நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் வரலாறு

நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் வரலாறு

நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் வரலாறு. ஈழத்திருநாட்டின் இருதயமாக விளங்குவது யாழ்ப்பாணம். இப்புண்ணிய பூமியில் இற்றைக்கு இருநூற்றி ஜம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அற்புதமான திருக்கோவில் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில். தமிழர் பண்பாட்டில் முருக வழிபாடு என்பது தனித்துவமானது. மிக நீண்ட வரலாறு கொண்டது. பழம் பெரும் கிராமமாகிய நீர்வேலிக் கிராமம் முற்று முழுதாக முருக வழிபாட்டுக்கு முதன்மை கொடுத்த கிராமம். இக்கிராமத்தில் சைவ சமயத்தவரைத் தவிர்ந்த பிற மதத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை பாரம்பரியமாகக் காணப்பட்டது. அன்னியராட்சிக் காலத்தில்கூட இக்கிராமத்தில் மக்கள் மதம் மாறவில்லை. இக்கிராமத்து பாரம்பரிய வரலாற்றில் முக்கிய அம்சமாக பொது மக்களின் நாமங்கள் கந்தபுராணத்தை மையமாகக் கொண்டே சூட்டப்பட்ட உண்மையை யாவரும் அறிவர். பண்டிதர்கள், பாவலர்கள், கலைஞர்கள், வாழ்ந்த புண்ணிய பூமி நீர்வளம், நிலவளம் நிறைந்த செல்வம் மலிந்த பூமி. இத்திருவூரில் மூர்த்தி தலம் தீர்த்தம் முறையே அமைந்த திருக்கோவில் நீர்வேலி கந்தசுவாமி கோயில்.

வேற்கோட்டம் கந்தன் கோட்டமாய் வளர்ந்தமை

நீர்வேலியில் தாபிதமான வேற்கோட்டத்திலே கிரமமாகப் பூசைகளும் புராணபடனம் முதலாம் பக்தியைப் பெருக்கும் கொடிகாமத்தில் கந்தனுக்கு ஆலயம் எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு கந்தன் விக்கிரகம் உருவாக்கப்பட்டும் அம் முயற்சி நிறைவேறத் தடை நிலவியவேளையில், அங்கு அடியார் இல்லம் ஒன்றின் நெற்குதிரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த விக்கிரத்தை நீர்வேலி அடியார் இருவர் சிறிது பணம் கொடுத்துப் பெற்று நீர்வேலிக்குக் கொண்டு வந்தனர். வேற்கோட்டம் அமைந்திருந்த இடத்திற்கு 300 யார் தொலைவில் ஆலயம் அமைத்து அங்கு முருக விக்கிரத்தினை எழுந்தருளப் பண்ணி முறையாகக் கும்பாவிடேகமும் இயற்றுவித்தனர். வேற்கோட்டத்திலிருந்த வேலாயுதமும் புதிய ஆலயத்தினுள் குடிபுகுந்தது இன்று அருட்தலமாக போற்றப்படும் நீர்வேலி கந்தப்பெருமான் திருக்கோவிலில் உருவான வரலாறு மேற்குறித்தவாறு கூறப்படுகிறது.

ஆலய வளர்ச்சி வரலாறு

1852 இல் கந்தப் பெருமானது விக்கிரம் கொடிகாமத்திலிருந்து கொண்டு வரப்பட்டுக் கோவில் அமைக்கப்பட்டு கந்தையினார் நல்லயினார் என்னும் சகோதரர் இருவரால் பரிபாலிக்கப்பட்டு வந்தது 1896 இல் மூவர் கொண்ட தர்ம கர்த்தாசபையும் 1918 இல் அறுவர் கொண்ட தர்ம கர்த்தாசபையும் பரிபாலனத்தைத் தொடர்ந்தன. 1968இல் புதிய பரிபாலன சபை தோற்றம் பெற்றது. பிரதேச காரியாதிகாரி முன்னிலையில் நிர்வாக யாப்பு தயாரிக்கப்பட்டு பரிபாலனசபை அமைக்கப்பட்டது. இப்பரிபாலன சபை மூன்றாண்டுக்கு ஒரு முறை புதிய அலுவலரைத் தெரிவுசெய்து ஆலயத்தினைச் செவ்வனே பரிபாலித்து வருகின்றது. ஆரம்பத்தில் 10 நாள் மகோற்ஷவமும் 1924 இல் கும்பாபிஷேகமும் நடந்த பின் உற்ஷவநாள்கள் அதிகரிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் ஈசான மூலையில் கந்தனுக்கு கந்த கடம்பவிருஷம் தலவிருஷமாய் அமைந்துள்ளமை சிறப்பு அம்சமாகும்.

