெற்று 2004-06-30 இல் குடமுழுக்கு நடைபெற்றது. அவ்வாலய உள்வீதி சுற்று மதிலால் அமைந்துள்ளது. வெளிவீதிக்கு நாலுபக்கமும் காணிகள் விடப்பட்டுள்ளது. முன்பக்க வீதி போதாமல் இருந்ததால் ஒரு அடியவர்  1 1/2 பரப்பு காணியை வாங்கி அன்பளிப்பு செய்துள்ளார்.
2008-10-09 ஆம்காலப்பகுதியில் ஒரு வைரவர் ஆலயம் ஒரு அடியவரினால் நிர்மானித்து 2008-06-0-17 இல் குடமுழுக்க செய்யப்பட்டது.

2007 ஆம் ஆண்டு 2008 ஆம் ஆண்டு அரசாங்க நன்கொடையும் அடியவர்களின் நன்கொடையாலும் 450000.00 ரூபா செலவில் 45 அடி நீள சுற்று மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் ஒலி பெருக்கி நீர் இறைக்கும் மோட்டர் போன்றவை கொள்வனவு செய்யப்பட்டன. பல்வேறு சிறப்புக்களுடன் அவங்கார உற்சவம் பன்னிரண்டு நாட்கள் இடம் பெற்று வருகின்றன. பங்குனித்திங்கள், குளிர்த்தி, ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், நவராத்திரி, திருவெம்பாவை, மார்கழி சஷ்டி போன்ற தினங்கள் முக்கிய உபயமாக கொண்டாடப்படுகின்றது. அம்பாள் புதுப் பொலிவுடன் அடியவர்களுக்கு அருள்பாலித்த வண்ணம் உள்ளார்.
நன்றி – தகவல்- ஆலயபரிபாலனசபை, நாதோலை, இளவாலை

ஒழுங்கமைப்பு – எஸ்.சத்தியசீலன், பிரதேசசெயலகம், சண்டிலிப்பாய்.

தட்டச்சு – கே.சுகதீஸ்-பிரதேசசெயலகம், சண்டிலிப்பாய்.

Sharing is caring!

Add your review

12345