நீர்வைக் கந்தன் ஆலய புராணபடன மரபு

வேல் வழிபாடு ஆரம்பித்த காலத்திலேயே புராண படனமரபும் இவ்வாலயத்தில் ஆரம்பமாகி இன்று வரை பேணப்பட்டுவருகிறது. நீர்வேலி கோப்பாயில் திண்ணைப்பள்ளிப் பாரம்பரியத்தில் கற்றவர்கள் இப்புராணபடன பாரம்பரியத்தை பாதுகாத்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் நீர்வேலியில் பலரது வீடுகளில் கந்தபுராண ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. நீர்வைக்கந்தப் பெருமான் ஆலயத்தில் வடமொழி தென்மொழி ஆகம இதிகாசங்கள் பலவற்றையும் ஜயம் திரபுறக் கற்றுணர்ந்த நீர்வேலிச் சங்கரபண்டிதர் போன்ற அறிஞர்கள் 1830ஆம் ஆண்டில் இவ்வாலயத்தில் புராணபடனம் நடாத்தினர் என வரலாறு நூல்கள் கூறுகின்றன. வடகோவையைப் பிறப்பிடமாகவும் நீர்வேலிக்கந்தனின் மீளாஅடியவரும் முப்பாநுற் சர்க்கம், சைவசித்தாந்த பிரகாசிகை போன்ற நூல்களை எழுதியவரும், முதன் முதலாக திருக்குறளுக்கு ஈழநாட்டில் உரை எழுதியவருமான பண்டிதர். ஸ்ரீமான்.வேலுப்பிள்ளை இவ்வாலயத்தில் நீண்டகாலமாக புராணத்திற்கு உரை சொல்லி வந்ததோடு பல பண்டிதர்கள் பாலவர்கள் உருவாவதற்கு வித்திட்டார். நீர்வேலிக்கந்தன் வேட்டைத் திருவிழாவிக்கு வட கோப்பாய் இலுப்பையடிப்பிள்ளையார் திருக்கோவிலுக்குச் சென்று திரும்புகையில் முதலில் பண்டிதரின் எல்லை மானப்பந்தலில் முருகப்பெருமான் இளைப்பாறும் மரபு நீடித்தது. இன்றுவரை இவ்வாலயத்தில் கந்தபுராணப்படிப்பு நடைபெற்று அன்னதானம் கொடுக்கப்பட்டு பௌராணிகர் கௌரவிக்கும் மரபு தொடர்கிறது. சுமார் 60 ஆண்டுகளாக இப்புராணப்படிப்பில் பங்கு கொண்ட பெருமை இவ்வாலய பிரதமகுருவாக விளங்கிய சிவஸ்ரீ. சுவாமிநாத இராஜேந்திரக்குருக்களைச் சாரும். மேலும் இவ்வாலய புராணப்படிப்பில் பங்குபற்றியவர்களில் பண்டிதர் நீ. சி. முருகேசு, பண்டிதர் வேலுப்பிள்ளை, தம்பையா போன்றவர்கள் 1980வரை உரை சொல்லும் வல்லுனர்களாக விளங்கினர். நீண்டகாலமாக உரை சொல்வதில் சிவஸ்ரீ. இராஜேந்திரக்குருக்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

நீர்வைக் கந்தன் ஆலய திருவிழாச்சிறப்பு

இவ்வாலயத்தில் சைவ ஆகமநெறி முறைக்கமைய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொடியேற்று உற்ஷவம் முதல் பூங்காவை உற்ஷவம் வரை இருபத்தைந்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இவ்வாலயத்தில் விடிய விடிய நடைப்பெற்ற திருவிழாச் சிறப்பை மூத்தோர்கள் இன்றும் நினைவில் வைத்து எடுத்துரைப்பர். குறிப்பாக பல ஊர் மக்கள் ஆயிரக்கணக்கில் நீர்வைக் கந்தன் திருவிழாப் பார்ப்பதற்கு கால்நடையாகவும், வண்டில்களிலும் குடும்பம் குடும்பமாக வந்து காத்திருந்து வழிபாடு செய்வர்.

நீர்வைக் கந்தன் தீர்த்த மாடிய நறுவத்தாழ் குளம்

கந்தப்பெருமான் தீர்த்தமாடுவதற்கு தெருவைக்கடந்து வயலுக்குள் முன்னோர்களால் அமைக்கப்பட்ட மாடிய நறுவத்தாழ் குளம் சென்று தீர்த்தமாடும் வழக்கம் நீண்டகாலமாக நிலவியது. இக்குளத்திற்கு அருகில் மடம் இளைப்பாற்று மண்டபம் யாவும் முன்பு அமைக்கப்பட்டு இருந்தது. இத்தீர்த்தக்குளம் அந்தியேட்டிக் கிரிகைக்கும் கோவில் பிரதான அடியவர்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் குழத்தின் சூழல் மாசடைந்தமையால் கடந்த 30 வருடங்களாக ஆலய முன்றலில் அமைந்த தீர்த்தக்கேணியில் தீர்த்தத் திருவிழா நடைபெறுகிறது. கோவிலுக்குரிய சில தாமரைக்குளம் நீர்வைத் தரவையிலுண்டு. பிதிர்மோட்சத்துக்காக சில குளங்கள் கட்டப்பட்டுள்ளன. பூசைவேளையில் முன்பு தாமரைப்பூவே கூடுதலாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் கோவில் குளத்திலிருந்து பூ வந்து சேரும்.

ஆலய மணிக்கோபுரம்

நீர்வைக் கந்தனின் அருள்சிறப்பை வெளிப்படுத்தும் மணி ஒசையை கேட்டு வியக்காதவர்களில்லை. பல ஊர் மக்களையும் அதிகாலை விழிப்படையச் செய்யும் பெரிய மணி இங்கிலாந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. நேர்த்திக்காக அடியவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இக்கோவில் மணி அமைக்கப்பட்டபின் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையாருக்கு இலண்டன் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆலயத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான வாகனங்கள்

எந்தக் கோவிலிலும் காணமுடியாத மிகப்பெரிய மயில் வாகனம் கடாய் வாகனம் போன்ற பல வாகனங்கள் இவ்வாலயத்தில் உண்டு உயிரோட்டமான நிலையில் அன்று இவை அமைக்கப்பட்டன. நீர்வேலி ஆசாரியார்களாலும், மயிலிட்டி சிற்பாசாரிகள், இந்தியகலைஞர்கள் பலரது கைவண்ணத்தில் இவ்வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிக பிரமாண்டமான சூரன் இவ்வாலயத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கொம்புகள் விசித்திரமானவை. மிகத்தைரியசாலிகளால் தான் இவை தூக்க முடியும். இவ்வாலய வாகனங்களைப் பார்த்தே ஆனைக்கோட்டை மூர்த்தனார் கோவிலில் வாகனங்கள் உருவாக்கப்பட்டதாக கூறுவர். யாழ்ப்பாணத்தில் பட்டத்துச்சிவன் கோவிலும், தொல்புரம் வழக்கம்பராய் அம்மன் கோவிலிலும் நீர்வேலி கந்தன் கோவிலிலும் மிகத்தொன்மையான வாகனங்கள் உண்டென கலைஞர்கள் கூறுவர்.

நாகபடப்பந்தலும் திருவிழாக் கூட்டமும்

ஆலய முன்றலில் முழுப்பனைமரம் நட்டு நீளப்பனை வளைகளாலும், மூங்கில், கமுகு மரங்களாலும் உயர்ந்த வாசல் அமைப்பை கொண்ட நாகபாம்பின் தலைவடிவான கொட்டகை அமைத்து அவற்றின் முனைகளுக்கு தாளங்காய், செவ்விழனி தொங்கவிட்டு அமைக்கப்படும். இப்பந்தலில் அழகை ரசிப்பதற்கு எனப் பெருங்கூட்டம் வரும். இப்பந்தல் அமைப்பதற்காக நல்ல நாளில் பந்தல் கால் நாட்டப்படும். ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி இரவு பகலாக பந்தல் வேலையில் ஈடுபடுவர். மிக வயிரமான பனைமரவளை வில்லுப்போல் வளைத்து பந்தல் இருகரையும் வில்லுப்பந்தல் அமைப்பார்கள். இப்பந்தல் கொட்டகையில் திருவிழாக்கென இந்தியாவில் இருந்து வந்த நாதஸ்வர, தவில் வித்துவான்கள் கச்சேரி, சின்னமேளம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இக் கொட்டகையில் அரங்கேறும். இவ்வாலயத்தில் ஒவ்வொரு பூசைவேளையிலும் நாதஸ்வரத்தவில் நிகழ்ச்சி 80 வரை நடைப்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. நீர்வைக் கந்தனுக்கு கலைப்பணி செய்யவந்த சில வித்துவான்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக தங்கியுள்ளனர்.

கந்தப்பெருமான் வேட்டைத் திருவிழா

இத்திருவிழா பக்தி எழிற்சியை ஏற்படுத்துகின்ற வழி என்பர். சோடிக்குதிரை வாகனத்தில் முருகபெருமானை பக்தர்கள் தோள் மேல் சுமந்து பருத்தித்துறை பெரு வீதியை கடந்து முன்னால் வயலில் இறங்கி இரவிரவாக ஆடல் பாடல், பொய்க்கால் குதிரையாட்டம் கரகாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் கோப்பாய் வயல் மத்தியிலுள்ள நாச்சிமார் கோவிலை சென்றடைவார்கள்.  நாச்சிமார் கோவில் இயற்கை மரங்கள் நிறைந்த வனம் போல் காட்சிதரும் தாழைமரங்கள் பாம்புப்புற்றுள் நல்ல பாம்பின் நடமாட்டங்கள் சூழ்ந்த இயற்கைக் கோவில் கட்டடம் எதுவும் இல்லை சிறிய கிணறு மரப்பட்டை மட்டும் காணப்படும். பொழிகல்லில் பொழிந்து எடுக்கப்பட்ட நீர்த்தொட்டி. இவைதான் கோவில் சொத்து. வயலில் மேயும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கும் வயலில் வேலைசெய்யும் விவசாயிகள் ஆறுதல் பெறுவதற்கும் இவ்வாலயம் இறையருளால் இயற்கையாக உருப்பெற்றது. வருடத்தில் ஒரு இரவு நீர்வைக் கந்தனின் வரவோடு இரவு மக்கள் கூட்டம் நிரம்பும். வயலில் பயறு போன்ற தானியங்களையும் கிணற்றடிகளிலுள்ள தென்னைமர இளநீரையும் அடியார்கள் வேட்டை திருவிழாவில் தம் உரிமையாக்கி மகிழ்வர். யாரும் குறைசொல்லாது மகிழ்வர்.

கோப்பாய் இலுப்பையடி வீரகத்தி விநாயகர் ஆலயமும் நீர்வைக் கந்தனும்.

வேட்டைத் திருவிழாவில் இத்திருத்தல வாசலில் அமைக்கப்படும் பந்தலில் முருகப்பெருமானும் பக்தர்களும் இளைப்பாறுவர். இத்திருக்கோவிலில் நீர்வைக்கந்தன் ஆலயத்தோடு ஆதிதொட்டு தொடர்புடைய ஆலயமாகும். நீர்வேலி மக்கள் சித்திரை வருடப்பிறப்பன்று இலுப்பையடி பிள்ளையாருக்குப் பொங்கிப் படைத்தே தம் கருமங்களைத் தொடங்குவர். இரு ஆலயங்களிலும் ஒரே அடியார்கள் தம் குலதெய்வங்களாகக் கொள்ளும் மரபு இன்று வரை தொடர்கிறது.

நீர்வேலி கந்தப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு விழாப் பொலிவு

குறிப்பாக இவ்வாலய மாம்பழத்திருவிழா, மஞ்சரதத்திருவிழா சப்பரத்திருவிழா தேர்த்திருவிழா தீர்த்ததிருவிழா முற்காலத்தில் ஆயிரம் ஆயிரம் மக்கள் கூடி நடந்த பெருவிழாக்கள் எனப்பலரும் குறிப்பிட்டுள்ளனர். நெடுந்தீவிலிருந்து வெள்ளைக்குதிரைகள் படகில் ஏற்றி நீர்வேலித்திருவிழாவில் சுவாமி ஊர்வலப் பவனிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சேர். பொன். இராமநாதன் வருகை

ஆண்டு தோறும் நீர்வைக்கந்தன் ஆலயச்சிறப்புவிழாவுக்கு சேர். பொன். இராமநாதவள்ளலும் அவரது பாரியார் லேடி இராமநாதனும் கலந்து கொண்டு வழிபாடு செய்தமை பற்றி சிறப்பாகவும் பெருமையாகவும் கூறுவர். சேர். பொன். இராமநாதனின் மருகர்.ஸ்ரீமான் சு.நடேசபிள்ளை இறக்கும்வரை இவ்வாலயத்தைத் தரிசித்ததோடு இவ்வாலய சிறப்புப்பற்றிச் சில பாடல்களை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கதாப்பிரசங்கம் சமயச் சொற்பொழிவு

இவ்வாலயத்தில் சங்கரசுப்பையர். திக்கம் செல்லையாபிள்ளை வாகீசகலாநிதி கீ.வா.ஜெகநாதன் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி. மணிபாகவதர் முதலாவது நல்லை ஆதின குருமுதல்வர் போன்ற பெருமக்கள் திருவிழாக் காலங்களில் சமய உரைகளை தொடராக ஆற்றிவந்துள்ளனர். சிவத்தமிழ்ச் செல்வி 1967 ஆம் ஆண்டு ஆற்றிய உரைக்குப்பின் இவ்வாலயத்தில் நடைபெற்ற வானவேடிக்கை சின்னமேளம் போன்ற நிகழ்ச்சிகளை திருவிழா உபகாரர்கள் நிறுத்தத் தொடங்கியதாகக் கூறுவர். இக்காலப்பகுதியில் இவ்வாலயத்தில் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்களின் வில்லிசை சின்னமணி போன்ற கலைஞர்கள் இணைந்து நடாத்தி வந்தனர். நீர்வேலியில் தான் வில்லிசைப் பாரம்பரியம் பெருவளர்ச்சி பெற்றதென இக்கலைபற்றிய ஆய்வில் கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆலயத்திருப்பணி

ஆலயத் திருப்பணிகளில் தேர்த்திருப்பணி முதன்மையானது. 1975 காலப்பகுதியில் ஆரம்பித்த இத்தேர்த்திருப்பணி ஊர்மக்களின் காணிக்கையில் திருநெல்வேலி சிற்பக்கலைஞர். திரு. கந்தசாமி அவர்களின் கைவண்ணத்தில் மிகவும் சிறப்பாக நிறைவேறியது.

கோபுரத்திருப்பணி

2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி நல்லை ஆதின இரண்டாவது குருமகாசன்னிதானம் முன்நிலையில் அடிக்கல் நாட்டல் பெற்று துரிதமாக வேலை நடைபெற்று 2006ஆம் ஆண்டு இராஜ கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது.

By – Shutharsan.S

Sharing is caring!

3 reviews on “நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில் வரலாறு”

  1. முருகப்பெருமானின் கருணை வெள்ளம் எங்கும் நீர்க்கமற் நிறைந்திருக்கவும்,உங்கள் அனைவரின் மனதிலும்,வாழ்விலும் அமைதியும் ,சந்தோஷமும் நிலவ முருகனைப் பிராத்திக்கிறேன்

  2. முருகப்பெருமானின் கருணை வெள்ளம் எங்கும் நீர்க்கமற் நிறைந்திருக்கவும்,உங்கள் அனைவரின் மனதிலும்,வாழ்விலும் அமைதியும் ,சந்தோஷமும் நிலவ முருகனைப் பிராத்திக்கிறேன்

Add your review

12345